தமிழ்நாட்டைப் பிரிக்கவேண்டும் என்ற கோஷம் இன்று நேற்று தொடங்கியது அல்ல, கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே குறிப்பிட்ட சில சமூகம் சார்ந்த கட்சிகளால் அவ்வப்போது எழுப்பப்பட்டு பின்னர் தானாகவே அடங்கிவிடும். தமிழ்நாட்டை வட தமிழ்நாடு, கொங்கு நாடு, தென் தமிழ்நாடு என மூன்றாகப் பிரிக்க வேண்டும் கோரிக்கைகள் எப்படி எழுந்தது, யாரால் எழுப்பப்பட்டது, அதன் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பதைப் பற்றி இந்த இறுதித் தொடரில் காண்போம்.
வட தமிழ்நாடு கோரிக்கை:
வடதமிழ்நாடு தனிமாநிலக் கோரிக்கையானது எழுபதுகளின் பிற்பகுதியிலேயே எழுப்பப்பட்டது. முதன்முதலில் இந்தக்கோரிக்கையை எழுப்பியது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சித் தலைவரும், வன்னியர் சமுதாயத்தின் மூத்தத் தலைவராகவும் அறியப்படுகின்ற எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார், "அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வடதமிழகம் புறக்கணிக்கப்படுகிறது" என்றுக்கூறிய இவர் 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் மாநாடு ஒன்றை நடத்தி "வன்னியர் மாநிலம்" அல்லது "வட தமிழ்நாடு" கோரிக்கையை முன்வைத்தார். இந்த மாநாடு நடத்தியதற்காக அப்போதைய தமிழக அரசால் வழக்குத்தொடரப்பட்டு, பின்னர் தனிமாநிலம் கோருவது சட்டப்படி குற்றமல்ல என்றும் கோரிக்கையை ஏற்பதும் மறுப்பதும் அரசின் முடிவுவைப் பொறுத்தது என்றுக்கூறி உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பிறகு நெடுங்காலமாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த வடதமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் கிளப்பினார் வன்னியர் சங்கத்திலிருந்து உருப்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
“வட தமிழகத்தில் அதிகமாக வாழும் வன்னியர் சமூகத்தினரின் வாழ்வுரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது. மேலும், வடதமிழகத்தைச்சேர்ந்த ஒருவர் கூட இதுவரை முதல்வராக முடியவில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்” என 2002-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் தீவிரமாகப் பேசினார் ராமதாஸ்.
மேலும், சென்னையை தலைநகராகக் கொண்டு, வட தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர்,நாமக்கல், சேலம், தர்மபுரி, நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களை சேர்த்து 'வடதமிழ்நாடு' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, வடதமிழ்நாடு கூட்டியக்கம் எனும் பெயரில் குறிப்பிட்ட சமூகம் சார்ந்த சில தலைவர்கள் தனி 'வட தமிழ்நாடு' மாநிலம் கோரி சிறிய அளவிலான முன்னெடுப்புகளை நடத்தி வருகின்றனர்.
கொங்கு தமிழ்நாடு கோரிக்கை:
கொங்கு தமிழ்நாடு தனிமாநிலக் கோரிக்கையானது 90-களின் பிற்பகுதியில் எழுப்பப்பட்டது. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனரும், கொங்கு வேளாளர் சமுதாயத்தின் மூத்த தலைவராகவும் அறியப்படும் கோவை செழியன், முதன்முதலில் 1994-ம் ஆண்டு கரூரில் நடைபெற்ற கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநில மாநாட்டில் தனி 'கொங்கு மாநிலம்' அமைக்கப்பட வேண்டும் எனக்கோரி அதற்கான காரணங்களையும் முன்வைத்தார்.
அதன்பிறகு, 2009-ம் ஆண்டு கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்திலிருந்து உருப்பெற்ற கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி, “இதுவரையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர்கூட தமிழகத்தின் முதல்வராக வரமுடியவில்லை. மத்திய மாநில அரசுகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் கொங்கு மண்டலத்தை தமிழகத்திலிருந்து தனியாகப் பிரித்து 'கொங்கு' மாநிலத்தை உருவாக்க வேண்டும்” என பேசிவந்தார். தொடர்ந்து, 2009-ல் ஈரோட்டில் நடைபெற்ற ஜவுளித்தொழில் பாதுகாப்பு மாநாட்டில், 2010-ல் வெளியிட்ட அறிக்கையில், 2012-ம் ஆண்டு கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டில், 2019-ம் ஆண்டு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட சூழலில் என பெஸ்ட் ராமசாமி 'தனி கொங்கு மாநில' கோரிக்கையைத் தொடர்ந்து முன்னிறுத்தி வந்தார்.
Also Read: இந்திய மாநிலங்களின் வரலாறு: `தனி மாநிலம்’ கேட்டு போராடும் மொழிவழி தேசிய இன மக்கள்|பகுதி - 5
பெஸ்ட் ராமசாமியிடமிருந்து பிரிந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை ஆரம்பித்த ஈ.ஆர். ஈஸ்வரனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். குறிப்பாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், “கொங்கு மண்டலத்தின் வருவாய் முழுவதும் இங்குள்ள மக்களுக்கே பயன்பட வேண்டுமென்றால் தமிழகத்தை இரண்டாகப் பிரித்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும். எங்களது ஆதரவை கட்சிகள் கோரும்போது தனி மாநிலக் கோரிக்கையை முன்வைப்போம்" என்றுக்கூறி கொங்கு மாவட்டங்களிலுள்ள 72 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிட்டார்.
மேலும், கடந்த 2019-ம் ஆண்டில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகியும், முன்னாள் பாமக மாநில துணைச்செயலாளராகவும் இருந்த பொங்கலூர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கையில், “கொங்கு மண்டலம் தனி மாநிலம் ஆக்கப்பட அனைத்து தகுதிகளும், வளங்களும், வாய்ப்புகளும் நிறைந்தே இருக்கிறது. ஈரோடு நகரத்தைத் தலைநகராகக்கொண்டு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களை இணைத்து, "கொங்கு நாடு" எனும் பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், 2021 கடந்த ஜூலை 11-ம் நாள், கோவை மாவட்டம் அன்னூரில், கோவை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில், "மத்திய அரசு தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கௌரவத்தைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி நிர்வாக ரீதியாக தமிழகத்தை மாநில மறுசீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தைப் புதிய மாநிலமாக உருவாக்க வேண்டும்" என கொங்குநாடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கொங்குநாடு வேண்டும் என தமிழக பா.ஜ.க சார்பில் எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை.
தென் தமிழ்நாடு கோரிக்கை:
தென்தமிழ்நாடு கோரிக்கை என்பது கடைசி சில பத்தாண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டு வந்தது. அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் என். சேதுராமன், 2008-ம் ஆண்டில் இந்த கோரிக்கையை எழுப்பினார். குறிப்பாக, 2009-ம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மாநில இயக்கக் கருத்தரங்கில், “தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாமல் அப்படியே உள்ளன. தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம். தேசியத்துக்கு பாதிப்பு இல்லாமல் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தை இரண்டாக பிரித்து தனி "தென்தமிழ்நாடு” அல்லது "செந்தமிழ்நாடு” மாநிலம் உருவாக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும், இதற்காக வன்னியர் சங்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த ஏ.கே.நடராஜனும், என்.சேதுராமனும் இணைந்து "வட தமிழக, தென் தமிழக மாநில கூட்டமைப்பு” என்ற அமைப்பை ஏற்படுத்தி, “காவிரி ஆற்றையொட்டிய பகுதிகளை வடக்கில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட வட தமிழகமாகவும் தெற்கில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட தென் தமிழகமாகவும் பிரிக்க வேண்டும்” என ஒருசேர வலியுறுத்தியும் வந்தனர்.
தொடக்க காலங்களில் "தங்கள் பகுதிகளிலிருந்து, தாங்கள் சார்ந்த சமுதாயத்திலிருந்து ஒருவரும் தமிழக முதல்வராக வரமுடியவில்லை எனவே தமிழகத்தை பிரிக்கவேண்டும்" என்றிருந்தவர்களின் கோரிக்கைக்கான காரணங்கள், காலப்போக்கில் "எங்கள் பகுதிகள் புறக்கணிக்கணிக்கப்படுகிறது" என்றும் பின்னர் "தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு..." என்றபடி காலத்திற்கு ஏற்றார்போல அவர்கள் முன்வைக்கும் காரணங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
தமிழ்நாட்டை பிரிப்பது குறித்து அரசியல் தலைவர்களின் கருத்துகள்:
"தமிழகத்தை இரண்டாக, மூன்றாக பிரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்களுக்கெல்லாம் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் அந்ததந்தப் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் குறிப்பிட்ட சாதிகளின் தலைவர்களாக, சாதிக்காக இயங்கும் கட்சிகளை நடத்துபவர்களாகவும் அறியப்படுகிறார்கள். அவர்களின் நோக்கம் என்பது தமிழகத்தின் வளர்ச்சி என்பதைத்தாண்டி தனிப்பட்ட சுயநல அரசியலேயன்றி வேறொன்றுமில்லை" என்கிறார்கள் பெ.மணியரசன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய தலைவர்கள்.
“தமிழகத்தை துண்டாடுவது என்பது, ஒரே மொழிபேசும் மக்களை தங்களுக்குள்ளாகவே பிரிவினைகொண்டு ஒருவொருக்கொருவர் எதிரிகளாக நிறுத்தபடும் சூழல் தூண்டப்படும். உதாரணமாக, ஒரே மொழிபேசும் தெலுங்கு தேசிய இனமக்கள் ஆந்திரா, தெலங்கானா என பிரிந்திருப்பதால் கிருஷ்ணா-கோதாவரி நீர் பங்கீட்டு பிரச்சனை பெருமளவில் வெடித்துள்ளது. ஒரே மொழிபேசும் மக்கள் ஆனால் நிலவியலாக பிரிந்திருப்பதால், தண்ணீர் வேண்டும் என ஒரு மாநிலத்தவரும், தரக்கூடாது என மற்றொரு மாநிலத்தவரும் சண்டையிட்டுக்கொள்வது கண்கூடு. இந்த நிலை தமிழகத்தில் நடந்தால் கரூர் தமிழன் காவிரி நீரை டெல்டாவின் கடைமடைக்கு தருவானா?” என கேள்வி எழுப்புகிறார் கதிர்நிலவன்.
மேலும், “தேசிய இனச் சிக்கலை வெறும் நிர்வாகப் பிரச்னையாக காட்டுவது ஜன்பத் மண்டலங்கள் என்ற பெயரில் தனித்தனி மாவட்டங்களாகப் பிரிப்பது, மொழிவழி மாநிலங்களை ஒழித்துக் கட்டுவது என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டங்களையே இவர்கள் எதிரொலிக்கிறார்கள். எத்தனை மாநிலங்களாகப் பிரிப்பது என்பது வேறு பிரச்னை. ஆனால், தமிழர் என்று இருக்கும் ஒரு தேசிய இனத்தின் அடையாளமாக இருக்கும் தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்ற சிந்தனையே தமிழர் நலனுக்கு விரோதமானது.” என்கிறார் தமிழ்த்தேசிய ஆய்வாளர் தியாகு.
அரசியல் வல்லுநர்கள் முன்வைக்கும் தீர்வுகள்:
அரசியலில் எப்போதும் நேரெதிராக இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும், தெலுங்கானா பிரிவினை நடந்த காலகட்டத்தில் "தமிழகத்தை பிரிக்கவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என ஒரே குரலாக ஒலித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பின்தங்கிய வளர்ச்சி இல்லாத பகுதிகளாக கூறப்படும் மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், சிப்காட் போன்ற தொழில் நகரங்கள் உருவாக்குவதன் மூலம் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர முடியும். இதனால் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். வெறுமனவே மாநில பிரிவினை மட்டும் வளர்ச்சியைத் தராது. வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
வேண்டுமானால் சென்னையை நோக்கி அனைத்து தொழில் மற்றும் மனித வளங்களும் குவிவதைத் தடுக்க இரண்டாவது தலைநகராக திருச்சி அல்லது மதுரையை அறிவிக்கலாம். தொழில்துறையை கோவைக்கும், வேளாண்மைத்துறையை தஞ்சாவூருக்கும் என அதிகாரப் பரவலாக்கலாம் என அரசியல் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.இந்திய மாநிலங்களின் வரலாறு: `தனி மாநிலம்’ கேட்டு போராடும் மொழிவழி தேசிய இன மக்கள்|பகுதி - 5
இறுதியாக,
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே -
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே"
என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம்.
-முற்றும்.
முந்தைய பாகங்களைப் படிக்க
பகுதி - 1 - இந்தியா: ஒன்றியம் முதல் கொங்குநாடு வரை! -தனிமாநில கோரிக்கைகளும், மாநிலங்கள் உருவான வரலாறும்|பாகம் 1
பகுதி - 2 - இந்திய மாநிலங்களின் வரலாறு: வெடித்தது உண்ணாவிரதப் போராட்டம்! பிறந்தது மொழிவாரி மாநிலங்கள்|பகுதி -2
பகுதி - 3 - இந்திய மாநிலங்களின் வரலாறு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பிரிக்கப்பட்ட மொழிவாரி மாநிலம்?!|பகுதி-3
பகுதி - 4 - இந்திய மாநிலங்களின் வரலாறு: மொழியால் அடுத்தடுத்து புதிய மாநிலங்களின் தோற்றம்! பகுதி - 4
பகுதி- 5 - இந்திய மாநிலங்களின் வரலாறு: `தனி மாநிலம்’ கேட்டு போராடும் மொழிவழி தேசிய இன மக்கள்|பகுதி - 5
source https://www.vikatan.com/government-and-politics/politics/north-tamil-nadu-kongu-nadu-south-tamil-nadu-separate-state-demands-in-tamil-nadu-part-6
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக