தமிழ்நாட்டிலிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் (Departments), பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges), அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் (Govt, and Govt. Aided Engineering Colleges) மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் (Self Financing Engineering Colleges) இடம் பெற்றிருக்கும் இளநிலைப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளில் (B.E/B.Tech) 2021- 2022 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2021 அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கல்வித் தகுதி
தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இடம் பெற்றிருக்கும் பி.இ., பி.டெக் ஆகிய இளநிலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு 10+2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடைய படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் (PCM) பாடங்களில் எடுத்த மதிப்பெண்களும், பொறியியல் தொழிற்கல்விப் பாடப்பிரிவில் பயின்றவர்களுக்கு தொழிற்கல்வி கருத்தியல் மற்றும் செயல்முறைப் பாடங்களுடன் தொடர்புப் பாடங்களாக இருக்கும் கணிதம், இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களில் எடுக்கப்பெற்ற மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இப்பாடங்களில் பொதுப்பிரிவினர் - 45%, பிசி/எம்பிசி/டிஎன்சி – 40%, எஸ்சி/எஸ்டி பிரிவினர் – 40% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறையினைப் பின்பற்றி ஓசி – 31%, பிசி – 26.50%, பிசி (முஸ்லீம்) – 3.50%, எம்பிசி (வன்னியர்) – 10.50%, எம்பிசி மற்றும் டிஎன்சி – 7%, எம்பிசி – 2.50%, எஸ்சி – 15%, எஸ்சி (அருந்ததியர்) – 3.00%, எஸ்டி – 1% எனும் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
எஸ்டி வகுப்பினர்களில் சென்னையிலிருப்பவர்கள் மட்டும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடமும், பிற மாவட்டங்களில் துணை ஆட்சியர் / வருவாய் மண்டல அலுவலர் அவர்களிடமும் சாதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி (அருந்ததியர்) பிரிவினர் வட்டாட்சியர் அவர்களிடமும், பிசி, பிசி (முஸ்லீம்), எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவினர் தலைமையிடத் துணை வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர் (சான்றிதழ்கள்) அவர்களிடமும் சாதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள்
முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டுப் பிரிவில் சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு என்று சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் 8 இடங்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 34 இடங்கள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 108 இடங்கள் என்று மொத்தம் 150 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினரில் ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் 1% இடங்கள் வீதம் 5% இடங்களும், விளையாட்டுப் பிரிவில் சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத் துறைகளில் 12 இடங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் 488 இடங்கள் என்று மொத்தம் 500 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.
விண்ணப்பப் பதிவு
தமிழ்நாடு பொறியியல் படிப்புச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tneaonline.org/ எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் மட்டுமே விண்ணப்பத்தைப் பதிவு செய்ய முடியும். இணைய வழி விண்ணப்பமானது, விண்ணப்பப் பதிவாகவும், இணையவழிக் கலந்தாய்வு சேர்க்கைக்கும் சேர்ந்ததாக இருக்கும். விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல், விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைப் பதிவு செய்தல், தற்காலிக இடஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல், முடிவு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு ஆணையை பெறுதல் என அனைத்தும் இணைய வழியாகவே நடத்தப்படவிருக்கிறது.
விண்ணப்பப் பதிவுக்கான தேவைகள்
விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் போது, தங்களது அல்லது பெற்றோரது அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, இணைய வழியில் பணம் செலுத்துவதற்கான கடன் அட்டை/பற்று அட்டை அல்லது இணைய வழியில் பணம் செலுத்துவதற்கான பிற வசதிகள் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இணையம் வழியாகப் பணம் செலுத்த முடியாதவர்கள் “THE SECRETARY, TNEA” எனும் பெயரில் CHENNAI – 25 எனுமிடத்தில் மாற்றிக் கொள்ளக்கூடியதாக வரைவோலையினைப் பெற்று வைத்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ 500/-, தமிழ்நாட்டிலுள்ள எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.250/- என்று விண்ணப்பப் பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு சிறப்புப் பிரிவிற்கும் ரூ100/- கூடுதலாகச் செலுத்திட வேண்டும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதே போன்று விண்ணப்பப் பதிவிற்குத் தேவையான விண்ணப்பிப்பவரது ஒளிப்படம், கல்வி, சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள் போன்றவைகளையும் வைத்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் விளையாட்டுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் அதற்குரிய சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும். இதே போன்று, முதல் பட்டதாரி கல்வி கட்டணச் சலுகை, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய எஸ்சி, எஸ்சிஏ பிரிவினருக்கான உயர்கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள், அதற்கான சான்றிதழ்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு கட் ஆப்
விண்ணப்பத்தில் தாங்கள் விரும்பும் கல்லூரியினைத் தேர்வு செய்து கொள்வதற்கு வசதியாக, கடந்த ஆண்டில் ஒவ்வொரு கல்லூரிக்கும், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளின் வாரியாக மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்கள் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த கட் ஆப் மதிப்பெண்களைக் கொண்டு மாணவர்கள், தாங்கள் பெற்ற மதிப்பெண்களுக்குத் தாங்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்குமா? என்பதை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்.
விண்ணப்பப் பதிவினை வீட்டிலிருந்தோ, இணையச் சேவை மையங்கள் வழியாகவோ செய்து கொள்ளலாம். இணைய வசதி கிடைக்காதவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் வழியாக இலவசமாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் பதிவு செய்யக் கடைசி நாள்: 24-8-2021.
Also Read: மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு விரிவான வழிகாட்டல்!
உதவி மையங்கள்
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக, சென்னை மண்டலத்தில், சென்னையில் 5 இடங்கள், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் தலா 1 வீதம் மொத்தம் 7 மையங்கள், வேலூர் மண்டலத்தில் திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு தலா 2 மையங்கள் இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்குத் தலா 1 மையம் வீதம் மொத்தம் 8 மையங்கள், சேலம் மண்டலத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மாவட்டங்களுக்குத் தலா 1 மையம் வீதம் 7 மையங்கள், கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயம்புத்தூர் – 3, ஈரோடு – 2, திருப்பூர், கரூர், நீலகிரி மாவட்டங்களுக்குத் தலா 1 மையம் வீதம் 8 மையங்கள், காரைக்குடி மண்டலத்தில் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் – 2, நாகப்பட்டினம், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்குத் தலா 1 மையம் வீதம் மொத்தம் 10 மையங்கள், போடி மண்டலத்தில் மதுரை – 2, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்குத் தலா 1 மையம் வீதம் மொத்தம் 6 மையங்கள், திருநெல்வேலி மண்டலத்தில் திருநெல்வேலி – 2, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்குத் தலா 1 மையம் வீதம் மொத்தம் 4 மையங்கள் என்று தமிழ்நாட்டில் 7 மண்டலங்களில் மொத்தம் 50 என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு
பொறியியல் படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் நிறைவு பெற்ற பின்பு, 25-8-2021 அன்று சமவாய்ப்பு எண்ணும், 4-9-2021 அன்று தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்படும். அதன் பிறகு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் விளையாட்டுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவிற்கான கலந்தாய்வு 7-9-2021 அன்று தொடங்கி 11-9-2021 வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான முதற்கட்டக் கலந்தாய்வு 14-9-2021 முதல் 4-10-2021 வரை நடைபெறும். அதன் பிறகு, துணைக் கலந்தாய்வு 12-10-2021 முதல் 16-10-2021 வரை நடைபெறும். எஸ்சிஏ மற்றும் எஸ்சி பிரிவினருக்கான கலந்தாய்வு 18-10-2021 முதல் 20-10-2021 வரை நடைபெறும்.
Also Read: கணித அறிவியல் படிப்புக்குச் சென்னைக் கணித நிறுவனத்தில் விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!
இணைய வழியில் நடைபெறும் இக்கலந்தாய்வில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவினைத் தேர்வு செய்யலாம். கலந்தாய்வில் பங்கேற்கும் போது பொதுப்பிரிவினர் ரூ.5000/- எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.1000/- என்று முன்பதிவுக் கட்டணமாகச் செலுத்திடத் தயாராக இருக்க வேண்டும். விரும்பிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவினைத் தேர்வு செய்து, இணைய வழியிலேயேச் பொறியியல் கல்விச் சேர்க்கைக்கான ஆணையினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இணைய வசதி கிடைக்காதவர்கள் பொறியியல் சேர்க்கை உதவி மையங்களுக்குச் சென்று கலந்தாய்வில் கலந்து கொண்டு, விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினைத் தேர்வு செய்து மாணவர் சேர்க்கை ஆணையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதன் பிறகு, தேர்வு செய்து, ஆணை பெற்ற கல்லூரிக்கு ஆணையில் குறிப்பிடப்பட்ட நாளுக்குள் சென்று உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, கல்லூரிக்கான கல்வி மற்றும் இதர கட்டணங்களைச் செலுத்திப் பொறியியல் படிப்பினைத் தொடங்கலாம். அக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ வகுப்புகள் தொடங்கும்.
கூடுதல் தகவல்கள்
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை குறித்து மேலும் கூடுதல் தகவல்களை அறிய, https://www.tneaonline.org/ அல்லது https://www.tndte.gov.in/ ஆகிய இணையதளங்களில் இடம் பெற்றிருக்கும் மாணவர்களுக்கான தகவல்கள் மற்றும் வழிமுறைகள் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் அல்லது “Directorate of Technical Education (DoTE), 53, Sardar Patel Road, Guindy, Chennai - 600 025” எனும் முகவரியிலுள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தெரிந்து கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் 0462-2912081, 82, 83, 84 & 85 அல்லது 044-22351014, 044-22351015 எனும் எண்களில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.
source https://www.vikatan.com/news/education/how-to-apply-for-the-be-and-btech-engineering-courses-online
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக