Ad

வியாழன், 29 ஜூலை, 2021

ஆடி மாத அம்மன் தரிசனம்: பெரிய பாளையத்து பவானி - அண்டியோரைக் காக்கும் ஆயன் சோதரி!

கிருஷ்ண பரமாத்மா பிறந்ததை கம்சனுக்கு அறிவித்தவள் துர்கை. இவளே கண்ணின் சகோதரி என்று துதிக்கப்படுபவள். வடபுலத்தில் துர்க்கையாக அவதரித்த ஆதிசக்தி, பெரிய பாளையத்தில் பவானியாக அமர்ந்தாள் என்கிறது திருத்தல வரலாறு.

உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் புற்று உருவில் அமர்ந்தாள் அன்னை ஆதிசக்தி, அவளோடு பரசுராமரின் அன்னையான ரேணுகாதேவியும் வந்து அமர்ந்து இத்தலத்தைப் புனிதப்படுத்தினார்கள் என்கிறது தல புராணம்.

நீண்ட காலம் புற்று வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்த பவானி அம்மா, ஒருமுறை வளையல் வியாபாரி வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். வளையல் வியாபாரியின் கனவில் வந்த அன்னையின் ஆணைப்படி அந்த புற்றை இடிக்க, அங்கு ரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதில்தான் ரத்தம் வடிந்தது. இன்றும் அன்னையின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் சுயம்புவின் உச்சியில் கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.

பெரிய பாளையம்

மூலவரான பவானி அம்மன் வலது கையில் கத்தி, வலது மேல் கையில் சக்கரமும், இடது கையில் அமுத கலசத்தையும், இடது மேல் கையில் சங்கும் கொண்டு காட்சி அளிக்கிறாள். சங்கு சக்கரம் கொண்ட வைஷ்ணவியாக அன்னை அமர்ந்திருக்கிறாள். இந்த அன்னையின் மடியருகே தலை மட்டுமே கொண்ட சுயம்புவாக ரேணுகா தேவி அம்சமாக மற்றொரு அன்னை காட்சி தருகிறாள். இவளே தொன்மையான தேவி என்கிறார்கள். பவானியின் அருகில் கிருஷ்ணர், நாகதேவர் திருவுருவங்கள் உள்ளன.

இங்கு பவானி அன்னையோடு தனித்தனி சந்நிதிகளில் கணபதி, மகா மாதங்கி (ரேணுகாதேவிக்கு அடைக்கலம் தந்த தேவி) ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர், நாகர், புற்றுக்கோயில் தேவி, ஆகியவர்களையும் தரிசிக்க முடியும்.

மீனவக்குலப் பெண்களின் தாயாக இருப்பவள் பவானி. கடலுக்குச் சென்ற தங்கள் கணவன்மார்கள் பாதுகாப்பாகத் திரும்பி வர பவானியை துணை நிற்பாள் என்பது அவர்களின் நம்பிக்கை. பெரும் போராட்டத்துக்குப் பின்பு உயிர் பிழைத்து கணவன் திரும்பி வந்ததும், இந்த கோயிலுக்கு வந்து தங்களது திருமாங்கல்யத்தைக் காணிக்கையாக வழங்குவது அந்த பெண்களின் வேண்டுதல். இது இன்றும் நடக்கும் வழக்கம். மழை பொழியவும், காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் தாக்காமல் இருக்கவும் இவளே காவல் என்கிறார்கள் மக்கள்.

குடைக் கல்யாணம்

விரைவில் திருமணம் நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், கரகம் சுமந்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். இளைஞர்களும் இளம் பெண்களும் பட்டாடை உடுத்தி, சந்தனக் குங்குமம் பூசிக் கொண்டு, தலையில் கரகத்தைச் சுமந்தபடி, அம்மனுக்குப் பிரியமான இசைக் கருவிகள் முழங்க, கரகம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது ‘குடைக் கல்யாணம்’ என்று அழைக்கப்படுகிறது.

நேர்த்திக்கடனுக்கு என்று ஒரு ஆலயத்தைக் குறிப்பிட வேண்டுமென்றால் அது பெரிய பாளையம் தான் என்று சொல்லலாம். எத்தனை விதமான நேர்த்திக்கடன்கள் தான் இங்கு! தீச்சட்டி ஏந்தல், வேப்பம் சேலை உடுத்தல், கோழி சுற்றி விடுதல், உப்பு மிளகு கொட்டுதல், தேங்காய் உருட்டல், அங்கப் பிரதட்சம், மாவிளக்கு-அகல் விளக்கு ஏற்றுதல், துலாபாரம் கொடுத்தல், வேப்பிலையால் மந்திரித்தல், சேலை சாத்துதல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், திருமாங்கல்ய காணிக்கை அளித்தல் என ஆலயம் எங்கும் பக்தி அலை பரவிக் கிடப்பதை காணலாம்.

Also Read: ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கஞ்சி தயாரித்து படையல் இடுவதேன்?

அங்கப்பிரதட்சணம் காலை 5 மணி முதல் 9 மணி வரையும், வேப்பஞ்சேலை நேர்த்திக்கடன் காலை 5 மணி முதல் 12 மணி வரையும், மீண்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், கல்யாண கரகம் காலை 5 மணி முதல் 12 மணி வரையும் இங்கு நடைபெறுகின்றது.

இங்குள்ள வேப்பமரம் பிள்ளையில்லாத பெண்களின் பெருந்துயரை நீக்கும் சிறப்பு கொண்டது. இங்கு தொட்டில்கட்டி வழிபட்டால், பிள்ளை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. நம்பிக்கையோடு இங்கு வந்து பலன் பெற்றவர்கள் இன்றும் சத்திய சாட்சியாக அம்பிகையைக் கொண்டாடி வருகிறார்கள்.

பெரிய பாளையம் பவானி அம்மன் கோயில்

ஆடி மாதம் தொடங்கி 14 வாரங்களும், சித்திரா பௌர்ணமி திருநாளும் இங்கு விசேஷம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 முதல் 12.30 மணி வரையும்; பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரையும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 முதல் தொடர்ந்து இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

தினமும் காலை 8 மணி, நண்பகல் 11 மணி, மாலை 5 மணி என மூன்று வேளைகளும் பவானி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகிறது. குங்குமமும் மஞ்சளும் கலந்த இந்த தீர்த்தம் தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் என்பதால் இது பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.

எப்படிச் செல்வது?

சென்னையில் இருந்து சுமார் 43 கி.மீ தொலைவில் உள்ளது பெரியபாளையம். சென்னை கோயம்பேடு மற்றும் ரெட் ஹில்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.


source https://www.vikatan.com/spiritual/temples/aadi-special-periyapalayam-bhavani-amman-temple-history-and-its-significance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக