Ad

வியாழன், 29 ஜூலை, 2021

`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா!’ - சாடும் அண்ணாமலை

கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திராவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வந்திருந்தார். பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் பா.ஜ.க ஊடக பிரிவு மாநில செயலாளாராக இருந்து மறைந்த ராஜனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சமீபத்தில் பிரதமரை சந்தித்து வந்துள்ளார்கள். எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. எல்லா கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு எவ்வாறு தயாராகிக் கொண்டு இருக்கிறார்களோ, அதை விட அதிக பலத்துடன் நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். நிறைய நண்பர்கள் தலைவர்கள் ஆவதற்கு உள்ளாட்சித் தேர்தல் வழிவகுக்கும். ஆகவே உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அண்ணாமலை

அ.தி.மு.க பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுடன் தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். முறைப்படி அ.தி.மு.க-வை ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் வைத்திருந்தவர்கள் அவர்கள். அதனால் ஒற்றைக் தலைமை என்ற யூகத்திற்கு நாங்கள் பதிலளிக்க முடியாது. அதனை டி.டி.வி தினகரனின் வியூகமாக தான் பார்க்கிறேன். நாங்கள் ஒரு தனிக்கட்சி. அ.தி.மு.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறார்கள்.

Also Read: `கட்சியில் நல்ல நிர்வாகிகள் இருக்கிறார்கள், ஆனால்..!’-10 நாளில் மாற்றத்துக்குத் தயாராகும் அண்ணாமலை?

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதில் எந்த தவறும் இல்லை. திருக்குறளை தேசிய நூலாக கண்டிப்பாக அறிவிக்க வேண்டும். சீனா எல்லை உட்பட பல இடங்களிலும் பிரதமர் திருக்குறளை எடுத்துக்காட்டாக கூறி பேசியிருக்கிறார். அதனால் நிச்சயமாக திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசு மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாக ஒரு நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க மீனவர்களுக்கு செய்வதாகக் தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் செய்யவில்லை. அதனை கண்டித்து நாளை (இன்று) பா.ஜ.க மீனவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

மறைந்த பா.ஜ.க நிர்வாகிக்கு அஞ்சலி

வேலையில்லாத கட்சி காங்கிரஸ் கட்சி. கதை திரைக்கதை வசனம் என மூன்றையும் எழுதி நாடாளுமன்றத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்ற படத்தை ஓட்டினார்கள். அது அரை மணி நேரம் கூட ஓடவில்லை. தற்போது மம்தா பானர்ஜி புதிதாக ஒரு நாடக ஆர்டிஸ்ட்டாக அதில் சேர்ந்துள்ளார். தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் எந்த உண்மையும் இல்லை. தற்போது ராகுல் காந்திக்கு எந்த வேலையும் இல்லை என்பதை தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தெளிவுபடுத்தி உள்ளது. இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக புரளி கிளப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இல்லாம்ல் 23 குழுக்களாகப் பிரிந்து உள்ளது. அதை அவர்கள் முதலில் சரிப்படுத்தட்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-state-leader-slams-opposition-parties-in-pegasus-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக