நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தைத் தொடர்ந்து `ஆதரவு - எதிர்ப்பு' என தமிழக அரசியல் தகித்துவரும் நேரத்தில், நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது ஆய்வுக் குழு! இதையடுத்து, இந்தக் குழுவின் தலைவரான சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனை நேரில் சந்தித்தேன்.....
`` 'நீட் தேர்வை ரத்து செய்வோம்... ஆனால், அது எப்படி என்பது ரகசியம்' என்று தி.மு.க-வினர் சொல்லிவருகின்றனர். சட்ட நிபுணராக உங்கள் கருத்து என்ன?''
``மாநிலங்களின் கைகளில் இருந்த கல்வி உரிமை, எமர்ஜென்சி காலத்தில்தான் பொதுப்பட்டியலுக்குள்ளாக மாற்றப்பட்டுவிட்டது. அப்போதும் சரி, அதற்குப் பிந்தைய நாட்களிலும் சரி... இது இவ்வளவு பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று எந்த மாநிலங்களும் நினைக்கவில்லை. எனவே, இதுகுறித்து யாரும் அக்கறை செலுத்தவில்லை. ஆனால், இப்போது நீட் தேர்வு நடைமுறை வந்துவிட்ட சூழலில், பாதிப்பை உணர்ந்துள்ள தமிழக அரசு, மாநில உரிமையை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அண்மையில்கூட, சென்னை உயர் நீதிமன்றத்தில், `பொதுப்பட்டியலிலிருந்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரி' ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வு ரத்து என்பது சட்ட ரீதியிலாக சாத்தியமான ஒன்றுதான்!''
``மன அழுத்தம் தருகிறது, தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன எனவே நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றால், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும்தானே?''
``பொதுத்தேர்வு என்றால், இன்றைக்கும்கூட குழந்தைகளுக்குப் பயம் இருக்கிறதுதான். ஆனாலும்கூட நீட் தேர்வு நடைமுறை என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. உதாரணமாக தேர்வு நடைபெறுவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாகவே மாணவர்கள் தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும் என்கிறார்கள். இப்படி 3 மணி நேரத்துக்கு முன்பாகவே வரவேண்டும் என்றால், அதற்கும் முன்னதாகவே குழந்தைகள் வீட்டிலிருந்து கிளம்பியாக வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பசி, உடல் உபாதைகள் போக மனப் பதட்டமும் அதிகரிக்கும். ஆக, மாணவர்கள் அமைதியான - இயல்பான மனநிலையில் எழுதுவதையே இந்த நடைமுறைகள் தடுக்கிறதுதானே!''
``ஆனால், 'மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும்'தானே?"
``இதுதான் தவறான எண்ணம். இந்தியா என்பது ஒரே நாடு அல்ல... பல நாடுகளின் கூட்டமைப்புதான் இந்தியா. எனவே, இங்கே பல்வேறு மொழி, இனம், பண்பாடு என பன்முகத்தன்மை இருக்கிறது. இந்தச் சூழலில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான தேர்வு என்று சொல்வதே நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்தான்! எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டம் என்றாலும்கூட தனியார் பள்ளிகளில் பயிலும் படித்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே எளிதாகக் கல்வியறிவு கிடைக்கிறது. அதுவே கிராமப்புறங்களில் அரசுப் பள்ளியில் பயிலும் படிப்பறிவற்ற, ஏழை பெற்றோரின் குழந்தைகள் பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு பள்ளி ஆசிரியரை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இப்படி அடிப்படைக் கல்விச் சூழலிலேயே சமத்துவமற்ற சூழல் நிலவி வரும்போது, நீட் தேர்வு என்பது பள்ளிச் சூழலையும் தாண்டி, தனியாக பயிற்சி மையங்களிலும் படித்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. உண்மை நிலவரம் இப்படியிருக்க பொருளாதார வசதியற்ற கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவுகளை நீட் தேர்வு கருகவைத்துவிடுகிறதே!''
Also Read: `தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நீட் எதிர்ப்பு இல்லாதது ஏன்?' - ஓர் அலசல்
``கருணாநிதிக்கு நெருக்கமானவரை, ஆய்வுக்குழுத் தலைவராக நியமித்தபோதே, குழுவின் அறிக்கை என்னவாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம்தான் என்ற அரசியல் விமர்சனம் இப்போது உண்மையாகியிருக்கிறதே....?"
``அரசியல் ரீதியாக விமர்சனம் செய்பவர்களைப் பற்றி நாம் எதுவும் சொல்லமுடியாது. என்னைப்பற்றி மட்டும்தான் நான் சொல்லமுடியும். நீதிமன்றப் பணியில் என்னுடைய தீர்ப்பு, என்னுடைய ரிப்போர்ட், பதில் என எதுவாக இருந்தாலும் சட்டத்திற்குட்பட்டுத்தான் நடந்துகொண்டிருக்கிறேன். வேண்டியவர், வேண்டாதவர் என்று பாகுபாடு பார்த்தெல்லாம் எந்தத் தீர்ப்பையும் நான் வழங்கியது இல்லை. ஆனாலும்கூட, விமர்சனம் செய்பவர்கள் செய்துகொண்டுதான் இருப்பார்கள். அவற்றுக்கெல்லாம் மறுப்பு சொல்லிக்கொண்டிருக்க முடியாது... அதுபற்றி கவலைப்படுவதற்கும் எதுவும் இல்லை!''
``நீட் தேர்வு முறை தொடர்ந்தால், சுகாதார விஷயத்தில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கிப் போய்விடும் என எப்படிச் சொல்கிறீர்கள்? இதே பாதிப்பு மற்ற மாநிலங்களில் ஏற்படாதா?''
``தமிழ்நாட்டில், இப்போது 2,600-க்கும் அதிகமான எண்ணிக்கையில் ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் கிராமப்புறங்களிலிருந்து படித்து வந்தவர்கள்தான். நகர்ப்புறச் சூழலில் படித்து வந்தவர்கள் இதுபோல், கிராமப்புறச் சேவைகளில் ஈடுபடத் தயங்குவார்கள். இந்த நடைமுறைகளை தெரிந்துகொண்டதால்தான் கடந்த காலங்களில், மருத்துவம் படித்தவர்கள் கிராமப்புறங்களில் கட்டாய சேவை செய்வதற்கென தனி விதிகள் உருவாக்கப்பட்டு அதற்கான மதிப்பெண்களும் வழங்கப்பட்டன.
ஆனால், இப்போது நீட் தேர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது. நகர்ப்புறத்திலுள்ள உயர் தட்டு குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே நீட் தேர்விலும் பெருவாரியான வெற்றியைப் பெற முடியும் என்கிறபோது, படித்து பட்டம் பெற்ற பிறகு இவர்கள் கிராமப்புற சேவைகளில் ஈடுபட தயக்கம் காட்டுகிற சூழல்தானே நிலவும். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எப்படி செயல்பட முடியும்? கிராமப்புற மக்களின் மருத்துவ சுகாதாரம் எப்படி பாதுகாக்கப்படும்?''
``அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுவரும் சூழலில், இந்த நிலை மாறும்தானே?''
''ஓரளவு மாறும்... ஆனால், இந்த 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்று மருத்துவம் படிப்பவர்களிலும்கூட முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறைந்துகொண்டேதான் வருகிறது. இரண்டு, மூன்று முறை நீட் தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெற்றவர்களே இந்த இட ஒதுக்கீட்டையும் பெறுகிற சூழல் நிலவுகிறது. இப்படி இரண்டு, மூன்று முறை ஒரே தேர்வை எழுதி எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற வேண்டுமானால், அதற்குரிய பொருளாதார வசதி மற்றும் சிறந்த கல்விச்சூழல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வேண்டும். ஆக, இங்கேயும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் படிப்பு விகிதம் என்பது குறைந்துகொண்டேதான் வருகிறது.''
``தமிழ்நாட்டில் மட்டும் 'நீட் தேர்வு எழுதுகிறவர்களின் தற்கொலை' எண்ணிக்கை அதிகமாக இருப்பது அரசியலாக்கப்படுகிறதே?''
``அரசியல் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. மாணவர்களின் சிறுவயதிலிருந்தே அவர்களிடம், 'நீ டாக்டர் ஆகவேண்டும்' என்ற ஆசையை சொல்லிச்சொல்லி அதுகுறித்த கனவுகளை வளர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில், 'மருத்துவப் படிப்பில் இனி நாம் சேரமுடியாது' என்ற நிலை வரும்போது குழந்தைகள் செய்வதறியாது தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். 'மருத்துவம் படிப்பது மட்டுமே வாழ்க்கையில்லை' என்ற உண்மையையும் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லி ஊக்கம் கொடுக்கும் வகையில் செயல்படுவதை விட்டுவிட்டு, ஆசையை மட்டுமே வளர்த்துவிடுகிற பெற்றோர், ஆசிரியர், சமூகம் என அனைவருக்குமே இந்தத் தவறில் பங்கிருக்கிறது. எனவே, இது ஒரு சமூகப் பிரச்னை!''
source https://www.vikatan.com/government-and-politics/politics/justice-ak-rajan-interview-on-neet-exam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக