உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருக்கலாம். இதற்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வாங்கி குவித்திருக்கலாம். ஆனால் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கள் நாட்டின் பெயர், கொடி, தேசிய கீதம் எதையும் ரஷ்யாவால் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி (ROC) என்ற பெயரிலேயே போட்டிகளில் பங்கேற்க முடியும். அதற்குக் காரணம், அவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
போட்டிகளில் பங்கேற்கும் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதாகவும், ஊக்கமருந்து தொடர்பான அறிக்கைகள் சமர்பிப்பதில் முறைகேடுகள் செய்வதாகவும் பல புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முடிவில், இவை அனைத்தும் உண்மைதான் என்றும் இதற்கு ரஷ்ய அரசே ஆதரவளிப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து உலகில் நடைபெறும் எந்த முக்கியமான போட்டிகளிலும் ரஷ்ய வீரர்கள் கலந்துகொள்ளக்கூடாது எனத் தடை விதித்தது சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையமான WADA. 2020-ம் ஆண்டு இந்தத் தடையை இரண்டு வருடமாக குறைத்து உத்தரவிட்டது விளையாட்டிற்கான தீர்ப்பாயம். ரஷ்ய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்களால் தங்கள் நாட்டு தேசிய கொடியை பயன்படுத்த முடியாது என்று தீர்ப்பு வந்தது.
இதன் காரணமாகவே, தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் ரஷ்யா, 'ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி' என்ற பெயரில் கலந்துகொள்கிறது. 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் இதே பெயரில்தான் ரஷ்யா கலந்துகொள்ள வேண்டும். கொடியைப் பொறுத்தளவில், வெள்ளை, நீலம், சிவப்பு கோடுகள் அடங்கிய ஐந்து வளையங்களை கொண்ட ஒலிம்பிக் கொடியை அவர்கள் பயன்படுத்துவார்கள்.
வழக்கமாக எந்த நாட்டு வீரர் தங்கப்பதக்கம் வெல்கிறாரோ, அவர் பதக்கம் பெறுகையில் அந்த வீரருடைய நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். ஆனால் ரஷ்ய வீரர் யாராவது தங்கப் பதக்கம் வென்று போடியத்தில் நிற்கும் போது ரஷ்ய தேசிய கீதம் இசைக்கப்படாது. மாறாக, பியாதர் சாய்கோவ்ஸ்கி என்பவர் இசையமைத்த பியானோ கான்சர்டோ இசைக்குறிப்பு ஒலிக்கப்படும்.
“ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி கொடியின் வண்ணம் எங்கள் தேசிய கொடியின் மூவர்ணத்தை கொண்டுள்ளது. ஆகையால் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களும் மற்ற நாட்டின் ரசிகர்களும் எங்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். இப்போது எங்களுக்கென்று விசேஷமான இசையும் உள்ளது. எங்கள் ஒலிம்பிக் அணிக்கு தனித்த அடையாளம் கிடைத்துள்ளது” என அறிக்கை வெளியிட்டுள்ளது ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி.
வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளைப் பொறுத்தவரை ரஷ்ய கொடி எக்காரணம் கொண்டும் அனுமதிக்கபடாது. ஆனால் கொடியின் வண்ணத்தை தங்கள் உடைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
source https://sports.vikatan.com/olympics/why-russian-team-is-called-russia-olympic-committee-in-olympics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக