Ad

வியாழன், 29 ஜூலை, 2021

மீண்டும் வேலையைக் காட்டும் 'பெரியண்ணன்' அமெரிக்கா... எப்படி எதிர்கொள்கிறது கியூபா?

அமெரிக்காவிலிருந்து 90 மைல் தொலைவில் அமைத்துள்ள ஒரு குட்டி நாடு கியூபா. கியூபா என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது கம்யூனிசம்தான். அதற்குக் காரணமானவர்கள் ஃபிடல் காஸ்ட்ரோவும், சேகுவேராவும். கம்யூனிசத்திற்குப் புகழ்பெற்ற கியூபா நாட்டில் தற்போது அந்த அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களைத் தூண்டுவது அமெரிக்காதான் என்று அந்த நாட்டின் அதிபர் பேசியுள்ளார். கியூபாவில் நடைபெறும் போராட்டத்திற்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி செல்லவேண்டும்.

ஃபிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) & சே குவேரா (Che Guevara)

அமெரிக்காவின் ஆதரவோடு பாடிஸ்டா கியூபாவை ஆட்சி செய்துவந்தார். அந்த ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா தலைமையிலான புரட்சிப்படை கொரில்லா தாக்குதல் நடத்தி 1959-ம் ஆண்டு பாடிஸ்டாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தனர். போரில் வெற்றிபெற்றதை அடுத்தது 1959-ம் ஆண்டு கியூபாவின் அதிபரானார் ஃபிடல் காஸ்ட்ரோ. முதலில் ஃபிடலுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது அமெரிக்கா. அதிபராக ஃபிடல் கியூபாவிலிருந்த அனைத்து அமெரிக்க நிறுவனங்களையும் அரசுடைமையாக்கினார். `உலகின் எதிரி அமெரிக்கா' என்று வெளிப்படையாக அறிவித்திருந்தார். ஃபிடலின் நடவடிக்கையில் கோபமடைந்த அமெரிக்க அரசு எப்படியாவது ஃபிடலை தீர்த்துக் கட்டவேண்டும் என பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டது உலகமறிந்த ஒன்று. ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல முடியாத நிலையில், 1962-ம் ஆண்டு முதல் கியூபா மீது பல்வேறு தடைகளைக் கொண்டுவந்தது அமெரிக்கா.

கடந்த 2008-ம் ஆண்டுவரை அதிபராக இருந்துவந்த ஃபிடல் காஸ்ட்ரோ, ஆட்சிப்பொறுப்பை தன் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். 89 வயதான ராவுல் கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இவரோடு கியூபாவில் காஸ்ட்ரோவின் சகாப்தம் ஒரு முடிவுக்கு வந்தது. ராவுல் பதிவிலகியதை அடுத்து மிகேல் தியாஸ் கானெல் புதிய அதிபராகப் பதவியேற்றார். கியூபாவை வீழ்த்துவதற்குத் தொடர்ந்து பல்வேறு சதிவேலைகளை அமெரிக்கா செய்துவந்த போதிலும், அனைத்தையும் முறியடித்து முன்னேறிச் சென்றுகொண்டிருந்தது கியூபா.

ராவுல் காஸ்ட்ரோ, மிகேல் தியாஸ் கானெல்

அமெரிக்க அரசு கடந்த 60 ஆண்டுகளாகக் கியூபாவின் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஐ.நா சபையின் தீர்மானம் கொண்டுவந்த நிலையிலும் அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த தடை உத்தரவு காரணமாக உணவுப்பொருட்கள் தொடங்கி உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்வதில்கூட சிக்கல் நீடிக்கிறது. இந்த கொரோனா பேரிடரில் உலகின் பெரும் வல்லரசு நாடுகள் பலவும் உருக்குலைந்து போயிருக்கும் நிலையில் கியூபாவும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

உலகின் எந்த ஒரு நாட்டிற்கு மருத்துவ உதவி தேவை ஏற்பட்டாலும் அந்த நாட்டிற்கு தங்களின் மருத்துவர்களை அனுப்புவது கியூபாவின் வழக்கம். கொரோனா முதல் அலையின் போதுகூட இது தான் நடந்தது. தற்போது அந்த நாட்டிலேயே மருத்துவ வசதிகள் இல்லை என்று மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். கியூபாவில் மக்கள் போராட்டம் நடத்துவது சட்டவிரோதமானது. அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்பதால் பெரும்பாலும் அங்கு போராட்டங்கள் நடைபெறுவது இல்லை. தற்போது அரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக வெடித்துள்ள இந்த போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

போராட்டம்

போராட்டக்காரர்கள், ``எங்களுக்குச் சர்வாதிகாரம் வேண்டாம், விடுதலைதான் வேண்டும்'' என்று முழக்கங்கள் எழுப்பி வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தவறாகக் கையாண்டதே இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாது அந்த நாட்டில் கடுமையான உணவுத் தட்டுப்பாடும், மருந்துத் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அந்த நாட்டின் வருவாயில் சுற்றுலாத்துறையும், சர்க்கரை ஏற்றுமதியும் முக்கியமானவை. இந்த இரண்டுமே கொரோனா பேரிடர் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் செய்பவர்களைக் கைது செய்வதுடன், நாட்டின் இணையச் சேவையையும் முடக்கியிருந்தது. தற்போது நிலைமை சற்று சீராகியுள்ளது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

நாடுமுழுவதும் தொடர் போராட்டம் வெடித்ததையொட்டி சமீபத்தில் அந்த நாட்டின் அதிபர் மிகேல் தியாஸ் கானெல் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ``கடந்த 1962-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடை`பொருளாதாரம் முடக்கும் கொள்கை'. அமெரிக்கா தான் இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணம். அவர்கள் அமர்த்திய கூலிப்படையினர்தான் இந்த போராட்டக்காரர்கள். எனது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி கியூபா புரட்சியைப் பாதுகாக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அவர் உரையாற்றியிருந்தார்.

கொரோனாவுக்கு எதிராக ஐந்து தடுப்பு மருந்துகள் கியூபாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. `சொபெரானா’ எனப்படும் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக 91 சதவிகிதம் பலனளிப்பதாகக் கியூபா தெரிவித்துள்ளது.

கியூபா தடுப்பூசிகளைக் கண்டறிந்தாலும், பொருளாதாரத் தடையின் காரணமாக சில நாடுகளிடமிருந்து மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நீடித்துவருகிறது. கியூபாவில் நிலவும் இந்த சூழலைப் பயன்படுத்தி கலகத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்வதாகவும், இந்தக் கலவரத்திற்கு முக்கிய காரணமே அமெரிக்காதான் என்றும் கியூபாவின் ஆளும்கட்சியைச் சார்ந்தவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாது, கலவரத்தைத் தூண்டிவிட அமெரிக்கா பண உதவியும் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஒபாமா அதிபராக இருந்த போது, கியூபாவின் மீதான தடை சிறிது தளர்த்தப்பட்டிருந்தது. டிரம்ப் அதிபரானபோது மீண்டும் தடைகள் அதிகரித்தது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கியூபாவின் மீதுள்ள பொருளாதாரத் தடை நீங்கும் என்று கூறியிருந்தார். அதற்கு தற்போதுவரை எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை.

Also Read: கியூபா: `ஃபிடல் காஸ்ட்ரோ கட்டி எழுப்பிய கம்யூனிச சாம்ராஜ்யம் சரிகிறதா?' - என்ன நடக்கிறது அங்கே?

அமெரிக்காவில் வசிக்கும் கியூபா நாட்டு மக்களின் மீது அடிக்கடி தாக்குதல் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில், பிரான்ஸ் நாட்டில் உள்ள கியூபாவின் தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்கூட நடைபெற்றதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். `ஐ.நா. சபை கியூபா மீதான தடையை நீக்க வேண்டுமென பலமுறை தீர்மானம் நிறைவேற்றிய போதும் தடையை நீக்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்து வருவதாகவும், குழப்பத்தை ஏற்படுத்தி கியூபா அரசைக் கவிழ்க்க முயற்சி செய்கிறது என்றும். கியூபா மக்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்தும்'. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் பேசினேன். ``தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறன. கியூபா அமெரிக்காவின் அடக்குமுறைக்கு அடிபணிய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பல்வேறு சதிகளைச் செய்து வருகிறது. அது ஒருபோதும் நடக்காது. எத்தனையோ சதிகளைச் செய்த அமெரிக்கா தற்போது, கியூபா நாட்டு எல்லையில் வசிக்கும் அமெரிக்கர்களைக் கொண்டு உள்நாட்டுக் கலவரத்தை அந்த நாட்டுக்கு அரசுக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளது. கியூபாவின் அரசை அமெரிக்காவால் இப்போது மட்டுமில்லை, எப்போதும் எதுவும் செய்துவிடமுடியாது. கியூபாவின் மீதுள்ள பொருளாதாரத் தடையை நீக்க 180-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா மட்டும் இன்னும் தடையாக உள்ளது. இந்த தடை விரைவில் நீக்கப்படவேண்டும். இந்திய அரசும் கியூபாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் தெரிவித்திட வேண்டும்" என்று பேசினார்.

முத்தரசன்

60 ஆண்டுகளைத் தாண்டியும் அமெரிக்காவின் பல்வேறு சதி வேலைகளைத் தகர்த்தெறிந்து தனி ஒரு நாடக நிலைத்து நிற்கிறது கியூபா. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கப்பலில் பலநூறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அந்த கப்பல் நுழைய எந்த நாட்டிலும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி, அவர்களுக்கு இடமும், மருத்துவ உதவியும் தந்தது கியூபா மட்டுமே. கல்வி, மருத்துவம் என்று பல்வேறு பிரிவுகளில் கியூபா தனித்துவம் மிக்க நாடக இருக்கிறது. அந்த நாட்டில் எந்த சர்வாதிகாரமும் என்றுமே எடுபடாது என்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.



source https://www.vikatan.com/government-and-politics/international/protesting-against-cuba-government-whats-usa-doing-in-cuba

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக