Ad

சனி, 31 ஜூலை, 2021

பிவி சிந்துவின் தோல்விக்கு காரணம் என்ன... இடது கை சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலம் வெல்வாரா?

Form is temporary… But class is permanent என்பார்கள். ''2016 ரியோ ஒலிம்பிக்கின்போது இருந்த ஃபார்ம் சிந்துவுடம் இப்போது இல்லை. அதனால் சில்வர் சிந்து தங்கம் வெல்வது எல்லாம் நடக்காத காரியம்'' என டோக்கியோ கிளம்பும் முன்பே சிந்துவின் உயரத்தை மதிப்பிட்டு பலரும் முடிவுரை எழுதிவிட்டார்கள். ஆனால், தான் யார், தன் திறமை என்ன என்பதை நிரூபித்தார் சிந்து. காலிறுதிப்போட்டி வரை ஒரு செட் கூட தோற்காமல் ஆச்சர்யப்படுத்தினார் சிந்து. இந்த முறை நிச்சயம் தங்கம் வென்றுவிடுவார் என எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில்தான் அரையிறுதியில் நேர் செட்டில் வீழ்ந்துவிட்டார். சிந்துவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?!

தாய் சூ யிங்கிற்கு எதிரான ஆட்டத்தில் சிந்து 21-18, 21-12 என நேர் செட்களில் தோல்வியடைந்தது எல்லோருக்குமே அதிர்ச்சிதான். அதுவும் முதல் செட்டின் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்து சிந்துவை கொஞ்சம் கொஞ்சமாக துரத்திப்பிடித்து, பின்னர் இரண்டாம் செட்டில் நெருங்கவே முடியாத உயரத்துக்குப் போய் வீழ்த்திவிட்டார் தாய் சூ யிங்.

ஒரு செட்டில் கூட வீழ்த்தமுடியாத வீராங்கனையாக அரையிறுதிப்போட்டிக்குள் நுழைந்த சிந்துவால் ஏன் ஒரு செட்டைக்கூட கைப்பற்றமுடியவில்லை?

சிந்து

பாசிட்டிவ் மைண்ட் செட்டோடு ஆரம்பித்த சிந்து தனது பலமான இன் அவுட் சரியாகப் பார்ப்பதன் மூலமே முதலில் அதிக புள்ளிகளைப்பெற ஆரம்பித்தார். ஆனால், தாய் சூ யிங்கின் ஆட்டத்தில் பலம் கூடியதும் இந்த இன் அவுட் விஷயத்திலேயே தவறிழைக்க ஆரம்பித்தார் சிந்து. இதனால் முதலில் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிந்து, தன்னுடைய ரிதமை இழந்து ஒரு கட்டத்தில் தாய் சூ யிங்கோடு ஒவ்வொரு புள்ளியையும் பெறவே கடுமையாகப் போராட ஆரம்பித்துவிட்டார். அதன்பிறகு அவரால் தாய் சூ யிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தவே முடியவில்லை.

இரண்டாவது செட்டின்போது எதிர் திசைக்கு மாறியதால் சிந்துவுக்கு ஆதரவாக காற்றின்போக்கும் இருந்தது. இதனால் தனது பலமான ஸ்மாஷ் ஷாட்கள் அடித்து தாய் சூ யிங்கின்மீது ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்த்தபோது அதுவும் நடக்கவில்லை. தாய் சூ யிங் கோர்ட்டின் பாதியிலேயே நின்றுகொண்டு, அதிகமான டிராப் ஷாட்கள் ஆடினார். இதனால் ஸ்மாஷ் ஷாட்டுகளுக்கு வாய்ப்பில்லாமல் போனது. ஆனால், ஸ்மாஷ் ஷாட் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் சிந்து அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் பின்னால் அடிக்கும் ஆட்டமுறையிலேயே ஆடிக்கொண்டிருந்தார்.

சிந்து

தாய் சூ யிங் டிராப் ஷாட்களை துல்லியமாக ஆட, சிந்துவால் டிராப் ஷாட்களை சரியாக ஆடமுடியாமல் போனது. காலிறுதிப்போட்டியில் யமாகுச்சியை டிராப் ஷாட்கள் ஆடித்தான் தோற்கடித்தார் சிந்து. ஆனால், தாய் சூ யிங்கிற்கு எதிராக அப்படிப்பட்ட டிராப் ஷாட்களை அவரால் ஆட முடியாமல் போனதற்கு காரணம், ப்ரஷர். முதல் செட்டில் தாய் சூ யிங் துரத்திப்பிடிக்க ஆரம்பித்ததுமே அழுத்தத்தை உணர ஆரம்பித்துவிட்டார் சிந்து. அங்கிருந்துதான் சிந்துவின் தோல்விக்கான பயணம் தொடங்கியது.

இரண்டாவது செட்டில் எதிர்பக்கம் போய் நின்றும் தனது வழக்கமான ஆட்டத்தை ஆடமுடியாமல் சிந்து திணற காரணமே அந்த அழுத்தம்தான். சில்வர் சிந்து தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில்வர் சிந்து இன்று வெண்கலம் வெல்வாரா என சூழல் மாறியிருக்கிறது.

பிவி சிந்து

இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கும் வெண்கலத்துக்கான போட்டியில் ஹீ பிங்ஜியாவோ (He Bingjiao) எனும் சீன வீராங்கனையுடன் மோத இருக்கிறார் சிந்து. டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து எதிர்கொள்ள இருக்கும் முதல் இடது கை போட்டியாளர் இந்த பிங்ஜியாவோ. மின்னல் வேகத்தில் ஆடக்கூடியவர் இவர். அதனால் இன்றும் சிந்துவுக்கு கடுமையான போட்டி இருக்கிறது. ஆனால், பிங்ஜியவோவை வீழ்த்த புது வியூகம் அமைத்து சிந்து களமிறங்குவார் என எதிர்பார்ப்போம். வெண்கலம் வெல்ல வாழ்த்துவோம்!



source https://sports.vikatan.com/olympics/will-indias-pv-sindhu-win-bronze-medal-in-tokyo-olympics-beating-he-bingjiao

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக