டோக்கியோ ஒலிம்பிக்கின் 3000மீ ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் இன்று கலந்துகொண்டிருக்கிறார் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே. 2019-ம் ஆண்டு கத்தார் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்ட அவினாஷ் அதில் இறுதிப்போட்டிவரை முன்னேறி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதியையும் பெற்றார்.
ராணுவ வீரரான இவர் இதுவரை ஐந்து தேசிய சாதனைகளை படைத்துள்ளார். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவினாஷ் 2018-ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை. ஆனால் அதே அண்டில் புவனேஷ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 8.29.80 என்ற நேரத்தில் ஓடி முதல் தேசிய சாதனையை படைத்தார். அதற்கு அடுத்த வருடமே பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பையில் 8.28.94 நேரத்தில் ஓடி தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்தார். இதன்மூலம் 2019-ம் ஆண்டிற்கான ஆசிய மற்றும் உலக தடகள போட்டிகளுக்கு தகுதியும் பெற்றார். 1991-ல் தீனா ராமிற்கு பிறகு ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் உலக அரங்கிலான போட்டியில் பங்கேற்கும் முதல் வீரர் அவினாஷ்.
ஆசிய போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்த அவர் உலக சாம்பியன்ஷிப்பின் ஹீட்ஸ் ஓட்டத்தில் 8.25.23 நேரத்தில் ஓடி புதிய தேசிய சாதனையை படைத்தார். மேலும் உலக சாம்பியன்ஷிப்பின் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தின் இறுதி போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரரானார் அவினாஷ். இறுதிச்சுற்றில் மற்றுமொரு தேசிய சாதனை (8.21.37) கூடுதலாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான நுழைவு சீட்டு.
2020-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அரை-மாரத்தான் போட்டியை 1.00.30 விநாடிகளில் முடித்தார் அவினாஷ். அரை-மாரத்தான் தூரத்தை 61 நிமிடங்களுக்குள் ஓர் இந்தியர் கடப்பதும் இதுவே முதல்முறை.
இவை அனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு இவ்வருடம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 8.20.21 நேரத்திற்கு முன்னேறினார் அவினாஷ்.
மகாராஷ்டிராவிலுள்ள பீட் மாவட்டம் மண்ட்வா கிராமத்தில் 1994-ம் ஆண்டு பிறந்தவர் அவினாஷ் சாப்லே. போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத தனது கிராமத்தில் இருந்து தினமும் 6-7 கி.மீ பள்ளிக்கு நடந்தார் அவினாஷ். பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு இந்திய ராணுவத்தின் 5 மஹார் பிரிவில் சேர்ந்து நாட்டின் பல்வேறு எல்லைகளில் பணி செய்த அவர் 2015-ம் ஆண்டு முதல் தீவிர ஸ்டீபிள் சேஸ் பயிற்சியை மேற்கொண்டுவருகிறார். தொடக்கத்தில் அதிக எடையுடன் காணப்பட்ட அவினாஷ் தேசிய முகாமில் பயிற்சி பெற மூன்றே மாதங்களில் 20 கிலோ வரை குறைத்தார். தற்போதைக்கு அவினாஷின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இந்தியாவில் வேறு வீரர்கள் இல்லை.
இன்று காலை நடைபெற்ற ஸ்டீபிள் சேஸ் தகுதிப்போட்டியில் 7-ம் இடம் பிடித்திருக்கிறார் அவினாஷ் சாப்லே. இது இந்தியாவின் தேசிய சாதனை. ஆனால், முதல் மூன்று பேர் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற முடியும் என்பதால் அவினாஷ் வெளியேறியிருக்கிறார்.
source https://sports.vikatan.com/olympics/avinash-sable-breaks-national-record-but-failed-to-qualify-to-next-round-in-tokyo-olympics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக