பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
தினமும் மாலை ஐந்து மணிக்குத் தொடங்கி இருட்டு கட்டுவதற்குள் பத்து கிலோமீட்டர் வாக்கிங் சென்று வீடு திரும்புவது ஜீவனுடைய வழக்கம். இன்றும் அப்படித்தான் நடக்கத் தொடங்கினான். சரியாக இரண்டு கிலோமீட்டர் தாண்டி நடந்துகொண்டிருக்கும்போது புளிய மரம் ஒன்றின் அருகே நின்றான். காரணம் அங்கு அழகழாய் ஐந்து நாய்க்குட்டிகள் மாறிமாறி தன் அம்மா நாயின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்தன. அதை பார்த்ததும், போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டால் லைக்ஸ் வரும் என்ற எண்ணம் அவனுக்குள் பிறந்தது. அவன் பார்ப்பதை பார்த்த தாய் நாயோ குட்டிகளிடமிருந்து விலகி விலகி ஓடியது. பிறகு எவ்வளவு கேவலமானவன் நீ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டான். அன்று காலையில் லதா அக்காவும் நாகராஜ் அண்ணனும் அவனை ஒருசேர வழிமறித்து "எங்க வீட்ல இருந்த நாய் காணாம போயிருச்சுப்பா... நீ எங்கயாச்சும் நாய்க்குட்டிய பாத்தின்னா சொல்லுப்பா... புடிச்சிட்டு வந்துரலாம்..." என்று சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.
ஐந்து குட்டிகளில் எந்தக் குட்டி கடுவன் குட்டி எந்தக் குட்டி பொட்டை குட்டி என்று அதன் அருகே சென்று பார்க்க முற்பட்டான். ஆனால் அவனால் அந்த நாய்கள் அருகே செல்ல முடியவில்லை. காரணம் அந்த இடத்தில் வீசிய நாற்றம் அப்படி. மெயின் ரோட்டில் இருக்கும் அந்த இடத்தில் தான் அந்த ஊர்வாசிகள் குப்பையைக் கொட்டுவார்கள். அதன் அருகிலயே நாற்றத்தையும் பொறுத்துக்கொண்டு நாற்பதை தாண்டிய தம்பதியினர் அமர்ந்து அம்மிக்கல்லையும் செக்குக்கல்லையும் கொத்திக் கொண்டிருப்பர். ஆனால் அம்மிக் கற்கள் மட்டும் கடந்த சில நாட்களாக தென்பட்டனே ஒழிய அந்த தம்பதியினரை
இப்போது காணவில்லை. அவர்கள் இருந்திருந்தால் அந்த நாய்களுக்கு ஒருவேளை நல்ல உணவு கிடைத்திருக்கலாம்!?
"குப்பையில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் இந்த நாயை யாராவது வீட்டுக்கு எடுத்துட்டு போயி வளப்பாங்களா..." என்று நினைத்த அவன், தாய் நாயின் கண்களை சில நொடிகள் உற்றுப் பார்த்தான். அந்த நாயும் அவனுடைய கண்களையே பார்த்தது. சரியான உணவு கிடைக்காததால் மடி வற்றிப் போய் பால் இல்லாமல் தன் ரத்தத்தை குட்டிகளுக்கு கொடுத்து காப்பாற்றி வருகிறது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அவனிடமோ மூன்று ரூபாய் பிஸ்கட் வாங்கிப் போட கூட காசு இல்லை. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நடக்கத் தொடங்கினான்.
தாய் நாய் அவன் பின்னாடியே நடந்து வந்தது. குட்டிகள் ஐந்தும் மரத்தடியிலே சோகத்துடன் அமர்ந்துகொண்டன. அவன் பேண்ட் பாக்கெட்டை மோப்பம் பிடிக்கும் வகையில் அவனிடம் நெருங்கி வந்தது தாய் நாய். அது தன்னை நெருங்கி வர வர அது கடித்துவிடுமோ என்கிற பயம் அவனுக்குள் மின்சாரம் போல பாய்ந்தது. "ச்சூ... போ..." என்று அவன் விரட்டியும் அது அவனை விடுவதாய் இல்லை. பிறகு சாலையோரம் கிடந்த பாலீத்தீன் கவரை பார்த்ததும் அதில் எதாவது உணவு கிடைக்குமா என்று அதை முகர்ந்து பார்த்து எதுவும் கிடைக்காத ஏமாற்றத்தில் புளியமரத்தடிக்கே மீண்டும் சென்றது தாய் நாய்.
அவன் வாக்கிங் போகாமல் வீட்டிற்குத் திரும்பினான். அவனுடைய அம்மா, ஜாக்கெட்டுக்கு கொக்கி கட்டிக் கொண்டிருந்தார்.
"அம்மா... அம்மிக்கல் கொத்துவாங்கள்ல்ல... அந்த இடத்துல அஞ்சு நாட்டு நாய்க்குட்டி இருக்குது... ரெண்டு எடுத்துட்டு வரேன்... ஒன்னு நாம வச்சிக்கலாம்... இன்னொன்ன லதா அக்கா வீட்டுக்கு கொடுத்துரலாம்... ஆனா என்ன அந்த குட்டி நாய்ங்களோட அம்மாவ தான் ஏமாத்த முடில... பின்னாடியே வருது... " என்றான். இவ்வளவு நேரம் மௌனமாக இருந்த அம்மா, "எதுக்கு நாய்க்குட்டி... தாய்யின்னா அப்டித்தான் இருக்கும்... நீ உன் வேலை என்னமோ அத மட்டும் பாக்க வேண்டியதான... எதுக்கு குப்பைல இருக்க நாய்ங்க மேல கருணை காட்டுற... குப்பைல தான் அதுங்களுக்கு நிறைய திங்க கிடைக்குதுனு அதுங்க அங்கயே சுத்துது... ரோட்ல எத்தனை பேர் போயிட்டு வந்துட்ருக்காங்க அவிங்களுக்குலாம் இல்லாத கருணை உனக்கு எதுக்கு... அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு மனசாட்சி இல்லையா... அவிங்கலாம் கருணை இல்லாமலா வாழ்றாங்க... குப்பை கொட்ட தெரிஞ்சவங்களுக்கு சோறு போட தெரியாதா... நாய்ங்கலாம் எப்படியும் பொழைச்சிக்குங்க... நீ ஒன்னும் அதுங்களுக்கு ஆக்கிப் போட தேவையில்ல..." என்றார் அம்மா.
அம்மாவின் வார்த்தைகளை கேட்டதும் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது. அவர் ஆசையாக பெயரிட்டு வளர்த்த "கண்மணி" என்கிற ரோஸ் செடியை அவன் வேரோடு பிடுங்கி பக்கத்து வீட்டு சுட்டி பாப்பா பிறந்தநாளுக்கு பரிசாக கொடுத்தபோது "எங்குழந்தய எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டியே..." என்று அழுதவர் அவன் அம்மா. அந்தக் கோபத்தில் அவனுடன் மூன்று நாட்கள் பேசாமலும் இருந்தார். அவரா இப்படி கருணை இல்லாமல் பேசுகிறார் என்று அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. ஒருமுறை சாலையில் பறக்க முடியாமல் இருந்த சிறகுகள் நீண்டு வளராத குருவி ஒன்றை ஆசையாக தூக்கி அதன் தலையில் முத்தமிட்டு உள்ளங்கைகளுக்குள் பொத்தியபடி வீட்டிற்க்கு எடுத்து வர அவர் பின்னாடியே நூற்றுக்கணக்கான குருவிகள் கீச்சொலிகளை எழுப்பியபடி பறந்தும் நடந்தும் வந்தன. குருவிகளின் அலறல் சத்தம் பொறுக்க முடியாத அம்மா அதை சாலையோரம் விட்டுவிட்டார். அது உயர பறக்க முடியாமல் குறைவான தூரம் பறந்தும் நடந்தும் சென்றது. ஒருவேளை அந்த சம்பவம் அம்மாவை மாற்றியிருக்கலாம். தாய் சேய்யை பிரிக்க வேண்டாம் என்பது அவருடைய கருத்தாக இருக்கலாம் என்று அவனுக்கு தோன்றியது.
பகலுக்கான அடையாளங்கள் தொலைந்து நன்றாக இருள் சூழ்ந்திருந்தது. பௌர்ணமி வெளிச்சம் என்பதால் இருட்டிலும் எல்லாம் ஓரளவுக்கு அவன் கண்ணுக்குத் தென்பட்டது. அம்மாவிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் "அந்த நாய்ங்களாம் என்ன ஆச்சோ..." என்று நினைத்தபடியே வீட்டிற்கு வெளியே வந்தான். அவன் முற்றிலும் எதிர்பாராத வகையில் அந்த தாய் நாய் கலங்கிய கண்களுடன் தன் குட்டிகளை கூட்டிக்கொண்டு அவன் வீட்டின் முன்பு வந்து நின்றது. அவனுக்கு மனம் பொறுக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு குண்டா பழையசோற்றில் தயிரை ஊற்றி பிணைந்து இரண்டு தட்டில் ஊற்றி வைத்தான். ஒரு தட்டில் தாய் நாயும் இன்னொரு தட்டில் ஐந்து குட்டிகளும் மாறிமாறி பசியாறிக் கொண்டிருந்தன. சில நிமிடங்களில் இரண்டு தட்டுகளும் காலி தட்டுகளாக மாறின. அவன் மீண்டும் அந்த தாய் நாயின் கண்களை பார்த்தான். அவனுடைய ஆன்ம உணர்வுகளை புரிந்துகொண்ட அந்த தாய் நாய் அவன் போட்ட ஒருவேளை சோற்றுக்கு நன்றிக்கடனாக ஒரு ஆண் குட்டியை அவன் வீட்டு வாசலிலயே விட்டுவிட்டு மீதமிருக்கும் நான்கு குட்டிகளுடன் நடையைக் கட்டியிருந்தது. பொறுமையாக நடந்து போன அந்த தாய் நாயின் தலையைச் சுற்றி நூற்றுக்கணக்கான மின்மினிப்பூச்சிகள் பறந்ததை வியந்து பார்த்தான் ஜீவன்.
- மா. யுவராஜ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-short-story-about-stray-dog
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக