டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணி திருமணம் முடிந்த பிறகு, பெண் வீட்டாரின் மறு அழைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தஞ்சாவூர் சென்றார் சசிகலா. இரண்டு நாள்கள் அங்கு தங்கியிருந்த சசிகலாவை, டெல்டா ட்ரீட்மென்ட் பிரமுகர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகச் சொல்கிறார்கள்.
இளவரசி மகன் விவேக் மூலமாக ட்ரீட்மென்ட் புள்ளியே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகவும், அந்த நபர் மூலம் சில தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும் பேச்சு கிளம்பியிருக்கிறது. ‘என்ன பேசினார்கள், என்ன நடக்கப்போகிறது’ என்று பீதியில் இருக்கிறதாம் எடப்பாடி முகாம்!
வீடியோ சர்ச்சையில் சிக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நிர்வாகி மீண்டும் கட்சிக்குள் வலம்வர மேலிடத்தில் காய்நகர்த்த ஆரம்பித்துள்ளார். அதேநேரம், இந்த விவகாரத்தில் மாநிலத் தலைவர் மீது டெல்லி தலைமை கடும் கோபத்தில் இருப்பதாகவும், விரைவில் அவர் மாற்றம் செய்யப்படுவார் என்றும் கட்சிக்குள்ளேயே பேச்சுகள் எழுந்தன. ஆனால், டெல்லியிலுள்ள முக்கிய நிர்வாகி ஒருவர் மூலம் மேலிடத்தை சமாதானம் செய்துவிட்டாராம் மாநிலத் தலைவர். இதனால், ‘‘மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இனி எனது ஆக்ஷனை மட்டும் பாருங்கள்’’ என்கிறார் மாநிலத் தலைவர்.
மாநிலத்தின் உச்சப்புள்ளியிடம் செல்லும் முக்கிய கோப்புகளுக்கு ஓரிரு நாள்களில் தீர்வு காணப்பட்டுவிடுகின்றன. ஆனால், புள்ளிவிவரப் புலியான அந்த அமைச்சரிடம் செல்லும் கோப்புகள் வாரக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றனவாம். கடந்த வாரம் மட்டுமே அவர் துறை சார்ந்த 700 கோப்புகள் அமைச்சரின் டேபிளிலேயே காத்துக்கிடக்கின்றன.
Also Read: `எடப்பாடியின் அரசு பங்களா’ முதல் ‘கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்துக்குப் பொறி’ வரை! கழுகார் அப்டேட்ஸ்
அமைச்சரிடம் இதைக் கேட்கவும் அச்சப்படுகிறார்களாம் துறை சார்ந்த உயரதிகாரிகள். “அவர் மூடு எப்படி இருக்குமோன்னு தெரியலை... கேட்டா கடிச்சு வெச்சிடுவாரு” என்று சொல்லும் அதிகாரிகள், அமைச்சர் எப்போது அவற்றையெல்லாம் பார்த்து முதல்வருக்கு அனுப்புவார் என்று காத்துக் கிடக்கிறார்களாம்!
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் அரசு ஆணைகளை ஆங்கிலத்துடன் தமிழிலும் வெளியிட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை மூலம் தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக அரசின் 38 துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பெரிதாக யாரும் இதைப் பின்பற்றவில்லையாம். இதுவரை வெளியான சுமார் 600 அரசாணைகளில் 200 மட்டுமே ஆங்கிலத்துடன் தமிழிலும் வெளியாகியிருக்கின்றனவாம்.
இதையடுத்து, தமிழ் வளர்ச்சித்துறையிலிருந்து ஒவ்வொரு துறையிடம் வாராந்திர அறிக்கை கேட்டிருக்கிறார்கள். அதற்கும் 10 துறைகளிலிருந்து மட்டுமே அறிக்கை வந்திருக்கின்றனவாம். மற்றவர்கள் யாரும் அதை சீண்டக்கூட இல்லை என்று புலம்புகிறார்கள் தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள்!
Also Read: மிஸ்டர் கழுகு: “சீனியர்களை மதிக்கத் தெரியாதா?”
சமீபத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பத்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் திருச்சி சரக டி.ஐ.ஜி ராதிகா, திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் மாற்றப்பட்டதன் பின்னணியில் முக்கிய காரணங்கள் இருக்கின்றனவாம். டி.ஐ.ஜி ராதிகா விஜிலென்ஸில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான புகாரை சரியாக விசாரிக்கவில்லை என்று ஆளுங்கட்சிக்கு வருத்தங்கள் இருந்தன என்கிறார்கள்.
ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருவர் இடையே நடக்கும் ஈகோ யுத்தமே அருணின் இடமாற்றத்துக்குக் காரணம் என்று ஐ.பி.எஸ் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குரூப்பில் கமென்ட்கள் வலம்வருகின்றன. அதனால்தான், இருவரும் சென்னையில் டம்மி போஸ்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்களாம். அருண் இடமாற்றத்தை அடுத்து, பெரிய பார்ட்டியே வைத்து கொண்டாடியிருக்கிறாராம் தினம் தினம் அவருக்கு எதிராக பொங்கிக்கொண்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி.
கடந்த ஆட்சியில், ஆவின் பெயரில் கொங்கு மண்டலத்தில் நடந்த முறைகேடுகள் ஏராளம். ஆவினில் பணம் டெபாசிட் செய்து தொடங்கப்படும் பாலகங்களில், ஆவின் பொருள்களை மட்டுமே விற்க வேண்டும் என்பது விதி. ஆனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆவின் பெயரில் தொடங்கப்படும் பல பாலகங்களில் அந்த விதிகளெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. ஆவினில் இருந்து பாலகங்களைப் பெற்ற மூன்றெழுத்து நிறுவனம் ஒன்று டீ, பலகாரம் உள்ளிட்ட தங்கள் தயாரிப்புகளை விற்கிறார்கள் என்ற புகார்கள் கடந்த ஆட்சியில் எழுந்தபோதும், அப்போதைய ஆளும் தரப்பின் ஆசி இருந்ததால் அவர்களை அசைக்க முடியவில்லை.
ஆட்சி மாறிய நிலையில், தங்கள் பிசினஸைத் தொடர இப்போது தி.மு.க-வுக்குக் கொக்கிபோட்டு வருகிறது அந்த நிறுவனம். இதற்காக கோவை மாவட்டத்திலுள்ள ஐந்து மாவட்ட பொறுப்பாளர்களையும் மூன்றெழுத்து நிறுவனத்தினர் அணுகியுள்ளார்கள். அவர்களில் நான்கு பேர் கைவிட, தெற்கிலிருந்து மட்டும் ஆதரவு கிடைத்ததாம். ‘வாங்கிய ஸ்வீட் பாக்ஸ்களுக்கு வஞ்சகம் இல்லாமல் வேலைசெய்கிறார்’ என்று உடன்பிறப்புகள் அவர்மீது புகைச்சலில் இருக்கிறார்கள்.
Also Read: பிரியங்கா டு சந்திரசேகர் ஆசாத் - உ.பி தேர்தல் களத்தில் உதயமாகும் புதிய அரசியல் சக்திகள் யார் யார்?
புதுச்சேரி ராஜ்யசபா சீட் பா.ஜ.க-வுக்கு கைமாறிய விவகாரத்தில், மூத்த தலைவர் ஆரம்பத்தில் ரொம்பவே அடம்பிடித்தாராம். சுனாமி குடியிருப்பு ஊழலை மையமாக வைத்து பேச்சைத் தொடங்கியதும், மௌன சித்தராக அமர்ந்துவிட்டாராம். அதன் பிறகு, தேர்தல் செலவுக்கு வாங்கிய கடன் தொகையுடன், தலைக்கு மூன்று ஸ்வீட் பாக்ஸ் என்று கணக்கிட்டு வாங்கிக்கொண்டு பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். ‘‘நமக்கு ஒரு லட்டுகூட கிடைக்கவில்லையே?’’ என்று புலம்புகிறார்களாம் அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள்!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரன். மாநில காங்கிரஸ் பொருளாளரான அவர், சட்டமன்றத் தேர்தலின்போது டோக்கன் சிஸ்டத்தை பயன்படுத்தி ஓட்டு வாங்கிவிட்டு, வெற்றிபெற்றதும் கண்டுகொள்ளவில்லையாம்.
அதனால் அவரது படத்துடன், ‘காணவில்லை’ என போஸ்டர்களை எதிர் கோஷ்டியினர் ஒட்டிவந்தார்கள். அவற்றை மனோகரன் கோஷ்டியினர் கிழித்து வந்தார்கள். இதனால் நாங்குநேரி பேருந்து நிலைய சுவரில் கட்சிக்காரர் ஒருவர் பெயின்ட்டால் ‘ரூபி மனோகரன் எம்.எல்.ஏ-வைக் காணவில்லை’ என்று எழுதி வைத்துவிட்டார். ‘அரிச்சந்திரன்... சொன்ன சொல்லைத் தவற மாட்டார்’ என்றெல்லாம் வஞ்சப் புகழ்ச்சியாக எழுதப்பட்ட வாசகங்களின் முடிவில், ‘ரூபி மனோகரனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த வழியாகச் செல்பவர்கள் இந்த சுவர் விளம்பரத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் கடக்கிறார்கள்.
திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான காடுவெட்டி தியாகராஜனின் மகள் திருமணம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. இதற்காக முதலில் தயார்செய்யப்பட்ட திருமண அழைப்பிதழை கே.என்.நேருவிடம் காண்பித்திருக்கிறார்கள். அதில், அன்பில் மகேஷின் பெயர் இடம்பெறவில்லையாம்.
கடுப்பான நேரு, ``எதுக்குயா மகேஷ் பெயரைப் போடல... ஒழுங்கா அவரு பெயரைப் போட்டு பத்திரிகை அடிச்சி கொடுங்கய்யா. உங்களாலதான் எனக்கும் கெட்டப் பெயர் வருது’’ என்று உஷ்ணமாகியிருக்கிறார். அதன் பிறகுதான் பத்திரிகையில் அன்பில் மகேஷ் பெயரையும் அடித்து சென்னையிலிருந்த அன்பில் மகேஷின் வீட்டிலும் கொடுத்திருக்கிறார்கள். நேரு இப்படி சொன்னாலும் இரு தரப்புக்கும் இடையே உஷ்ணம் நாளுக்கு நாள் பல டிகிரி எகிறி வருகிறதாம்!
source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-on-latest-political-news
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக