Ad

திங்கள், 26 ஜூலை, 2021

Covid Questions: தடுப்பூசிக்குப் பிறகும் பாசிட்டிவ்; நான் இன்னொருமுறை தடுப்பூசி போட வேண்டுமா?

இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தாக்கி நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா? ஆம் என்றால் மீண்டும் இரு தவணைகளும் செலுத்திக்கொள்ள வேண்டுமா?

- பார்திபன் ( விகடன் இணையத்திலிருந்து)

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.

``கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று வரலாம். ஆனால் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அரிது. தடுப்பூசியே போடாதவர்களுக்கு கோவிட் நிமோனியா எனப்படும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. தடுப்பூசி போட்டவர்களுக்கு அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

கொரோனாவின் இரண்டாவது அலையில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பத்து, பன்னிரண்டு பேரை பார்த்தேன். அவர்களில் ஒரே ஒரு நபருக்குத்தான் கோவிட் நிமோனியா இருந்தது. அவருக்கு வயது 83. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் அவருக்கு இருந்தன. அவருக்குமே நுரையீரல் பாதிப்பு 30 சதவிகிதம் என்ற அளவில்தான் இருந்தது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி, குணமானவர்களுக்கு கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருக்கும். ஒருமுறை ஏற்பட்ட தொற்றே மீண்டும் அவர்களுக்குத் தொற்று ஏற்படாத அளவுக்குப் பாதுகாப்பு அளிக்கும். உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

A health worker administers the vaccine

Also Read: Covid Questions: 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்து பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமா?

கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொண்டே இருப்பதால் அதன் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வருடத்துக்கொரு முறை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது. அதுவும் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா தாக்கி மீண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் அவசியமில்லை."

Also Read: Covid Questions: இன்னும் தடுப்பூசி போடவில்லை; `மாடர்னா வரட்டும்' எனக் காத்திருக்கிறேன்; இது சரியா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/i-turned-positive-to-covid-after-taking-vaccine-should-i-take-vaccine-again

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக