Ad

புதன், 28 ஜூலை, 2021

`கட்சியில் நல்ல நிர்வாகிகள் இருக்கிறார்கள், ஆனால்..!’ - 10 நாளில் மாற்றத்துக்கு தயாராகும் அண்ணாமலை?

கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திராவில் மூன்று நாட்கள் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் தலைவரை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு செல்லும் முன்பு வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு ஆசிரம ஏக தர்மகர்த்தா சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜிடம் ஆசிபெற்றார். பின்னர் ஆசிரமத்தில் மதிய உணவு சாப்பிட்டார். மாநில தலைவர் பதவி ஏற்றபின்பு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு முதன் முதலில் வந்த அண்ணாமலைக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ், கட்சி நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிய அண்ணாமலை, "முழு தமிழ்நாட்டிலும் பா.ஜ.க மிகப்பெரிய எழுச்சியோடு வரவேண்டும் என்றால் கன்னியாகுமரி, நாகர்கோவிலில் எப்படி ஒரு உள் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளீர்களோ, அதை தமிழகம் முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். வீட்டு தொடர்பு நிகழ்ச்சியில் கூட, 25 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர் போடும் அளவுக்கு சக்தி கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிக்கு மட்டும்தான் இருக்கிறது. வேறு எங்கும் இதுபோன்ற சக்தி இல்லை.

வெள்ளிமலை சுவாமியிடம் ஆசிபெறும் அண்ணாமலை

ஆனால் நம்முடைய பணியானது 2026-ல் 150 சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பி பா.ஜ.க ஆட்சி கட்டிலில் அமர வேண்டும். நம்முடைய அனைத்து இலக்கும் அதுதான். அதற்காக கடுமையாக உழைப்போம். பொய் சித்தாந்தத்தை வேரறுப்போம். மத அரசியலை வைத்து சமீபத்தில் பாதிரியார் ஏதோ பேசினார். மிக தரக்குறைவாக, மிகவும் ஆபாசமாக பேசினார். சட்டம் தன் கடமையை செய்கிறது. இதேபோன்ற ஆட்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பயம் இல்லாமல் தலைதூக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த இரண்டு மூன்று ஆண்டிலே தமிழ்நாட்டில் நம் உள்கட்டமைப்பை 13,000 கிராமங்களிலும் கொண்டுசெல்வோம். கிராமத்தில் நம்முடைய சித்தாந்தத்தை நம்பி பயணிக்க ரெடியாக இருக்கக்கூடிய நண்பர்கள் அனைவரையும் இணைத்து உள்கட்டமைப்பை ரெடி செய்வோம். அடுத்த, ஒரு ஆண்டில் நமக்கு சட்டசபை, நாடாளுமன்ற எலெக்‌ஷன் பிரஷர் கிடையாது. எனவே ஒவ்வொரு செங்கலை வைத்து கட்டுவதுபோல இரண்டு வருடத்தில் நமக்கு உள் கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டால், வரும் காலம் நிச்சயமாக பா.ஜ.க-வின் காலம்" என்றார்.

வெள்ளிமலை ஆசிரமத்தில் அண்ணாமலை

கட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஓரங்கட்டப்பட்டுள்ளாரா, கட்சியில் பழைய நிர்வாகிகளை மாற்றும் எண்ணம் இருக்கிறதா என்பதுபோன்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, "இந்த கட்சியில் யாரும் யாரையும் ஒதுக்க முடியது. சித்தாந்தத்தின் அடிப்படையில் இருக்கின்ற கட்சி இது. பொன்னார் இப்போதுதான் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துவிட்டு பணி முடிந்திருக்கிறது. அடுத்து பொறுப்பு வரும். ஹெச்.ராஜா, பொன்னார், இல.கணேசன், சி.பி.ஆர் ஆகிய முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள். வானதி அக்கா அகில இந்திய மகளிரணி தலைவி ஆகியிருக்கிறார். சி.பி.ஆர் கேரள மாநில பொறுப்பாளராக இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் வரும். பொன்னாரை ஒதுக்கிட்டாங்க என்பதெல்லாம் பெரிய வார்த்தை. பொன்னார் நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறார். அனைவரும் சேர்ந்து ஒன்றாக பயணம் செய்து கட்சியை வளர்ப்போம்.

Also Read: `டெல்லி போகும்போது ஒரு பேச்சு; சென்னை வந்ததும் ஒரு பேச்சு!’ - தி.மு.க-வை சாடிய அண்ணாமலை

நான் தலைவராக வந்ததற்காக நிர்வாகிகளை மாற்றம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நிறைய நல்லவர்கள் இருக்கின்றார்கள். அதே சமயம் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் ஆங்காங்கே தேவைப்படுகிறது. புதியவர்களுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கணும். அதுபற்றி நிர்வாகிகள் மைய்யக்குழுவில் முடிவெடுக்க வேண்டும். பொதுச்செயலாளர்கள் எல்லாம் அடுத்த ஒரு பத்து நாட்களில் உட்கார்ந்து அதுகுறித்து முடிவு எடுப்போம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-state-leader-annamalai-press-meet-regarding-plans-of-bjp-in-upcoming-elections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக