`தண்ணீரை பூமியில் தேடாதே, அதை வானத்திலிருந்து வரவழை' என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். மழையை வானத்திலிருந்து வரவழைப்பதற்கு இருக்கும் ஒரே ஒரே வழி மரங்களை வளர்ப்பதுதான். இன்று நாம் சந்திக்கும் இன்னொரு சவால், காற்று மாசுபாடு. 2019-ம் ஆண்டில் 17 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது இந்திய மருத்துவ கவுன்சில். இதிலிருந்து தப்பிக்கவும் மரங்கள் நமக்கு கைகொடுக்கின்றன. `விவசாயிகளும் தானியச் சாகுபடியோடு மரங்களையும் வளர்த்து வர வேண்டும். மரச் சாகுபடியும் ஒரு விவசாயம்தான். அதுவும் வருமானம் கொடுக்கும்' என்பது வல்லுநர்களின் கருத்து.
பூமியில் இருக்கும் பெருவாரியான மரங்கள் தானாக முளைத்து வந்தவைதான். ஆனால், அவற்றை விவசாய நிலங்களில் வளர்க்க வேண்டுமென்றால் அதற்கு சிறிதளவு முயற்சி தேவை. மரம் வளர்ப்பைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நர்சரி வைத்திருப்போர், வனத்துறையினர், மர வளர்ப்பு வல்லுநர்கள், அனுபவ விவசாயிகள் எனப் பலரும் மர வளர்ப்பைப் பற்றிச் சொல்வார்கள் என்றாலும், இன்று கையடக்கமாக ஸ்மார்ட் போனிலேயே அனைத்துத் தகவல்களும் வந்து கொட்டுகின்றன. இப்படி மரம் வளர்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் (ஆப்ஸ்) குறித்து இங்கு பார்ப்போம்.
Also Read: வாழை நோய்களைக் கண்டறியும் ‘டுமாய்னி’ செயலி!
ஃபார்ம் ட்ரீ (Farm Tree)
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள மத்திய வேளாண் காடுகள் ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட செயலிதான் இது. இதில் விவசாய நிலத்தில் சாகுபடி செய்யும் 22 மர வகைகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. 22 மர வகைகளின் தாவரவியல் பெயர்களோடு முகப்பில் இருக்கும். அவற்றில் தேவைப்படும் மரத்தின் தாவரவியல் பெயரை க்ளிக் செய்தால் அந்த மரத்தின் பயன்பாடுகள், சாகுபடி, கன்று உருவாக்கும் முறை, கிடைக்கும் மகசூலின் அளவு (ஹெக்டேரில்), மர பராமரிப்பு, மர வகையின் சிறப்புகள் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும்.
மூங்கில், சவுக்கு, தேக்கு, வேம்பு, கிளரிசீடியா, வாகை, தைல மரம், மலைவேம்பு, கடம்பு உள்ளிட்ட 22 மர வகைகள் உள்ளன. இதன் சேவைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். மர வளர்ப்பில் எழும் சந்தேகங்களுக்கு நிபுணர்களைத் தொடர்புகொள்ளவும் வழிகாட்டுகிறது இந்தச் செயலி. விவசாய நிலத்தில் இருக்கும் புகைப்படங்களோடு மரங்களைப் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்குகிறது இது. இந்தச் செயலியை தரவிறக்கம் செய்ய பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்:
https://play.google.com/store/apps/details?id=com.cafri.farmtree&hl=en_IN&gl=US
நம் மரக்களஞ்சியம் (Maram Tamil)
தமிழில் மரம் வளர்ப்பு குறித்து அறிந்துகொள்ள உதவுகிறது இந்தச் செயலி. கூகுள் ப்ளே ஸ்டோரில் `மரம் தமிழ்' என்று ஆங்கிலத்தில் (Maram Tamil) பதிவிட்டால் கிடைக்கிறது. மரங்கள், மரங்களின் புகைப்படங்கள், மரங்கள் வளர்க்கும் முறை, விதைப்பந்து, மானியம், அரசு திட்டங்கள் குறித்து இதில் தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டின் நாட்டு இன மரங்கள் தவிர வெளிநாட்டு மர வகைகளைப் பற்றியும் விளக்குகிறது.
தெளிவான புகைப்படங்களுடன் எந்தெந்த மரம் எப்படி இருக்கும் என விளக்குகிறது. எந்தெந்த இடத்தில் என்னென்ன மரங்களை வளர்க்கலாம், எப்போது நடலாம், எப்படி நடலாம் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கின்றன. மரம் வளர்ப்பு குறித்து தமிழில் இவ்வளவு தகவல்கள் கிடைப்பது பெரிய விஷயம். அடிக்கடி விளம்பரங்கள் குறுக்கிடுவது இந்தச் செயலியின் குறை. இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்ய பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்:
https://play.google.com/store/apps/details?id=nithra.tamil.maram.trees.plants.forest&hl=en_IN&gl=US
லீப் ஸ்னாப் (Leaf Snap)
எங்கேயாவது செல்கிறீர்கள், அங்கே ஒரு மரத்தைப் பார்க்கிறீர்கள். இது என்ன மரம், என்ன இனத்தைச் சேர்ந்தது என்பதை அறிய உதவுகிறது இந்தச் செயலி. மரத்தின் இலையையோ, மலரையோ, கனியையோ புகைப்படம் எடுத்து, அது என்ன வகையான மரம் என்பதை அறியலாம். செயலியிலேயே புகைப்படம் எடுக்கும் வசதி இருக்கிறது.
Also Read: `` `நீயெல்லாம் விவசாயம் செய்யப்போறியா?'ன்னு கேட்டாங்க; ஆனா, இப்போ..!" - அசத்தும் பட்டதாரி இளைஞர்
புகைப்படம் எடுத்த சற்று நேரத்தில் இது என்ன வகையான மரம், எந்த தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது உள்ளிட்ட தகவல்கள் கிடைத்துவிடும். நமக்குத் தெரியாத மரங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்தச் செயலி உதவுகிறது. குறிப்பாக, புதிதாக மரங்கள் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இது உதவும். இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்ய பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்:
https://play.google.com/store/apps/details?id=plant.identification.snap&hl=en_IN&gl=US
source https://www.vikatan.com/news/agriculture/apps-which-helps-you-to-understand-about-trees-and-tree-farming
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக