Ad

புதன், 28 ஜூலை, 2021

`கோயில் நகைகள் மூலம் வருவாய் ஈட்ட தமிழக அரசு முடிவு’: சாதக, பாதகங்கள் என்னென்ன?

``கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த 2,000 கிலோ தங்கம் பயனின்றி இருக்கிறது. அவற்றை வைப்புநிதியாக வைத்து, அதில் வரும் வட்டியைக்கொண்டு கோயில் சீரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு முறையாகக் கும்பாபிஷேகம் நடத்துவதற்காகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 180 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து மலைக்கோயில்களில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும். திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய ஐந்து முக்கியக் கோயில்களில் ரோப் கார் வசதியைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோயில்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து வசதிகளை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 47 கோயில்கள் மட்டுமே பிரசித்திபெற்ற கோயில்களாக இருந்தன. ஆனால், தற்போது 539 கோயில்கள் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா, சிங்கப்பூரிலுள்ள மூன்று சிலைகளை விரைவில் தமிழ்நாடு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் சேகர் பாபு

தமிழ்நாடு கோயில்களின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, குடமுழுக்குகள் நடத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தி.மு.க அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு சுகாதாரத்துறை அளவுக்கு அதிக பரபரப்பாக இருந்தது இந்து சமய அறநிலையத்துறைதான். கோயில் நகைகள் மூலம் வருவாய் ஈட்டும் அதன் அடுத்த முயற்சியில் இருக்கும் சாதக, பாதகங்கள் என்னென்ன?

Also Read: ஸ்ரீரங்கம் கோயில்: `330 ஏக்கர் இருந்தது, இப்போ 24 ஏக்கர் மட்டுமே இருக்கிறது!' - அமைச்சர் சேகர் பாபு

தி.மு.க செய்தித் தொடர்பாளர் கண்ணதாசனிடம் பேசினோம். ``கோயில் சொத்துகள் ஒரு காலத்தில் அந்தக் கோயில் மற்றும் அதைச் சார்ந்துள்ள ஊர் மக்களுக்குப் பயன்படுவதற்காகக் கொடுக்கப்பட்டவைதான். ஆனால், காலப்போக்கில் கோயில் சொத்துகளைக் கையகப்படுத்தி சொந்த இடமாக ஆக்கிக்கொண்டதால், கோயில்களுக்கான வருமானம் நின்று போனதோடு, தனிநபர்கள் அதிக லாபம் பார்த்து சுக வாழ்வு வாழ்ந்துவந்தார்கள். காலகாலமாக இருக்கும் இந்த நிலைமையைச் சரிசெய்ய தி.மு.க முயன்றுவந்தது. அதற்கு, தற்போது அமைச்சர் சேகர் பாபு செயல் வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் கோயில் நகைகள் மூலம் வருமானம் ஈட்ட எடுக்கப்பட்டுள்ள முயற்சி. இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கோயில்களைச் சீரமைப்பதோடு மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும். ஏனெனில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு கோயிலைச் சார்ந்தும் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. அதுமட்டுமல்ல, உண்டியல் மற்றும் இதர காணிக்கைகள் மூலம் ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. இவற்றை நெறிப்படுத்தினால் தற்போது தமிழ்நாட்டிலிருக்கும் நிதிச் சுமையைச் சரிசெய்ய முடிவதோடு அந்தக் கோயில்கள் அமைந்துள்ள பகுதி மக்களின் மருத்துவம் மற்றும் கல்விப் பணிகளுக்கு அந்தத் தொகை பயன்படுத்தப்படும். அதுமட்டுமல்ல, ஒரு கால பூஜைகூட நடத்த முடியாமல் பல கோயில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றுக்கும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம். தமிழ்நாட்டின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இருக்கும் கோயில்களின் சொத்துகளை அ.தி.மு.க அரசு இதுவரை முறையாகப் பயன்படுத்தாமல் அதிலும் பல்வேறு ஊழல்களைச் செய்திருக்கிறது.

கண்ணதாசன், தி.மு.க செய்தித் தொடர்பாளர்

கோயில் சொத்துகள் அரசின் நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கு உணவளிக்கும் அன்னதானம் உள்ளிட்டவற்ற்றுக்கும் பயன்படுத்த முடியும். அரசுக்கும் பொருளாதாரரீதியில் மிகப்பெரிய சப்போர்ட் கிடைக்கும். கோயில் சொத்துகளைத் தங்கள் தேவைக்குப் பயன்படுத்த முடியாது என்பதால், சிலருக்கு வேண்டுமானால் இது பாதகமாக இருக்குமே தவிர அரசுக்கு இது சாதகமாகத்தான் அமையும்” எனக் கோயில் சொத்துகள் மூலம் வரும் வருவாய் அரசுக்குச் சாதகம் என்பதை விவரித்தார்.

பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதியிடம் பேசினோம். ``கோயிலின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள, கடவுளுக்காக எழுதிவைத்த, சொத்துகளிலிருந்து வரும் வருமானம் கோயில்களுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அதில் அரசு தலையிடவே கூடாது. அதில் தலையிடுவதற்கு அரசுக்கு தார்மிக உரிமையும் இல்லை. அந்த வருமானத்தைக் குடமுழுக்கு நடத்துவது, பெரிய கோயில் வருமானம் என்றால் அதைச் சார்ந்திருக்கும் சிறு சிறு கோயில்களின் பூஜை, விழாக்களுக்குப்பயன்படுத்துவது, கோயில் தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்துவது என்று மட்டும்தான் இருக்க வேண்டுமே தவிர அதை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டு செய்யவே கூடாது. சிதிலமடைந்துள்ள கோயில்களைச் சீரமைக்க, பெரிய கோயில்களைப் பராமரிக்க மட்டுமே அந்த வருமானத்தைப் பயன்படுத்த வேண்டும். கோயில் வருமானத்தைச் செலவு செய்ய அரசுக்கு உரிமையே இல்லை. அதிகாரத்தைப் பயன்படுத்தி கோயில்கள் மீது அவர்களாகவே உரிமைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் தி.மு.க-வால் இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களின் ஆலய வருமானங்களை அரசு தங்களின் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா... இந்து கோயில்களில் மட்டும்தான் அரசாங்கம் தங்கள் உரிமையை நிலை நாட்ட முயற்சி செய்ய வேண்டுமா?

பேராசிரியர் கனகசபாபதி, தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர்

கோயில் வருமானத்தைக் கோயில்களுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் நியாயம். அதற்காகத்தானே கோயில்களுக்கான நிலங்கள், சொத்துகள் இருக்கின்றன. கோயிலுக்காக ஒதுக்கப்பட்ட சொத்துகள் மற்றும் காணிக்கைகளின் நோக்கம் நிறைவேறும். மக்களின் நம்பிக்கையும் காப்பாற்றப்படும்” எனக் கோயில் வருமானத்தை அரசு பயன்படுத்துவதில் இருக்கும் பாதகங்களை எடுத்துக் கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/government-of-tamil-nadu-decides-to-earn-revenue-through-temple-jewellery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக