Ad

சனி, 31 ஜூலை, 2021

ஆடி அம்மன் தரிசனம் - மேல்மலையனூர்: அந்தரியே சுந்தரியே ஆபத்தில் காத்தருளும் அங்காள ஈஸ்வரியே!

ஈசனின் ஒரு பாகமான அன்னை சக்தி மண்ணுலகில் முதன்முதலில் வந்திறங்கிய திருத்தலம் மேல்மலையனூர். அதனால் சக்தியைத் தொழுவாருக்கு அதுவே தாய் வீடு. தமிழகமெங்கும் உடுக்கை, பம்பை, சிலம்பு வாசிப்பவர்கள், சக்தி கரகம் எடுப்பவர்கள், கங்கா-காளி நாட்டியம் ஆடுவோர் எல்லோருக்கும் இதுவே முதன்மை கோயில் என்பதால் இங்கு நிகழ்ச்சி நடத்த அவர்கள் பணம் வாங்குவதே இல்லை என்பதுவே இந்த கோயிலின் சிறப்பு.
அங்காளி

ஆடி மாதத்தில் மேல்மலையனூர் எல்லைக்குள் கூட நுழைய முடியாது, அத்தனை மக்கள் கூட்டமும் மயங்கிக் கிடக்கும் சக்தி குடி கொண்ட ஆதார தலம் இது. பிரமனின் தலையைக் கொய்த ஈசன், கபாலம் ஏந்திய கபாலி ஆனார். எத்தனை பிக்ஷை ஏற்றாலும் நிறையாத கபாலமாக அது இருந்தது. சரஸ்வதியின் சாபத்தால் அன்னை சக்தியும் கொக்கு, குருவி சிறகுகளால் ஆன, உடை உடுத்தி மயானம் காக்கும் சுடலை பிச்சியாக அங்காள அம்மனாக மலையனூருக்கு வந்தாள். ஒருமுறை ஈசன் அங்காள அம்மனை நாடி வந்து பிக்ஷை கேட்க, ஆங்கார ஆவேசம் கொண்ட அங்காளி தயிர் அன்னத்தை மண்ணில் பிக்ஷையிட்டார். அதை உண்ண மண்ணுக்கு இறங்கிய கபாலத்தை காலால் நசுக்கி அழித்தாள் அங்காளி. சிவனின் சாபமும் நீங்கியது. அன்னையும் சாந்தமானாள்; அன்னபூரணி என்ற திருநாமமும் கொண்டாள். இங்கே எண்திசைக்கும் அரசியாக வீற்றிருந்து மண்ணுலகைக் காக்கும் மாதாவானாள் என்கிறது கோயில் புராணம்.

மேல்மலையனூர்
கண்டாலே உணர்ச்சி மீறி அருள் வந்து ஆட வைக்கும் திருக்கோலம் கொண்டவள் அங்காள அம்மன். சுயம்புவாக புற்று மண்ணால் உருவானவள் அங்காளி. நான்கு திருக்கரங்களுடன், இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்ட யோக வடிவில், பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி எழுந்தருளி காத்து வருகிறாள் அங்காளி.

Also Read: ஆடி அம்மன் தரிசனம்: கேட்டதையெல்லாம் கொடுப்பாள் கோட்டை மாரி - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்!

இவளுக்கு அருகிலேயே பெரிய புற்றும் எழுந்தருளி உள்ளது. இதனால் இவள் 'புத்துமாரி', 'வன்மீக காளி' என்றெல்லாம் வணங்கப்படுகிறாள். கோயிலுக்கு வெளியே படுத்த நிலையில் பெரியாயி வணங்கப்படுகிறாள். இவள் நிறை சூலியான பெண்களுக்கு காவல் தெய்வமாக இருக்கிறாள்.

மயானக் கொள்ளை

தீய சக்திகளால் அச்சம் கொண்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், நோய்நொடிகளால் அவதிப்படுவோர், கடன் தொல்லையால் கலங்குபவர்கள் என எல்லாவித மக்களும் இங்கு நம்பிக்கையோடு வந்து அங்காளியை சரண் அடைந்து அருள் பெற்று செல்கிறார்கள். ஒவ்வொரு மாத அமாவாசையும் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிறும், மகாளய அமாவாசையும், நவராத்திரி, கார்த்திகை தீபம், தைப் பொங்கல் போன்ற நாள்களும் இங்கு விசேஷமானவை. மகா சிவராத்திரியிலிருந்து 13 நாள்கள் இங்கு நடைபெறும் மயானக் கொள்ளை விழா பெரும் விசேஷம் எனலாம். காண்பவர்கள் உணர்ச்சிவசப்படும் அற்புத கொண்டாட்டம் அது.

மயானக் கொள்ளை வைபவத்தில் காய், கனிகள், சுண்டல், கொழுக்கட்டைகள், கீரைகள், சில்லரை ரூபாய்கள், தானியங்கள் என தங்களால் இயன்ற காணிக்கைகளை பக்தர்கள் அம்மனை நோக்கி சூறையிட்டு வணங்குவார்கள். இதனால் விளைச்சல் பெருகும், தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நள்ளிரவில் மயானத்தில் நடைபெறும் அங்காளியின் மயானச் சூறைக்குப் பிறகு சாம்பல் வடிவிலான அசுரனை அழித்தப் பிறகு, அந்த சுடுகாட்டுச் சாம்பலை பக்தர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். இந்த சுடுகாட்டுச் சாம்பலை வாசலில் கட்டிவைத்தால் தீய சக்திகள் அணுகாது என்பதும் நம்பிக்கை. பிரமாண்டத் தேரில் அங்காளம்மன் பவனி வரும் திருக்காட்சி உணர்ச்சியைத் தூண்டி பக்தர்களை வாய் விட்டு அழவைக்கும் என்பார்கள்.

அங்காள அம்மன்

Also Read: ஆடி மாத அம்மன் தரிசனம்: பெரிய பாளையத்து பவானி - அண்டியோரைக் காக்கும் ஆயன் சோதரி!

3 அமாவாசை இந்த கோயிலுக்கு வந்து ‘ஊஞ்சல் உற்சவம்’ கண்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும், திருமண வரன் சரியாக அமையாதவர்களுக்கு தகுந்த வரன் கிட்டும் என்பது நம்பிக்கை. புற்று மண்ணை நீரில் கலந்து தரும் தீர்த்தப் பிரசாதம் வெம்மை நோய்களை தீர்க்கும். அண்டசராசரங்களையும் காத்து நிற்கும் அங்காள அம்மன், வடதமிழ் நாட்டு மக்களின் தொன்றுதொட்ட பழைமையான தெய்வமாக விளங்கி வருகிறாள். தீமைகளை அழிக்கும் துடியான சக்தியாக விளங்கி வருகிறாள். ஆபத்தில் உதவும் தாயாகவும், அநீதியை தட்டி கேட்கும் நீதிபதியாகவும் இவள் எளிய மக்களுக்கு இருந்து வருகிறாள். இவளை வேண்டிக்கொண்டால் எல்லாம் நல்லவிதமாக முடியும் என்பது லட்சோப லட்ச மக்களின் நம்பிக்கை. நம்பிக்கையை விதைக்கும் இந்த தயாபாரியை நீங்களும் ஆடியில் சென்று தரிசித்து வாருங்கள். நலமே அளிப்பாள்; நல்லருள் புரிவாள்!

"திருவிளக்கின் ஒளியினிலே தீர்ப்பு சொல்லும் அங்காளி,

மாவிளக்கின் ஒளியினிலே மறுவார்த்தை சொல்வாளே.

மக்கள் குறை தீர்த்திடுவாள், மாங்கல்யம் காத்திடுவாள்

அங்காளி துணையிருக்க ஆன குறை ஏதும் உண்டோ!"



source https://www.vikatan.com/spiritual/temples/aadi-festival-the-glory-of-melmalayanur-angala-parameswari-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக