Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

Covid Questions: காசநோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறேன்; நான் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

நான் கடந்த ஐந்து மாதங்களாக டிபி நோய்க்கு மாத்திரை எடுத்து வருகிறேன். இன்னும் 4 மாதங்களுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- காயத்ரி (விகடன் இணையத்திலிருந்து)

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.

``பொதுவாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள்வரை காசநோய்க்குச் சிகிச்சை கொடுப்பார்கள். இரண்டு, மூன்று மருந்துகளைச் சேர்த்துக் கொடுப்பார்கள். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். நீங்கள் தாராளமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

Also Read: இந்தியாவில் கொரோனவைவிடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம்... ஓர் அலெர்ட்!

காசநோய்க்கான சிகிச்சையில் மட்டுமல்ல, இதயநோய், நீரிழிவு என எந்த நோய்க்கான சிகிச்சையில் இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பிரச்னைகள் எவையும் அதற்குத் தடையில்லை.

சிலர் புற்றுநோய்க்கான தீவிர சிகிச்சையில் இருப்பார்கள். அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் இம்யூனோசப்ரசென்ட் வகை மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள். கீமோதெரபி சிகிச்சையில் இருப்பார்கள். அவர்கள்கூட கோவிட் தடுப்பூசியைத் தவிர்க்க வேண்டாம், போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

COVID-19 vaccine

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா?

நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், தடுப்பூசி நம் உடலில் உருவாக்கும் ஆன்டிபாடிக்களின் அளவு கொஞ்சம் குறையலாம். தடுப்பூசியின் செயல்திறன் சற்றுக் குறையலாம். அதாவது, 100 சதவிகிதம் செயல்திறனைக் கொடுப்பதற்குப் பதில் 70 சதவிகிதம் செயல்திறனைக் கொடுக்கலாம். ஆனாலும், தடுப்பூசியின் செயல்திறன் அறவே குறைவதில்லை என்பதால் அதுதான் உங்களைத் தொற்றிலிருந்து காக்கும் ஆயுதம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/a-person-who-takes-medicines-for-tb-can-take-covid-vaccine-doctor-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக