Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக மம்தா?! காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் ஆதரிக்குமா?

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பாஜக-வின் மிகப்பெரிய கனவு. "2021 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று ஆட்சியமைப்போம். மம்தா பானர்ஜியை வீட்டுக்கு அனுப்புவோம்" என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசினர். மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், மத்திய அமைச்சர்கள் என பெரும் படையே களமிறங்கியது. ஆனாலும்கூட, மம்தாவை வீழ்த்த முடியவில்லை. மூன்றாவது முறையாக வெற்றிவாகை சூடினார் மம்தா. அதே நேரத்தில், நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் மம்தா தோற்றுப்போனார் என்பதை எளிதாக ஒதுக்கிவிட முடியாது.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்துவிட்டது என்றாலும், பாஜக-வுக்கும் மம்தாவுக்குமான போட்டி தொடர்கிறது. சொல்லப்போனால், முன்பைவிட போட்டி தீவிரமடைந்திருக்கிறது. ஆனால், இப்போது களம் வேறு. மாநிலத்தில் வன்முறை தாண்டவமாடுகிறது, அதன் பின்னணியில் மம்தாவின் அரசு இருக்கிறது என்று பாஜக குற்றம்சாட்டி வரும் நிலையில், இதைக் காரணமாக வைத்து மம்தாவின் ஆட்சியை மத்திய அரசு கலைத்துவிடுமோ என்ற விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், மாநிலத்தில் ஆட்சியைக் கலைக்கும் முடிவை அவ்வளவு எளிதில் மோடி அரசு எடுத்துவிடாது. ஆகவேதான், தன் கவனத்தை டெல்லிப் பக்கம் திருப்பியிருக்கிறார் மம்தா பானர்ஜி.

“டெல்லி சென்று பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்திப்பேன்” என்று கொல்கத்தாவில் ஒரு வாரத்துக்கு முன்பு முழங்கிய மம்தா பானர்ஜி, தற்போது டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். மூன்றாவது முறையாக முதல்வரான பிறகு அவரது முதல் டெல்லி பயணம் இது. தற்போதைய அரசியல் சூழலில், மம்தாவின் டெல்லி பயணம் தலைநகர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கமல்நாத், ஆனந்த் சர்மா, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்களை அவர் சந்தித்துள்ளார்.

சோனியா, மம்தா

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்கு முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. ஒரு மாதத்துக்கு முன்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் இல்லத்தில் சில எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடியது பரபரப்பை ஏற்படுத்தியது. சரத் பவார் அழைப்பின் பேரில் 8 கட்சிகளின் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பிறகு, அது கூட்டணி உருவாக்குவதற்கான கூட்டமல்ல என்றும், அது ஒரு ‘கெட் டு கெதர்’தான் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், மம்தாவின் தற்போதைய டெல்லி பயணத்தின் நோக்கம் வெளிப்படையானது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிரான அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் மம்தா இறங்கியிருக்கிறார். மம்தா தலைமையில் எதிர்க் கட்சிகளின் கூட்டணி அமையுமா என்று விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், என்னுடைய தலைமையில்தான் கூட்டணி என்று மம்தா அறிவிக்கவில்லை. காங்கிரஸைப் பொறுத்தளவில், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுபோக, மாயாவதி, சரத்பவார் உள்பட பிரதமர் கனவுடன் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சிக்கலை நன்கு உணர்ந்திருப்பதால்தான், “எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் எண்ணம் எனக்கு இல்லை. தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிராக அமையும் எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை வகித்தாலும் அதை ஏற்கத் தயார். அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று மம்தா கூறியிருக்கிறார். அதே நேரத்தில், “அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்கிற பொடியையும் போகிற போக்கில் தூவியிருக்கிறார் மம்தா.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையில் ஆட்சியமைத்த பாஜக, இரண்டாவது முறையாக 2019 தேர்தலிலும் வெற்றியைப் பெற்றது. செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர்கள் யார் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில், தற்போதும் பிரதமர் மோடி பிரபலமான தலைவராக விளங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. 32.8 சதவிகித ஆதரவுடன் பிரதமர் மோடி முதல் இடத்திலும் 17.2 சதவிகித ஆதரவுடன் ராகுல் காந்தி இரண்டாம் இடத்திலும் 7 சதவிகித ஆதரவுடன் மம்தா மூன்றாம் இடத்திலும் இருப்பதாக ‘பிரஷ்னம்’ ஆய்வு கூறுகிறது.

மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பிற எதிர்க் கட்சிகள் அனைத்தும் உறுதியாக இருக்கின்றன. எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் வலுவான ஓர் அணியை கட்டமைக்க முடியும். ஆனால், அப்படியொரு அணியை அமைப்பது சாத்தியமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

கம்யூனிஸ்ட் கட்சியினர்

எதிர்க் கட்சிகளின் தலைவர்களை மம்தா சந்தித்துப் பேசலாம். ஆனால், அவரது முயற்சிக்கு எத்தனை கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கும்? இடதுசாரிகள் ஒத்துழைப்பார்களா? 2011 வரை மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த இடதுசாரிகளை, ஒரு எம்.எல்.ஏ கூட வெற்றிபெற முடியாத அளவுக்கு கொண்டுவந்தது மம்தா பானர்ஜிதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளையும் காங்கிரஸ் கட்சியையும் மேற்கு வங்கத்தில் வீழ்த்தியவர் மம்தா பானர்ஜி. அதன் மூலம் அந்த மாநிலத்தில் பாஜக-வை மிகப்பெரிய கட்சியாக வளர்வதற்கு அத்தனை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்தவர் மம்தா பானர்ஜி. இது மம்தாவின் மிகப்பெரிய அரசியல் தவறாகப் பார்க்கப்படுகிறது.

Also Read: கருணாநிதிக்கு பரிசு; ஜெயலலிதாவுடன் கன்னட உரையாடல்; 13 ஆண்டுகளில் முதல்வர் -யார் இந்த பசவராஜ் பொம்மை?

மேற்கு வங்கத்தில் பாஜக-வைத் தோற்கடிக்க வேண்டுமென்றால், மம்தாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று இடதுசாரி ஆதரவு அறிவுஜீவிகள் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைமைக்கு வேண்டுகோள் வைத்தன. ஆனால், அந்த வேண்டுகோளை இடதுசாரிகள் ஏற்கவில்லை. மம்தாவுடன் ஒருபோதும் கூட்டணி சேர முடியாது என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்தனர். சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பிறகும், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெற்றன. ஆகவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தாவை இடதுசாரிகள் ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

மம்தா

இவை எல்லாவற்றையும் பா.ஜ.க-வில் இருக்கும் சாணக்கியர்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவேதான், “2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்கட்டும். மம்தாவின் பெயரை ராகுல் காந்தி வழிமொழியட்டும். மாயாவதியும் மம்தா பெயரை வழிமொழியட்டும்” என்று பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளரான சாம்பித் பாத்ரா ‘உற்சாகமாக’ சவால்விடுகிறார். உண்மையிலேயே மம்தாவுக்கு அது மிகப்பெரிய சவால்தான்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-congress-and-communist-parties-accept-mamta-banerjee-as-a-prime-minister-candidate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக