கோயில்கள் என்றதும் அங்கு வழங்கப்படும் பிரசாதங்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு விசேஷ பிரசாதம் உண்டு. அதற்காகவும் பக்தர்கள் அங்கு சென்று வருவதுண்டு. ஆனால் சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம், கிருத்திகை போன்ற விரதங்கள் இருப்பவர்கள் ஆலயம் செல்லும்போது அங்கு கொடுக்கப்படும் பிரசாதங்களை வாங்கலாமா... அதை உண்ணலாமா என்னும் சந்தேகம் பலருக்கும் உள்ளது.
என்னதான் பிரசாதமாக இருந்தாலும் அன்னத்தை சாப்பிட்டுவிட்டால் விரதம் பூர்த்தியடைந்து விடாதா என்கிற அச்சம் உள்ளது.
பொதுவாக விரத நாள்கள் என்பது உண்ணா நோன்பு, உறங்காமை, இறை சிந்தனை ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டிய தினம். அந்த நாள்களில் இறைச் சிந்தனைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். விழித்திருந்து கடவுளை வழிபட உடலில் தெம்பு இல்லையெனில், கொஞ்சமே கொஞ்சம் உண்ணலாம். அதிலும் குறிப்பாக, வழக்கமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும் (அரிசி உணவு சாப்பிடுபவராக இருந்தால் கோதுமையைப் பயன்படுத்தலாம். புளி- காரம் இல்லாத உணவை ஏற்கலாம்). அதேநேரம்... திடகாத்திரமாக இருப்பவர்கள், இந்த தினத்தில் உண்ணாமல் இருப்பது அவசியம்.
முழுவதுமாக உணவைத் தவிர்ப்பதன் மூலம் உடல் வலிமை குன்றி விட்டால், கடவுள் வழிபாட்டை எப்படிச் செய்ய இயலும்? அதிகபட்சமாக அந்த நாளில் நீராகாரம், இறைப் பிரசாதம் ஆகியவற்றை ஏற்கலாம் என்று ஸ்மிருதிகள் விதிவிலக்கு அளித்துள்ளன. தர்மசாஸ்திரத்தின் அறிவுரையை ஏற்றால், கடவுள் பிரசாதத்தை ஏற்கலாம். இதனால் விரதம், ஒருபோதும் கெட்டு விடாது.
அதே நேரம், பிரசாதம் சாப்பிடும் நோக்கத்துக்காக அந்த நாள்களில் கோயில்களுக்குப் போகக்கூடாது. பிரசாதத்தை வயிறு நிறைய உண்டு பின்பு விரதம் என்று சொல்வதிலும் பயனில்லை. உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்க விரும்பும் சிலர் பிரசாதங்களை வாங்காமல் இருக்க விரும்புவர். ஆனால் இறைப்பிரசாதத்தை மறுப்பது பாவமாகிவிடாதா என்றெல்லாம் சிந்திப்பார்கள்.
நாம் விரதம் இருப்பது இறைச்சிந்தனையை அதிகப்படுத்தத்தான். அந்த வைராக்கியத்தின் காரணமாக நாம் பிரசாதங்களை அந்த நாள்களில் மறுப்பதால் பாவம் ஏற்படாது. ஒருவேளை வாங்கிக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதை வீட்டுக்குக் கொண்டுவந்து பிறர் உண்ணத் தரலாம். ஆனால் ஒருபோதும் வீணாக்கக் கூடாது.
source https://www.vikatan.com/spiritual/temples/can-we-eat-temple-prasadam-during-fasting-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக