தங்கள் குழந்தையினை சுமக்க ஒரு வாடகைத் தாயைத் தேடி இந்தியா வருகிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியரான ஜான் - சம்மர். டிரைவர் பானுபிரதாப்பின் உதவியுடன் ஹோட்டலில் நடனமாடும் மிமியை அதற்குச் சம்மதிக்க வைக்கிறார்கள். மும்பைக்குச் சென்று நடிகையாக நினைக்கும் மிமிக்குப் பணம் தேவைப்படுவதால் 20 லட்சம் ரூபாய்க்கு வாடகைத் தாயாக இருக்கச் சம்மதிக்கிறாள். மிமி கர்ப்பமான பாதியில் அமெரிக்க தம்பதி, குழந்தை வேண்டாம் என அமெரிக்காவுக்கே பறந்துவிட, மிமி அதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படிச் சமாளித்தாள் என்பதே படம் சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை.
2011-ம் ஆண்டு, மராத்தியில் வெளியான 'Mala Aai Vhhaychy!' படம் தேசிய விருது பெற்றது. 2013-ம் ஆண்டு அதை தெலுங்கில் சிங்கிதம் சீனிவாசராவ் 'வெல்கம் ஒபாமா' என்ற பெயரில் ரீமேக் செய்தார். தற்போது 10 வருடங்கள் கழித்து அதே மராத்தி படம் இந்தியில் 'மிமி'யாக ரிமேக்காகி இருக்கிறது. ஒளிப்பதிவாளரும் மராத்திய இயக்குநருமான லக்ஷ்மன் உடேகரின் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது பாலிவுட் படம் இது. முதல் படமான 'லுக்கா சுப்பி'யில் நடித்திருந்த க்ரித்தி சனோனே இதிலும் நாயகி. கார் டிரைவர் பானுபிரதாப் பாண்டேவாக சமீபமாகப் பாலிவுட்டில் தனி முத்திரைப் பதித்து வரும் பங்கஜ் திரிபாதி நடிக்க, சாய் தம்ஹான்கர், மனோஜ் பஹ்வா, சுப்ரியா பதக் என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது.
படம் ஆன்லைனில் லீக்காகி விட்டதால் குறிப்பிட்ட தேதிக்கு நான்கு நாள்களுக்கு முன்னரே 'மிமி'யை டெலிவரி செய்திருக்கிறார்கள்.
ஜாலி, கேலி டிராமாவாக கிரேஸி மோகன் டைப் வசனங்களுடன் கிச்சு கிச்சு மூட்டும் கதையில் சீரியஸான அரசியல் ஒன்றையும் பேசியிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மன் உடேகர். படம் முழுவதையும் தாங்கி நிற்கும் மிமியாக க்ரித்தி சனோன் ஈர்க்கிறார். இதுவரை பெரும்பாலும் ரொமான்டிக் படங்களில் மட்டுமே தலைகாட்டி வந்தவருக்கு தன் கரியரின் கிராஃபை மாற்றியமைக்கும் வாய்ப்பு. அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
துறு துறு பெண்ணாக நடிகையாகும் நினைப்புடன் ரன்வீர் சிங்கை நினைத்து கனவு காண்பது, சுயநலத்துக்காக வாடகைத் தாயாக ஒத்துக்கொள்வது, பின் அதனால் ஏற்படும் சிக்கல்களைச் செய்வதறியாது போராடிச் சமாளிப்பது என ஒரு கதாபாத்திரத்தின் வெவ்வேறு படிநிலைகளை, அதன் எண்ண ஓட்டங்களைக் கச்சிதமாகப் பிரதிபலித்திருக்கிறார்.
படத்தின் மையம் க்ரித்தி என்றால், மற்ற அனைத்துமே பங்கஜ் திரிபாதிதான். படம் பெரும்பாலும் கலகலப்புடன் செல்வது அவர் செய்யும் சேட்டைகளால்தான். அதிக உணர்வுகளை வெளிக்காட்டாமல் அண்டர்பிளே செய்து, காமெடி வசனங்களைக்கூட சீரியஸாகப் பேசி கலக்கியிருக்கிறார். முஸ்லிமாக வேடமிடும் அவரிடம், "ஒரு நாளைக்கு எத்தனை முறை நமாஸ் செய்வ?" என்று கேட்பவரிடம் "10 தடவை" என்று உளறிவிட்டு, "நான் இரண்டு நாள் கணக்கைச் சேர்த்து சொல்லிட்டேன்" எனப் பல்லைக் கடிப்பது, 'ஜெய் ஶ்ரீராம்' போட்டிருக்கும் காரை தன் வண்டி எனச் சொல்லிவிட்டு, பின்னர் செகண்டு ஹேண்ட் எனச் சொல்லிச் சமாளிப்பது, மனைவி மற்றும் அம்மாவைச் சமாளிக்கப் போராடுவது என அதகளம் செய்திருக்கிறார்.
அவரின் அட்டகாசங்கள் நமக்கு ஏனோ மௌலியையும், மலையாள நடிகர் சீனிவாசனையும் ஒரு நிமிடம் கண்முன் நிறுத்துகின்றன. அதேபோல், "நான் ஒரு டிரைவர். என் பேசஞ்சர் அவங்க இடத்துக்கு ரீச்சாகற வரைக்கும் நான் கூட இருக்கணும், பாதியில விட்டுட்டு போக முடியாது" என மிமியிடம் அவர் சொல்லும் இடம் சென்டிமென்ட் நெகிழ்ச்சி!
க்ரித்தியின் தோழியாக, படத்துக்குப் பக்கபலம் சேர்த்திருக்கிறார் சாய் தம்ஹான்கர். குழந்தையைத் தான் வளர்த்துக் கொள்கிறேன் என அவர் சொல்லும் இடத்தில், "உன்னை ஊர் என்ன சொல்லும்?" என மிமி கேட்க, "இதே உலகம் என் புருஷன் என்ன டைவர்ஸ் பண்ணப்ப என்ன சொல்லிச்சு?" எனப் பதில் கேள்வி கேட்கும் இடத்தில், சமுதாயத்தில் நிலவும் ஆண்-பெண் பாகுபாடு குறித்த உண்மை நம் முகத்தில் அறைகிறது. இசைக் கலைஞராக, மிமியின் அப்பாவாக மனோஜ் பஹ்வாவும், அம்மாவாக சுப்ரியா பதக்கும் சரியான சாய்ஸ். ராஜாக நடித்திருக்கும் சிறுவன் தன் மழலையால் ஈர்க்கிறான்.
நடிப்பு ரீதியாக யாரும் குறையேதும் வைக்கவில்லை என்றாலும், பல இடங்களில் அவை ஓவர் ஆக்ட்டிங் நாடக பாணியாகத் தெரிவது உறுத்தல். குறிப்பாக இரண்டாம் பாதியில், எண்ணற்ற கதாபாத்திரங்கள் ஒரே அறையில் கூடி உண்மையைத் தெரிந்துகொள்வது கலகல டிராமா எனினும் ஒரு சில கதாபாத்திரங்கள் கொடுத்த காசுக்கு மீறி நடித்துவிட்டதான ஃபீல் எட்டிப் பார்க்கிறது.
ராஜஸ்தானில் மிமி வாழும் ஊர், என்னதான் பழங்காலமானது என்றாலும், 'வாடகைத் தாய்' என்ற விஷயம் கூடவா அங்கிருக்கும் யாருக்கும் தெரியாமல் இருக்கும்? முஸ்லிம் தோழி, இந்துப் பெண் நாயகி என பல இடங்களில் சமத்துவம் பேசினாலும், சிறுபான்மையினர் குறித்த பொதுமைப்படுத்துதலும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. காமெடிக்காக என்றாலும் அதைத் தவிர்த்திருக்கலாமே சாப்?!
"நான் இப்ப அம்மாவானாதான், பாலிவுட்ல அம்மா ரோல்ல இருந்து தப்பிச்சு ஹீரோயினா மட்டுமே நடிக்க முடியும்" எனப் பல வசனங்கள் கதையை விட்டு வெளியே செல்லாமல், அதன் போக்கிலேயே சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருப்பது சிறப்பு. இருந்தும் ஒரு சில இடங்களில் நிகழும் திருப்பங்களைப் பெரியதொரு பிரச்னையாகக் காட்டிவிட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே அதை வசனங்கள் மூலம் காமெடி கன்டென்ட்டாக மாற்றிவிடுவது கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்னைகளை உப்புச் சப்பில்லாமல் ஆக்கிவிடுகிறது. காமெடிக்கும் சென்டிமென்ட் டிராமாவுக்கும் இடையேயான மீட்டரை இன்னமும் சோதித்து துல்லியமாகப் பிடித்திருக்கலாம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'பரம் சுந்தரி' பாடல் ஏற்கெனவே படு வைரல். மற்ற பாடல்களிலும் பின்னணி இசையிலும் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் இசைப் புயல். அவரின் குரலிலேயே ஒலிக்கும் 'ரிஹாயி தே' பாடலும் அதில் இடம்பெறும் காட்சிகளும் உணர்ச்சிக் குவியல்! ஆகாஷ் அகர்வாலின் ஒளிப்பதிவும், மனிஷ் பிரதனின் படத்தொகுப்பும் சுவாரஸ்யமாக நகரும் திரைக்கதைக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.
Also Read: சார்பட்டா பரம்பரை: விளையாட்டில் அரசியல், அரசியலில் விளையாட்டு! பா.இரஞ்சித் - ஆர்யா கூட்டணி வென்றதா?
பெரும் கனவுகளுடன் திரியும் மிமி, ஒரு குழந்தைக்காக தன் கனவை விடுத்து, ஏன் சிறையில் அடைந்துகொள்கிறாள் என்பதற்கு இன்னமும் வலுவான காரணங்களைச் சுட்டிக்காட்டியிருக்கலாம். ஒரு கட்டத்தில் படம், கருவைக் கலைப்பதே கூடாது என்ற விவாதத்துக்குட்பட்ட கருத்தை நோக்கிச் சென்றுவிட்டு, பின்னர் அதிலிருந்து விலகி, குறைகள் இருக்கிறது என்பதற்காகவே ஒரு குழந்தையை கலைப்பது என்ன விதமான நியாயம் என்று கேள்விகேட்டுச் சரியான பாதைக்குத் திரும்புகிறது. படித்த அமெரிக்கர்கள் கூட செகண்டு ஒப்பினியன் பெற வேண்டும் என்பதையோ, ஃபால்ஸ் பாசிட்டிவ் என்ற விஷயம் குறித்தோ தெரியாமல் இருப்பது லாஜிக் நெருடல்!
இருந்தும் வாடகைத் தாய் சந்திக்கும் பிரச்னைகளை நீண்ட காலம் கழித்து ஓர் இந்தியப் படம் பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. படம் முன்வைக்கும் அரசியலில் ஆங்காங்கே மாற்றுக் கருத்துகள் இருப்பினும் வாடகைத் தாய் vs குழந்தையின் தாய் என்ற விவாதத்தில், சட்டத்தின் பார்வையை விடுத்து உணர்வுகளையும் மதித்து ஒரு தீர்வைச் சொல்லுங்கள் என்று கேட்கிறாள் இந்த 'மிமி'. இதன் மூலம் படம் துவங்கி வைக்கும் உரையாடலும், அது தரும் தீர்வும், குறைகளை மறக்கவைத்து நம்மை ஈர்க்கின்றன.
source https://cinema.vikatan.com/bollywood/netflix-release-kriti-sanons-mimi-movie-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக