Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

ஆடி அம்மன் தரிசனம்: கேட்டதையெல்லாம் கொடுப்பாள் கோட்டை மாரி - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்!

வான மழை போல வர மழையை அளிப்பவள் மாரி. ஊர்தோறும் வெவ்வேறு நாமங்களில் இவள் அமர்ந்திருந்தாலும் ஒற்றுமையில் ஒரே கருணைக் கடலாகத் திகழ்பவள். இதில் திண்டுக்கல் கோட்டையில் அமர்ந்திருக்கும் கோட்டை மாரியம்மன், தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கும் மகா மருத்துவச்சி என்று பெயர் பெற்றவள்.

ஆடி நடந்து வருகிறது. திண்டுக்கல் கோட்டை மாரியின் கோயில் பிராகாரம் முழுக்க உற்சாகம் ததும்பிக் கிடக்கிறது. 'வேப்பிலையும் பொற்கரகமும் வீதி விளையாடிவர, ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி ஓடிவருவாள்! பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி ஓடிவருவாள்!' என்ற பாடலுக்கேற்ப பக்தர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப அன்னை அருளாட்சி செய்து வருகிறாள். திண்டுக்கல் மாநகரின் அடையாளமாக விளங்குவது பத்மகிரி மலை! அந்த மலைமீது அமைந்த கோட்டையில் கோலாகலமாகக் கோயில் கொண்டு கொலுவீற்றிருக்கிறாள், கோட்டை மாரி!

கோட்டை மாரி

காளியின் அம்சமாகவும் கனகதுர்க்கையின் வடிவமாகவும் அமர்ந்திருக்கும் தேவி இவள். இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு தியான கோலத்தில் அமர்ந்தவாறு அருளும் அம்மனின் திருவுருவத்தைக் காண்போர் இறுதிவரை அந்த திவ்ய தரிசனத்தை மறக்கவே மாட்டார்கள் எனலாம்.

கோரைப்பற்களுடன் இருந்தாலும் இவள் குழந்தை போன்ற மனம் கொண்டவள். குளிர் நிலவைப் போன்ற குளுமை கொண்டவள் என்கிறார்கள் பக்தர்கள். வேண்டியதை வேண்டும் தருணத்தில் அப்படியே அருளும் தயாபரி இவள். நல்லதைக் காக்கவும் தீயதை அழிக்கவும் இவள் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதம், அரிவாள், வில், மணி, குங்குமக் கிண்ணம் ஏந்தி காட்சி தருகிறாள்.

கோட்டை மாரியம்மன்

300 ஆண்டுகளைக் கடந்த இந்தக் கோயில் திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். ஆனால் மதுரை பாண்டிய மன்னர் முதலாம் சடையவர்மன் குலசேகரப் பாண்டியர் காலத்தில் இங்கு வழிபடப்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலே சிதைந்து போய், பிறகு மாரியம்மன் கோயிலானதாகவும் கூறப்படுகிறது. எப்படியோ இருக்கட்டும் திண்டுக்கல்லின் மகாராணியாக, சாம்ராஜ்ஜிய துர்கையாக அருள்கிறாள் இந்த அம்மன். விநாயகர் சந்நிதி, மதுரை வீரன் சந்நிதி, கருப்பண்ண சாமி சந்நிதி, முனியசாமி சந்நிதி, நவகிரக மூர்த்தியர் சந்நிதிகளும் இங்கு உள்ளன.

Also Read: ஆடி மாத அம்மன் தரிசனம்: பெரிய பாளையத்து பவானி - அண்டியோரைக் காக்கும் ஆயன் சோதரி!

ஆடி மாத வெள்ளி, செவ்வாய், ஞாயிறு பூஜைகளும், மாசி மாத விழாவும் இங்கு வெகு பிரசித்தம். மண்டகப்படி விழா, பூக்குழி விழா, தசாவதார விழா, ஊஞ்சல் உற்சவம், தெப்போற்சவம் போன்ற வைபவங்களுக்கு இங்கு சிறப்பானவை. தெப்ப திருவிழாவின்போது மாரியம்மன் சயனகோலத்தில் காட்சியளிப்பது இந்தக் கோயிலில் மட்டும்தான் என்பதும் சிறப்பு.

பூக்குழி இறங்குவது

முளைப்பாரி, அங்கப்பிரதட்சணம், தொட்டில் கட்டுவது, உப்பு - மிளகுக் கொட்டுவது, மலர் பந்து சாத்துதல், தீச்சட்டி ஏந்துவது, பூக்குழி இறங்குவது, கரும்புத் தொட்டில் சுமப்பது, மாவிளக்கு ஏற்றுதல் என இங்கு ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் நேர்த்திக் கடன்கள் அநேகம்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய நாள்களிலும் அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய நாள்களிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் செங்கதிர்கள் மாரியம்மனின் திருமுடிமீது பட்டு கீழிறங்கி திருமுகத்தில்பணிவது சிலிர்க்க வைக்கும் ஒரு திருக்காட்சியாகும். கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்துக்கள் என மூன்று மத மக்களும் மகிழ்ந்து கொண்டாடும் மாரி இவள்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்

இவளை நேரில்தான் தரிசிக்க வேண்டும், வேண்டியதைக் கேட்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இருந்த இடத்தில் இருந்தே இவளை ஒரு நொடி நினைத்து வணங்கினாலே போதும். ஓடிவந்து காப்பாள்; ஓயாத கவலைகளைத் தீர்ப்பாள் என்கிறார்கள் இவள் பக்தர்கள். பிறகென்ன மாரியை சரணடையுங்கள்! மங்கல வாழ்வு பெறுங்கள்.

'கலிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுத்தே

யுகம்பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுத்தே

உன்னைப்போல் தெய்வம் உலகத்தில்தான் உண்டோ

என்னைப்போல் பேறுகொண்ட மைந்தன்தான் எங்குமுண்டோ!

ஓம் சக்தி!'



source https://www.vikatan.com/spiritual/temples/the-glory-of-dindigul-kottai-mariyamman-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக