கடந்த 10 வருடங்களாகச் செங்கல்பட்டு பகுதியில் `திருக்குறள் நினைவாற்றல் பயிலகம்’ நடத்தி வருகிறார் `திருக்குறள்’ எல்லப்பன். திருக்குறள் படிப்பதற்காகவே சிறுவர்கள் எப்போதும் அங்கு நிறைந்திருக்கிறார்கள். வீடு முழுக்கவே குழந்தைகளின் குரல்களில் குறள்கள் ரீங்காரமிடுகின்றன. பழம் நிறைந்த ஆலின் நிழலில் நின்றால் கேட்கும் பறவைகளின் ஓசை போல, சிறுவர்கள் திருக்குறளை இனிமையாக வாசிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
ஒரு மாலைப் பொழுதில் எல்லப்பன் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். திருக்குறளுக்கும் தனக்குமான தொடர்பை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ``என்னோட பூர்வீகம் மேல்மருவத்தூர் பக்கத்துல இருக்குற ஆத்தூர் கிராமம். படித்து வளர்ந்தது எல்லாமே சென்னை சிந்தாதிரிப்பேட்டையில. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டுக்கு குடிபெயர்ந்தோம்.
அப்போது சென்னையில் உள்ள மாணவர் நகலகங்களுக்கு டாட் மேட்ரிக்ஸ் பிரின்டர் ரிப்பன் சப்ளை செய்யும் வேலையைச் செய்துவந்தேன். மாணவர் நகலகத்தின் உரிமையாளர் அருணாசலம், தீவிர தமிழ்ப் பற்றாளர். ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழிலேயே பேசுவார். எனக்கும் அப்படிப் பேச வேண்டும் எனத் தோன்றியது. பிறகு, அதுபோலவே நானும் பேசப் பழகிக் கொண்டேன். தமிழின் மீது பற்று ஏற்பட அதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
2001-ம் ஆண்டில் மயிலாப்பூரில் உள்ள என் மாமா வீட்டுக்குச் சென்றேன். அப்போது, என் மகனுக்காகத் திருக்குறள் புத்தகம் ஒன்றை அவர் கொடுத்தார். என் மகன் ஐந்தாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தான். அதனால் நானே அந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் என முடிவெடுத்தேன். செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு ரயிலில் செல்லும்போது திருக்குறளைப் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் மூன்று நாள்களுக்கு ஒரு அதிகாரம்தான் மனப்பாடம் செய்ய முடிந்தது.
படிப்படியாக ஒரு நாளுக்கு மூன்று அதிகாரம் மனப்பாடம் செய்யும் அளவுக்கு முன்னேற்றம் இருந்தது. ஆறு மாத ரயில் பயணத்தில் மொத்த திருக்குறளையும் படித்து முடித்துவிட்டேன். 1,330 குறள்களையும் மனப்பாடம் செய்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நமக்கென்று ஓர் அடையாளம் வேண்டும் என யோசித்தேன். பிறகு, திருக்குறளை தலைகீழாகச் சொல்லப் பயிற்சி எடுத்தேன்.
குறள் சொன்னால் பொருள் சொல்வேன். பொருள் சொன்னால் குறள் சொல்வேன். அதிகாரம், அதிகார எண், திருக்குறள் எண், ஒவ்வொரு எழுத்தாக தலைகீழாக குறல் சொல்லுதல், பக்கவாட்டில் (7, 17, 27, 37) எனச் சொல்லுதல், பக்கவாட்டில் பின்பக்கமாகச் சொல்லுதல் (96, 86, 76, 66), ஒன்று விட்டு ஒன்று சொல்லுதல் (3, 5, 7, 9), உதடு ஒட்டாத குறள் சொல்லுதல், உதடு ஒட்டும் குரல் சொல்லுதல் என 31 வழிமுறைகளில் திருக்குறளைச் சொல்வேன்” என்றவர் நம்மிடம் திருக்குறள் புத்தகத்தைக் கொடுத்து அவற்றைச் சோதனை செய்யச் சொன்னார்.
அவர் சொன்னபடியே, எந்த முறையில் கேட்டாலும் குறள் சொல்லி அசத்தியவர் தொடர்ந்து பேசினார். ``பத்து வருடங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலமாக வேலூர் சிறைச் சாலையில் நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னுடன் வந்திருந்த சமூக ஆர்வலர் ஒருவர், 1330 திருக்குறளையும் சிறையில் உள்ள கைதிகளில் யாராவது ஒப்புவித்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு கொடுப்பதாகச் சொன்னார். மூன்று மாதம் கழித்து வேலூர் சிறைச்சாலையிலிருந்து அழைப்பு வந்தது. ஒரு கொலைக் குற்றவாளி 1,330 குறளையும் சொன்னார். அவர் சொல்லும்போது ஒரு இடத்தில் சற்றுத் தடுமாறினார். அப்போது நான் அடுத்த வார்த்தையை எடுத்துக் கொடுத்தேன்.
`நீங்க எதுவும் சொல்லாதீங்க… அவரே முழுமையாகச் சொல்வார்’ எனப் பின்பக்கமாக இருந்து ஒரு குரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன். பேரறிவாளன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். அந்தக் கைதிக்குப் பாராட்டு விழா எடுத்து, நாங்கள் சொன்னது போல பத்தாயிரம் ரூபாய் கொடுத்தோம். விழாவுக்குத் தலைமை தாங்கிய வி.ஐ.டி நிறுவனரும் உற்சாகம் அடைந்து அவருக்குக் கூடுதலாகப் பத்தாயிரம் கொடுத்தார்” என்றவர்,
``என்னிடம் நேரடியாகத் திருக்குறள் பயின்றவர்களில் இதுவரை 180 பேர் தமிழக அரசால் சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். என்னிடம் பயின்றவர்கள் ஆசிரியர்களாகவும் இருந்து திருக்குறளைப் பயிற்றுவிக்கிறார்கள். இதைக் கணக்கில் கொண்டால் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் அரசு சான்றிதழ் பெற வைத்திருக்கிறோம். 1,330 குறளையும் ஒப்புவித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக நான் 30 ரூபாய் கொடுப்பேன்.
Also Read: தினம் ஒரு திருக்குறள், தினம் ஓர் ஓவியம்... இன்ஸ்டாகிராமில் இயலின் இனிய முயற்சி! #SheInspires
அந்தப் பரிசை வாங்குவதற்காகவே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு படிப்பார்கள். எனக்கு 58 வயதாகிவிட்டது. திருக்குறள் தொடர்பாக இதுவரை 2,000 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தி இருக்கிறேன். 2016-ல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்காகச் சென்னையில் 36 மணி நேரம் தொடர்ந்து திருக்குறள் வாசிக்கும் நிகழ்ச்சி நடத்தினோம். பங்கேற்பு சான்றிதழ் மட்டுமே கிடைத்தது.
கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் அபுதாபியில் வசிக்கிறார். விடுமுறையைக் கழிப்பதற்காக 2016-ல் குடும்பத்தோடு செங்கல்பட்டு வந்தார். அப்போது அவரின் மகன் ஆதித்தனுக்கு தமிழ் சொல்லித் தரக் கேட்டுக்கொண்டார். நானும் சொல்லிக் கொடுத்தேன். விடுமுறை முடிந்த பிறகு, அபுதாபிக்குச் சென்றுவிட்டார்கள். பிறகு, ஆன்லைனிலேயே தமிழைக் கற்றுக் கொண்டு 1,330 திருக்குறளையும் இப்போது படித்து முடித்துவிட்டான். இதுபோல வெளிநாடுகளில் இருப்பவர்கள் திருக்குறள் படிப்பதற்கு அரசு ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.
``திருக்குறளை தலைகீழாகச் சொல்வது மிகவும் வித்தியாசமாக உள்ளதே..?'' என்றோம்.
``திருக்குறளைப் படிப்பதற்கு முன்பே வார்த்தைகளை தலைகீழாகச் சொல்வேன். ஊர்ப் பெயர், தெரு பெயர், நாம் பேசுகின்ற வாக்கியங்கள் போன்றவற்றைத் தலைகீழாகச் சொல்வேன். சினிமா பாடல்களையும் தலைகீழாகப் பாடுவேன்” என்றவர், ``நீங்க ஏதாவது ஒரு பாட்டு சொல்லுங்க” என்றார். நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், மாங்குயிலே பூங்குயிலே, மருதமலை மாமணியே முருகையா, சோதனை மேல் சோதனை என நாமும் இரண்டு மூன்று தமிழ்ப் பாடல்களைச் சொன்னோம். முதலில் வழக்கமான முறையில் அந்த வரிகளைப் பாடிக் காட்டியவர், அடுத்த சில நொடிகளிலேயே அந்தப் பாடல்களை தலைகீழாகப் பாடவும் செய்தார். ஒரு தேதியைச் சொன்னால் அந்தத் தேதி எந்தக் கிழமையில் வருகிறது என உடனடியாகச் சொல்கிறார்.
Also Read: தாலியில் `தமிழ்', பறையிசை, திருக்குறள் புத்தகம்; கவனத்தை ஈர்த்த தமிழ் மரபுத் திருமணம்!
கவனகக் கலை பற்றிப் பேச ஆரம்பித்தார் எல்லப்பன். ``ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை மனதில் பதிய வைத்து பிறகு, சொல்வது கவனகக் கலை எனப்படும். மன்னர் காலத்தில் இந்தக் கலை புகழ் பெற்று விளங்கியது. ஈற்றடி கொடுத்தால் பாடல் இயற்றுவது, மாயக்கட்டம் இயற்றுவது, பூக்களை உடலில் ஒற்றி எடுப்பது போன்றவற்றைப் பயன்படுத்தி மனனக் கலையைச் செய்தார்கள். அந்தக் கலைகளின் ஞானம் பெற்றவர்கள், பெரும்பாலும் யாருக்கும் கற்றுக்கொடுக்காமலேயே ரகசியம் காத்தார்கள். இதனால் இந்தக் கலை காலப் போக்கில் மறைந்து விட்டது. மாணவர்களுக்கு அவற்றையும் பயிற்றுவித்து வருகிறேன். தற்போது `திரைப்படப் பாடல்களும், திருக்குறளும்’ என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்” என்கிறார்.
வளரட்டும் குறள் பணி!
source https://www.vikatan.com/news/tamilnadu/thirukkural-ellappan-a-man-who-can-recite-thirukkural-in-31-ways
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக