Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

சாலையில் மயங்கி சுயநினைவு இழந்த விவசாயி - 3 மாதங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி!

கோவை திருச்சி சாலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் மயக்க நிலையில் இருந்தார். இந்தத் தகவல் கிடைத்தவுடன் ஆதரவற்றவர்களை மீட்டு பராமரிக்கும் 'ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் அறக்கட்டளை' அவரை மீட்டு பராமரிப்பு இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கோவை விவசாயி

சுய நினைவு இல்லாமல் இருந்த அந்த முதியவருக்கு தொடர்ந்து 10 நாள்கள் சிகிச்சையளித்தனர். அதன் பலனாக முதியவர் கண் முழித்துள்ளார். ஆனால், அவருக்கு தனது முகவரியை சொல்ல தெரியவில்லை.

இதனால், ‘உடல்நிலை நன்கு தேறியவுடன் வீட்டுக்கு போகலாம்’ என்று முதியவருக்கு அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும், குடும்பத்தினரை நினைத்து முதியவர் தினமும் அழுதுள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு முதியவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கோவை விவசாயி

இதையடுத்து, முதியவர் கூறிய அடையாளத்தை வைத்து வெள்ளலூர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். முதியவர் கூறிய வழியில் தொடர்ந்து பயணிக்க, கடைசியில் அவரது வீட்டுக்கே சென்றுவிட்டனர்.

அவரைப் பார்த்ததும், முதியவரின் மனைவி, மகள்கள் ஆனந்த கண்ணீரோடு அழைத்து சென்றனர். அவர் வெள்ளலூர் இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 75 வயதான ரங்கசாமி ஓர் ஏழை விவசாயி என்று தெரிய வந்துள்ளது. மனைவி, நான்கு மகள்களோடு வசித்து வருகிறார்.

கோவை விவசாயி

ஒரு ஏக்கர் நிலத்தில் மழை பெய்தால் மட்டுமே, விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை. கடந்த ஏப்ரல் மாதம் வேலைக்காக வெளியில் சென்ற ரங்கசாமி மயங்கி விழுந்து சுய நினைவை இழந்தது தெரியவந்துள்ளது.

ஹெல்பிங் ஹார்ட் அறக்கட்டளை கணேஷ், "கோவை அரசு மருத்துவமனை அருகே சுய நினைவில்லாமல் ரங்கசாமி தாத்தா மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள இல்லத்தில் பராமரித்தோம். குளுக்கோஸ், கஞ்சி என்று ஆரோக்கியமான உணவுகளை கொடுத்தோம்.

கோவை விவசாயி

அதன் பலனாக அவர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தன்னைப் பற்றிய விபரங்களை கூறினார். தற்போது அவரை குடும்பத்தினருடன் இணைத்ததில் மிக்க மகிழ்ச்சி" என்று கூறினார்.

"தமிழ்நாடு முழுவதும் இவரை தேடினோம். காவல்நிலையத்தில் புகாரளித்தோம். எந்தத் தகவலும் இல்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று கூட தெரியவில்லையே என தவித்து போனோம்.

கோவை விவசாயி

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு அவரை பராமரித்து பத்திரமாக எங்களுடன் இணைத்த அந்த அறக்கட்டளைக்கு நன்றி" என்று ரங்கசாமி குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறினர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-farmer-joins-with-family-after-3-months

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக