Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

கர்நாடகா: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த கொலையாளியின் கதை |க்ரைம் டேப்ஸ் - பகுதி 4

சத்யா சாதாரண வழிப்பறி வழிக்கில் கைதாகி சிறையிலிருந்த வேளையில்தான் அவன் பல்வேறு வன்கொடுமை, கொலை வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது போலீஸுக்கே தெரியவந்தது.

போலீஸ் கான்ஸ்டபிள் ஜோதிமணி என்பவர் கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையான வழக்கில் ஜெயபால் என்பவரைத் தவறுதலாக கைதுசெய்து சிறையில் அடைத்திருந்தனர். அப்போது வழிப்பறி வழக்கில் கைதாகி சிறையிலிருந்த சத்யா, ஜெயபாலிடமே கிண்டலாக `ஜோதிமணியைக் கொன்றது நான்தான்’ என்று சொல்லப் போக சத்யா என்ற கொடூரமான சைக்கோ கொலைகாரனைப் பற்றிய உண்மை வெளியுலகத்துக்கு தெரியவந்தது.

வேட்டை மிருகம்

ஒருவேளை சத்யா, ஜெயபாலிடம் உண்மையைச் சொல்லாமல் தவிர்த்திருந்தால் கடைசிவரைக்கும் சத்யா போலீஸில் சிக்காமலேயே இருந்திருந்திருப்பான். கோவைச் சிறையிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பித்த சத்யா, தலைமறைவாக இருந்த இரண்டு மாதங்களில் கர்நாடகாவில் ஆறு பெண்களை வன்கொடுமை செய்து கொன்றான். தருமபுரியில் ஒரு பெண்ணை வன்கொடுமை செய்யும்போது அதற்குத் தடையாக இருந்த அந்தப் பெண்ணின் கணவனையும், குழந்தையையும் கொடூரமாக அடித்துக் கொன்றான். வெறும் இரண்டு மாதங்களில், அதுவும் தலைமறைவாக வாழ்ந்துகொண்டே எட்டு கொலைகளை சர்வ சாதாரணமாக செய்யக்கூடியவன், தொடர்ந்து வெளியே நடமாடினால் நிலைமை என்னாவாகும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

க்ரைம்

வேட்டை மிருகத்தைவிட மோசமானவன் இந்த சத்யா என்பதற்கு இன்னோர் உதாரணமும் இருக்கிறது. அதை எழுதவே கை கூசுகிறது. சத்யா தன் லாரி பயணத்தின்போது கண்ணில்பட்ட பெண்களையெல்லாம் அடித்து, துன்புறுத்தி, காயப்படுத்தி அவர்கள் சாகும் தறுவாயில் இருக்கும்போது வன்கொடுமை செய்து பின்பு அவர்களைக் கொலை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தான். இந்த சைக்கோ, தன் சொந்த குடும்பத்தில் மட்டும் எப்படி நல்லவனாக இருந்திருக்க முடியும்?

கணவனிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் வீட்டுக்கு வந்திருந்த தன் சொந்தச் சகோதரியைக் கத்தி முனையில் மிரட்டி வன்கொடுமை செய்திருக்கிறான் இவன். இந்தச் சம்பவம்கூட போலீஸ் விசாரணையில் அவனே சொன்னதுதான். போலீஸார் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் கிட்டத்தட்ட 30 பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் வழிப்பறியும் செய்திருக்கிறான். இவனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு போலீஸைப்போலவே கர்நாடக போலீஸும், ஆந்திர போலீஸும் இவனை வெறிகொண்டு தேடிக்கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக இந்த அளவுக்குக் கொடூரமான ஒருவனைத் தப்பிக்கவிட்ட தமிழ்நாடு போலீஸ் மீது இரு மாநில காவல்துறையினரும் கடும் கோபத்தில் இருந்தார்கள்.

போலீஸ் தற்கொலை

கோவையிலிருந்து தருமபுரி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும்போது, சேலம் பேருந்து நிலையத்தில் தன் காவலுக்கு இருந்த இரு ஆயுதப்படை காவலர்களை ஏமாற்றிவிட்டு சத்யா, 2011, மார்ச் 17-ம் தேதி தப்பிச் சென்றான். இவனைத் தப்பிக்கவிட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆயுதப்படை காவலர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதை ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சத்யா கர்நாடகாவில் ஆறு பெண்களைக் கொலை செய்ததை அந்த மாநில காவல்துறையினர் சத்யா, தங்களுக்கு விடுத்த தனிப்பட்ட சவாலாகவே பார்த்தனர். எப்படியும் சத்யாவைக் கைதுசெய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா காவல்துறையினருக்கு முன்பாக சத்யாவைத் தாங்களே கைதுசெய்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

அவர்கள் முயற்சி வீண் போகவில்லை அதே ஆண்டு (2011) மே மாதம் 4-ம் தேதி சத்யாவை கர்நாடக போலீஸார் கைதுசெய்துவிட்டனர். இனி இந்த சத்யா தங்கள் பாதுகாப்பிலிருந்தோ அல்லது சட்டப்படியான தண்டனையிலிருந்தோ தப்பிக்கவே கூடாது என்பதில் கர்நாடக போலீஸ் மிக கவனமாக இருந்தது.

இப்போது அரசியல்ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ள கர்நாடகாவின் உயர் பாதுகாப்பு கொண்ட பரப்பன அக்ரஹாரா சிறையில் சத்யா அடைக்கப்பட்டான். ஓசூரில் நடந்த வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகளுக்காக சத்யாவுக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத் தந்தனர்.

சத்யா தன் தண்டனைக் காலத்தை சிறையில் அமைதியாக கழித்துக்கொண்டிருந்தான். ஆனால், ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். சத்யா ஒரு சைக்கோ கொலைகாரன். அவனால் எப்படி ஓரிடத்தில் அமைதியாக இருக்க முடியும்? ஆனால் இருப்பதோ உயர் பாதுகாப்பு கொண்ட சிறை. அங்கிருந்து அவனால் எப்படித் தப்பிக்க முடியும்?

அதுவும் தமிழ்நாடு போலீஸ் அவனை ஒரு முறை தப்பிக்க விட்டபோது அவன் தலைமறைவாக இருந்த இரு மாதங்களில் ஆறு பெண்களை துடிக்கத் துடிக்க வன்கொடுமை செய்து கொன்றதால் இவனது விஷயத்தில் அந்த மாநில காவல்துறை பிரத்யேக கவனம் எடுத்து அவனைக் கண்காணித்துவந்தது.

நான் ஏற்கெனவே சொன்னதை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். சத்யா கொலை செய்வதிலும் வன்கொடுமை செய்வதிலும் மட்டும் கைதேர்ந்தவன் அல்ல, தன் முன்னால் இருக்கும் எவரையும் தன் வசப்படுத்தும் கலையை அவன் கற்று வைத்திருந்தான். அவனது அந்தத் திறமை பரப்பன அக்ரஹாராவிலும் வேலை செய்யத் தொடங்கியது.

பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த சத்யா

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்தச் சிறையிலிருந்து யாருமே தப்பித்தது கிடையாது என்ற வரலாற்று சிறப்பு சத்யாவால் சிதைக்கப்பட்டது.

2013-ம் ஆண்டு, ஒரு நள்ளிரவில் சிறையின் சுற்றுச் சுவரில் இருந்த மின்சார வேலிக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்தி, பெட்ஷீட் மற்றும் நீளமான கம்பு (Bamboo pole) உதவியுடன் அங்கிருந்து தப்பிவிட்டான். அந்தச் சிறையிலிருந்து தீவிரவாதிகளே தப்ப முடியாது. இவன் சாதாரண லாரி டிரைவர். ஆனால் தப்பினான். நிச்சயமாக சிறையிலுள்ள காவலர்களின் உதவி இன்றி இவனால் தப்பித்திருக்க முடியாது. ஆனால் யார் அவனுக்கு உதவி செய்தார்கள், இப்படிப்பட்ட சைக்கோ கொலைகாரனுக்கு ஏன் உதவி செய்தார்கள் என்பது இன்று வரை வெளிவராத மர்மமாகவே இருக்கிறது.

பணத்துக்காகச் செய்திருப்பார்கள் என்று சொல்லவே முடியாது, ஏனெனில், சத்யாவிடம் அப்போது ஒரு பீடி வாங்கக்கூட காசு இருந்திருக்காது. தன் முன்னாலிருக்கும் எவரையும் வசப்படுத்தும் சத்யாவின் திறமையால் ஒரு சிலரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களின் உதவியுடன் தப்பித்திருக்கிறான் என்பது மட்டும் தெரியவந்தது.

சிறை

தமிழ்நாடு போலீஸ் அவனைத் தப்பிக்க விட்டபோது ஆவேசப்பட்ட கர்நாடகக் காவல்துறை, இப்போது தன் இயலாமையை எண்ணி தலைகுனிந்தது என்னவோ உண்மைதான். சத்யா வெளியே இருக்கும் ஒவ்வொரு விநாடியும் அவன் கண்களில் சிக்கும் பெண்களுக்கு ஆபத்து காத்திருந்தது. சாதாரணமாக அவன் சுற்றிக்கொண்டிருந்த நேரத்திலேயே கொலை செய்து குவித்தவன். இப்போது சிறையிலிருந்து, இரண்டு ஆண்டு காமப் பசியோடு வெளியே சென்றிருக்கிறான். பசியோடு வெளியே திரியும் இந்த வேட்டை விலங்கு என்னென்ன செய்யப்போகிறதோ என்று மூன்று மாநில போலீஸாரும் கைகளைப் பிசைந்துகொண்டிந்தனர்.

கர்நாடகா காவல்துறை எப்படியும் சத்யாவைப் பிடித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. உயர் பாதுகாப்புக் கொண்ட பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து அவன் தப்பித்ததை தங்களின் தனிப்பட்ட தோல்வியாக கர்நாடகா கருதியது. ஆனால் அவர்களின் முயற்சி வீண் போகவில்லை. சத்யா தப்பித்துச் சென்ற 5-வது நாளில் அவனைத் தேடிப்பிடித்து கைதுசெய்துவிட்டனர்.

சிறை

திரும்பவும் அதே சிறையில் அடைக்கப்பட்டான். இந்த முறை தனிமைச் சிறை. கை கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் தனிமைச் சிறை வாழ்க்கை சத்யாவுக்கு மிகக் கொடூரமாகவே இருந்திருக்க வேண்டும். அதுவும் ஐந்து ஆண்டுகள் அவன் வாழ்க்கை இருட்டறையிலேயே கழிந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின், ஒரு நாள் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக்கொண்ட நிலையில் சத்யா அவனிருந்த தனிமைச் சிறைக்குள் இறந்துகிடந்தான்.

தனிமைச் சிறை சத்யாவை சிந்திக்கவைத்திருக்கலாம். குற்ற உணர்வைத் தூண்டியிருக்கலாம். தன்னுடைய கேவலமான பிறப்பை எண்ணி வேதனைப்பட்டிருக்கலாம். அதனால்தானோ என்னவோ அவன் தற்கொலை செய்துகொள்ள அந்த நாளைத் தேர்வு செய்திருந்தான். அவன் தற்கொலை செய்துகொண்ட அந்த நாள், பிப்ரவரி 27, சத்யாவின் பிறந்த நாள்! ஒரு சைக்கோவின் ரத்த சரித்திரம் முடிவுக்கு வந்தது.

க்ரைம் டேப்ஸ் தொடரும்...

Also Read: க்ரைம் டேப்ஸ்: போலீஸுக்கு ஏமாற்றம்... உண்மைகளை உடைத்த சத்யா! - பரபர பகுதி - 3



source https://www.vikatan.com/news/crime/serial-murder-crime-tapes-series-part-four

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக