டோலிவுட் சூப்பர்ஸ்டார்களின் சண்டை காட்சிகளை ஒரு நிமிடம் மனதில் ஓட்டிப்பாருங்கள். புழுதி பறக்கும் சாலையில் ஹீரோ நடுநாயகமாக நிற்க ஒவ்வொரு ஆளாக வரிசையில் ஓடிவருவார்கள். ஹைடெசிபலில் தொண்டை கிழிய கத்திக் கொண்டு தங்கள் முழுபலத்தையும் கூட்டி ஹீரோவுக்கு பன்ச் விட நினைப்பார்கள். ஆனால், அந்த ஹீரோ அயர்ன் செய்த சட்டை கசங்காமல் கையை ஒரு வீசுதான் வீசுவார்... அந்த அடி ஆட்கள் 50 அடி தள்ளி பறந்து போய் விழுவார்கள். இதுதான் டோலிவுட் ஆக்ஷன் காட்சிகளின் அடிப்படையான பேட்டர்ன். மெயின் ரவுடியை காலி செய்ய மட்டும் கூடுதலாக இரண்டு நிமிடங்களை ஹீரோ எடுத்துக் கொள்வார். அப்போதும் சட்டை கசங்கியிருக்காது. ஸ்டைலான கூலிங் கிளாஸ் அப்படியே இருக்கும். எதிராளிகள் மட்டும் காணாமல் போயிருப்பார்கள்.
கிட்டத்தட்ட டோலிவுட் ஹீரோக்களின் ஆக்ஷனுக்கு ஒப்பானதுதான் மா லாங்கின் ஆட்டமும். இத்தனை நாள் கற்றுக்கொண்ட அத்தனை வித்தைகளையும் திறனையும் ஒன்றாக திரட்டி மா லாங் முன் நின்று சமர் செய்கிறார்கள், போராடுகிறார்கள்... ஆனால், கடைசி வரை அவரை வீழ்த்தவே முடியவில்லை. இது டோக்கியோ ஒலிம்பிக்கின் கதை மட்டுமல்ல. ரியோவிலும் அதுதான் நடந்தது. பாரிஸிலும் அதுதான் நடக்கப்போகிறது. மா லாங்கை வீழ்த்தப் போராடினார்கள்... போராடுகிறார்கள்... போராடிக் கொண்டே இருப்பார்கள்.
டேபிள் டென்னிஸ் உலகின் GOAT ஆக மிரட்டி வருகிறார் மா லாங். 5 வயதில் டேபிள் டென்னிஸ் பேடை கையிலெடுத்தவர், 18 வயதில் உலக சாம்பியன். இதுவரை யாருமே முறியடிக்க முடியாத சாதனை அது. இப்போது அவருக்கு 32 வயது. இடைப்பட்ட 14 ஆண்டுகளில் டேபிள் டென்னிஸ் உலகின் பேரரசனாக உயர்ந்திருக்கிறார் மா லாங்.
2010 லிருந்து 2015 வரை தொடர்ந்து 64 மாதங்கள் உலகின் நம்பர் 1 வீரராக இருந்தார். அதன்பிறகு, மீண்டும் ஒரு 34 மாதங்கள் யாராலும் அசைக்க முடியாதபடி நம்பர் 1 இடத்தில் இருந்தார். காயம் காரணமாக இடையில் கொஞ்ச காலம் ஓய்வெடுத்தார். காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் உலக சாம்பியன் ஆனார். இப்போது உலகளவிலான தரவரிசையில் 2-வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
ஒலிம்பிக்கில் செய்திருக்கும் சாதனைகள் தனி. 2012-ல் அணிகள் பிரிவில் தங்கம், 2016-ல் அணிகள் பிரிவு + தனி என இரண்டு தங்கம். இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம். தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்குகளில் டேபிள் டென்னிஸின் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் எனும் பெருமையை பெற்றார். அணிகளுக்கான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் தங்கம் அடிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அது சாத்தியமாகும் பட்சத்தில் ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் செய்வார்.
டேபிள் டென்னிஸ் உலகில் மா லாங்குக்கு 'The Dragon', 'The Dictator' போன்ற அடைமொழிகளும் உண்டு.
யாருக்கும் அஞ்சாமல், யாருடைய வழியையும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டு, தான் வைத்ததுதான் சட்டம் என சொல்பவர்களை சர்வாதிகாரி என சொல்லலாம். மா லாங்கின் ஆட்டத்திலும் இந்த சர்வாதிகார ஆதிக்கம் இருப்பதை உணர முடியும். மா லாங்கை எதிர்த்து ஆடும் எந்த எதிராளியாலும் ஒரு செட்டை, ஏன் ஒரு சர்வை கூட தான் நினைத்து போல ஆட முடியாது. கையில் ரேக்கட்டை எடுத்த அடுத்த நொடியிலிருந்தே போட்டி மா லாங் நினைப்பதை போலத்தான் நகரும். சர்வ் போட்ட சில நொடிகளிலேயே பின் நகர்ந்து சென்று லாங் ஷாட்களை ஆட ஆரம்பித்துவிடுவார். அதன்பிறகு, எதிராளி அவர் செய்ய நினைக்கும் ஒரு மூவை கூட செய்ய முடியாது. மா லாங்கின் அட்டாக்கிற்கு எதிர்வினை மட்டுமே செய்ய முடியும். அதுவும் அவர் விரும்பும் லைனில் விரும்பும் கோணத்திலேயே அரங்கேறும்.
கிரிக்கெட்டில் ஒரு பௌலரின் கையிலிருந்து பந்து ரிலீஸாகும் சமயத்திலேயே அது எந்த வகை பந்து என பேட்ஸ்மேன் கணித்தால்தான் நேர்த்தியாக ஷாட் ஆட முடியும். டேபிள் டென்னிஸிலும் அப்படித்தான். ஒரு ஷாட் ஆடினால் எதிராளி அதை ரிட்டன் செய்வதற்குள்ளேயே அவர் எந்த கோணத்தில் எந்த திசையில் ரிட்டன் செய்வார் என தெரிந்து அட்டாக் செய்ய தயாராக வேண்டும்.
கிரிக்கெட்டிலாவது இந்த கணிப்புக்கு சில மைக்ரோ விநாடிகள் கிடைக்கும். டேபிள் டென்னிஸில் அதுவும் இருக்காது. மைக்ரோவிலும் குறைவாக நானோ செகண்ட்டுகள் மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்த நானோ செகண்ட்டுகளுக்குள் மா லாங் மேஜிக்கை நிகழ்த்தியிருப்பார். அட்டாக் செய்த அடுத்த நானோ செகண்ட்டில், எதிராளியின் பேடில் பந்து படுவதற்கு முன்பே அவர் எந்த திசையில் அதை ரிட்டன் செய்வார்? பேக் ஹேண்ட்டா ஃபோர் ஹேண்டா என்பதையெல்லாம் முடிவு செய்துவிடுவார்.
ஒரு சூப்பர் கம்ப்யூட்டரின் செயல்திறனுக்கு இணையான வேகம் இது. இந்த வேகம்தான் மற்ற வீரர்களிடமிருந்து மா லாங்கை தனித்து காட்டுகிறது. ஃபோர்ஹேண்டில் வலுவான வீரராக இருக்கும் மா லாங், பேக் ஹேண்ட் ஷாட்களை ஆடும்விதம் இன்னும் நேர்த்தியாக இருக்கும். ஒரு லெக் ஸ்பின்னரின் வேரியேஷனான கூக்ளி போன்றது அது. 5 பந்துகளை லெக் பிரேக்காக வீசி ஒரு பந்தை கூக்ளியாக்கும் போது பேட்ஸ்மேன் தடுமாறிப் போவாரே அதற்கு ஒப்பானதுதான் மா லாங்கின் பேக் ஹேண்ட் ஷாட்கள்.
மா லாங் ஆடாத ஒரு போட்டியையும் மா லாங் ஆடும் ஒரு போட்டியையும் அடுத்தடுத்து பார்த்தாலே மா லாங்கினால் டேபிள் டென்னிஸின் தரம் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பது புரியும்.
மா லாங்குக்கு எதிராக ஒரு செட்டை வென்றதையே மிகப்பெரிய பெருமையாக கருதுகிறார் இந்தியாவின் ஆகச்சிறந்த அனுபவமிக்க வீரரான சரத் கமல். அதுதான் மா லாங். ரியோவில் எப்படி தங்கப்பதக்கத்தை வென்றாரோ அப்படியே டோக்கியோவிலும் தங்கம் வென்றிருக்கிறார். ஐந்து வருடம் ஓடியிருக்கிறது. ஆனால், அவரது ஃபார்மில் எந்த வீழ்ச்சியும் இல்லை.
சரத் கமல் தன்னுடைய மொத்த திறனையும் கூட்டி செய்த சண்டை, அரையிறுதியில் டிமிட்ரிச் போராடி செய்த அந்த யுத்தம், இறுதிப்போட்டியில் சக நாட்டு வீரரான சென்டாங்கின் நம்பர் 1 அந்தஸ்து இது எதுவுமே மா லாங்கை வீழ்த்த முடியவில்லை. ஏனெனில், அவர் ஒரு 'Dictator'. சர்வாதிகாரிகளுக்கு யாராலும் முடிவுகட்ட முடியாது. அவர்களே அவர்களுக்கான முடிவுரையை எழுதிக்கொள்வார்கள். மா லாங் விஷயத்தில் அது இப்போதைக்கு சாத்தியமில்லை.
source https://sports.vikatan.com/olympics/ma-long-goat-of-table-tennis-won-gold-medal-again-in-tokyo-olympics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக