கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்குத் தடை விதித்தார். தொடர்ந்து, லாட்டரி தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்கள் தங்கள் முகாமை கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மாற்றிக்கொண்டனர். இந்தநிலையில்தான், தற்போதைய தி.மு.க ஆட்சியில் லாட்டரி மீதான தடையை நீக்குவது பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. இது பற்றி ஜூ.வி இதழில் ‘கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்’ பகுதியிலும், கவர் ஸ்டோரியிலும் எழுதியிருக்கிறோம். அதைப் படித்துவிட்டு நமது அலுவலகத்துக்கு வாசகர் ஒருவர் போன் செய்து பேசினார்... ‘‘தமிழக அரசு லாட்டரி தடையை நீக்குவது இருக்கட்டும்... சென்னை புறநகரில் பூட்டான், கேரளா லாட்டரி பிசினஸ் ஜரூராக நடப்பது தெரியுமா? நான் சொல்லும் இடத்துக்கு வாருங்கள்’’ என்று அழைத்தார்.
சென்றோம், நம்மை போரூர் சிக்னல் அருகே அழைத்துச் சென்றார். சிக்னல் தாண்டி, மின் வாரிய அலுவலகத்துக்கு அருகில் ஒரு டீக்கடை இருந்தது. உள்ளே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் டேபிள், சேர் போட்டு கையில் ஒரு பில் புக்குடன் அமர்ந்திருந்தார். டீ குடிப்பதுபோல வரிசையாக உள்ளே செல்பவர்கள், அவரிடம் பணம் கொடுத்து நம்பர்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த நபரும் பில் புக்கில் நம்பர் எழுதி கிழித்துக் கொடுத்தார்.
அடுத்து, முகலிவாக்கத்தை அடுத்துள்ள ஏரியாவுக்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்குள்ள சிறிய அலுவலகத்தில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் நம்மை ஏற இறங்க பார்க்கவே, ‘‘ஃப்ரெண்டுங்க’’ என்று சொல்லிச் சமாளித்தார். நாம் அங்கிருந்த 15 நிமிடங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் நம்பரைச் சொல்லி, பணத்தைக் கட்டி பில்லை வாங்கிச் சென்றார்கள். நம்மை அழைத்துச் சென்ற வாசகரும் பல்வேறு நம்பர்களைச் சொல்லி 500 ரூபாய்க்கு லாட்டரி வாங்கினார். நாமும் வாங்கலாம் என மெதுவாக பேச்சுக் கொடுக்க... ‘‘புது ஆளுங்களுக்கெல்லாம் சீட்டு கொடுக்கறதில்லை’’ என்றார்கள்.
ஏ, பி, சி மூன்று வரிசை
வெளியே வந்த பிறகு, “லாட்டரியில் எப்படி பணம் கட்டுகிறார்கள், எப்படிப் பரிசுத்தொகை கொடுக்கிறார்கள்?” என்று வாசகரிடம் கேட்டோம். ‘‘ஏ, பி, சி என்று மூன்று வரிசைகளில் போர்டுகள் உள்ளன. சுருக்கமாக ‘மூணு சீட்டு’ லாட்டரி என்று சொல்வார்கள். ஒவ்வொரு வரிசையிலும் ஒன்று முதல் சைபர் வரை எண்கள் மாறி மாறி எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் தலா ஒரு நம்பரைக் கணித்து சொல்லி பணம் கட்டலாம். ஒரு வரிசையில் ஒரு நம்பர் மட்டும் கட்டினால் 50 ரூபாய், இரு வரிசைகளில் இரு நம்பர்களைக் கட்டினால் 60 ரூபாய், மூன்று வரிசைகளில் மூன்று நம்பர்களையும் கட்டினால் 70 ரூபாய் என வசூலிக்கிறார்கள். காலையில் பணம் கட்டிவிட்டால் மாலை 3 மணிக்கு கேரள லாட்டரிக்கான ரிசல்ட்டும், இரவு 7 மணிக்கு பூட்டான் லாட்டரி ரிசல்ட்டும் இணையதளத்தில் வந்துவிடும்.
ரிசல்ட்டில் மொத்தமாக மூன்று நம்பர் வரும். ஏ, பி, சி வரிசைகளில் யாரேனும் ஒருவர் கணித்த மூன்று நம்பரும் ஒரே வரிசையில் விழுந்திருந்தால், 28,000 முதல் 35,000 ரூபாய் வரை பரிசுத்தொகை கிடைக்கும். அதில் முதல் இரண்டு நம்பரோ, இரண்டாவது மற்றும் மூன்றாவது நம்பரோ, கணித்ததுபோல அமைந்திருந்தால் 1,000 ரூபாய் கொடுப்பார்கள். ஒரேயொரு நம்பர் விழுந்தால், 100 ரூபாய் தருவார்கள். இங்கு மட்டுமல்ல... அய்யப்பன்தாங்கல், குன்றத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் இந்த லாட்டரி விற்பனை கனஜோராக நடக்கிறது” என்றவர், இந்த லாட்டரியின் பாதிப்புகள் பற்றியும் விவரித்தார்...
நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்கள்!
“மேலோட்ட மாகப் பார்த்தால், இது சாதாரண சூதுபோலத் தெரியும். எப்படியும் பரிசை அடித்துவிட வேண்டும் என்று ஒருவர் நான்கைந்து வரிசைகளில் மூன்று எண்களில் பணம் கட்டுவார்கள். நான்கு வரிசை என்று வைத்துக் கொண்டால்கூட 280 ரூபாய் வருகிறது. ஒரு முறை பரிசு விழுந்துவிட்டால், மொத்தமாக மீண்டும் மீண்டும் பணம் கட்டி போதைபோல இதில் மூழ்கிவிடுகிறார்கள். பரிசு விழவில்லை யென்றாலும், அடுத்த முறையாவது விட்டதைப் பிடித்துவிட வேண்டும் என்று கடன் வாங்கி மேலும் மேலும் கட்டி கடனாளியாகிறார்கள். மதுபோதையைவிட கொடிய போதை இது... கொரோனா ஊரடங்கு காலத்தில், தொழில் எதுவுமில்லாத நிலையிலும் இந்தச் சூதாட்டம் மட்டும் முடங்கவில்லை. இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன...” என்றார் கவலையுடன்.
நம்பர் லாட்டரி பிசினஸ் நடப்பது பற்றி சென்னை காவல்துறை கூடுதல் ஆணையாளர் ஒருவரைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “என் பெயர் வேண்டாம், விசாரித்துவிட்டு அழைக்கிறேன்” என்றவர், சில மணி நேரங்களில் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்... “பல இடங்களில் போலீஸ் மாமூல் வாங்கிக்கொண்டு இதை அனுமதிக்கிறார்கள் என்று தகவல் வந்திருக்கிறது. லாட்டரி தொழில் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காலத்திலும்கூட இந்த நம்பர் லாட்டரி தடை செய்யப்பட்ட வணிகம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார் உறுதியாக!
தமிழகம் சூதாட்டக்களம் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை தி.மு.க அரசுக்கு இருக்கிறது!
source https://www.vikatan.com/news/general-news/lottery-affected-to-poor-families
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக