Ad

வியாழன், 29 ஜூலை, 2021

டூட்டி சந்த் : போராடியே ஒலிம்பிக் வரை வந்த இந்தியாவின் மின்னல் மனுஷி... ரன் டூட்டி ரன்!

டூட்டி சந்த், தடகள உலகில் இந்த பெயர் எதிர்கொண்டிருக்கும் சர்ச்சைகள் ஏராளம். இவர் ஒரு ட்ராக்கில் புயலாக சீறி பாய்ந்தால், பக்கத்து ட்ராக்கில் சர்ச்சைகள் சூறாவளியாக சுழன்றடித்து இவரை ஓவர்டேக் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும்.

பேசுவதற்கு விஷயமே இல்லையென்றாலுமே கூட பாரம்பரியம், பண்பாடு என எதையாவது சொல்லி பெண்களை பின்னோக்கி இழுக்கவே இந்த சமூகம் எப்போதும் முயன்று கொண்டிருக்கும். பேசுவதற்கும் வசைபாடுவதற்கும் அத்தனை விஷயங்கள் உடைய டூட்டி சந்திடம் அமைதியாகவா இருப்பார்கள்?

தடதடக்கும் டூட்டி சந்தின் கால்களை படபடக்க வைக்கும் வகையில் விமர்சனங்களை அள்ளிவீசினர். ஆனாலும், டூட்டி சந்த் அசரவில்லை. 'ஃபாரஸ்ட் கம்ப்' மாதிரி எதைப்பற்றியும் கவலைப்படாமல், ரன் டூட்டி ரன் என ஓடிக்கொண்டே இருந்தார், இந்தியாவின் சாதனை பெண்ணாக உயரும் வரை!

25 வயதாகும் டூட்டி சந்த் ஒடிஷாவின் ஜெய்ப்பூர் அருகே ஒரு கிராமத்தில் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். உடன்பிறந்தவர்கள் மட்டும் 7 பேர். ஏழ்மை குடும்பத்தை வாட்டியது. உடல்திறன் மட்டுமே அவர்களுக்கென்று இருந்த ஒரே சொத்து. டூட்டியின் மூத்த சகோதரியான சரஸ்வதி சந்த் தடகளத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தடகளத்தில் மாநில அளவிலான போட்டிகள் வரை உயர்ந்தார். விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அவருக்கு ஒரு அரசு வேலை கிடைத்தது. டூட்டிக்கு இந்த சம்பவமும் சகோதரியின் தடகள பயணமுமே இன்ஸ்பிரேஷன். அக்காவை மாதிரி ஓடி ஓடியே ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்பதே இவரின் அதிகபட்ச இலக்காக இருந்தது. ஆனால், டூட்டியின் கால்கள் ஓடிய ஓட்டம் இதையெல்லாம் தாண்டிய உயரத்துக்கு அவரை அழைத்து சென்றது.

2012-ல் 16 வயதில் 100 மீட்டரை 11.8 நொடிகளில் கடந்து தேசிய அளவில் சாம்பியன் ஆனார். இதன்பிறகு, ஓடிய அத்தனை ட்ராக்குகளிலும் ரெக்கார்ட்தான். 100மீ மற்றும் 200மீ போட்டிகளில் இந்தியாவில் டூட்டி சந்தை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனும் நிலைக்கு உயர்ந்தார்.
டூட்டி சந்த்

உயரங்களை அடையும்போது இலவச இணைப்பாக பிரச்னைகளும் சர்ச்சைகளும் பின் தொடர்வது இயல்பே. ஆனால், டூட்டி சந்துக்கு அவருடைய கால்களை நிரந்தரமாக கட்டிப்போடும் அளவுக்கான பிரச்னைகள் எழுந்தது.

அவர் ஒரு பெண்ணே இல்லை என சிலர் பஞ்சாயத்தை கிளப்ப, ஹார்மோன் பரிசோதனைகளுக்கு பிறகு முடிவு டூட்டி சந்துக்கு எதிராக வந்தது. 2014 ஆசிய மற்றும் காமென்வெல்த் போட்டுகளில் ஆடுவதற்கு தடைவிதிக்கப்பட்டார்.

ஓடுவதை மட்டுமே அறிந்த அந்த கால்கள் கட்டப்பட்டு இறுகலான முடிச்சும் போடப்பட்டது. காற்றை கிழித்துக் கொண்டு ஓடியே பழக்கப்பட்ட அந்த கால்கள் திமிறத் தொடங்கியது. நீதிமன்றத்தின் படிகளை ஏறினார். வாதாடினார். போராடினார். கயிறுகள் கட்டவிழ்க்கப்பட்டன.

மீண்டும் ஓட தொடங்கினார், விட்ட இடத்திலிருந்து விட்ட படியே. ஒரு 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரெக்கார்ட் டைமிங்கோடு முடித்து ஆச்சர்யப்படுத்தினார். தரவரிசையின் படி 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதியானார். மற்ற வீராங்கனைகள் எல்லாம் லண்டன் ஒலிம்பிக்கிற்கு பிறகான நான்கு ஆண்டுகள் முழுமையையும் ரியோ ஒலிம்பிக்கிற்காக பயன்படுத்தியிருந்தனர். ஆனால், டூட்டி சந்த் அப்படியில்லையே. தன்னை நிரூபிக்கவே போராட்டம்... போராட்டம்... போராட்டம் என ட்ராக்குகளுக்கு வெளியேதான் அதிக நேரங்களை செலவிட்டிருந்தார். அதனால் ரியோவில் சுமாராகவே ஓடி முடித்தார்.

சர்ச்சைகள்... துரத்தல்கள்... போராட்டங்கள் என அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு டோக்கியோ ஒலிம்பிக்கை மனதில் வைத்து முழு மூச்சாக தயாராக தொடங்கினார்.

2016 தெற்காசிய நாடுகளுக்கிடையேயான போட்டியில் ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமும் வென்றிருந்தார். 2017 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு வெண்கலம், 2018 ஆசியப்போட்டியில் இரண்டு வெள்ளி என தொடர்ச்சியாக அசத்தினார். உலகளவில் பதக்கங்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பல ரெக்கார்ட்கள் என டூட்டி சந்த் தனது கரியரின் உச்சபட்ச ஃபார்மில் இருந்தார்.

இந்த சமயத்தில்தான் இந்திய விளையாட்டு வீரர்கள் யாரும் இதுவரை செய்திடாத, செய்ய துணிந்திடாத ஒரு விஷயத்தை செய்தார் டூட்டி.

தான் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக இந்த உலகுக்கு அறிவித்தார்.

அதிகம் கொண்டாடப்படும் கிரிக்கெட் உலகிலேயே இப்படி தங்களின் தன்பால் ஈர்ப்பு விஷயத்தை சில வெளிநாட்டு வீரர்கள் கூறிய போது அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டனர். இன்னும் ட்ரோல் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

டூட்டி சந்த்

உறவுமுறைகளில் இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் சுதந்திரம் சார்ந்தது என்ற புரிதல் இன்னமும் உருவாகவில்லை. குறிப்பாக, இந்தியாவில் LGBTQ க்களை ஒதுக்கி வைத்து கேலிக்குரியவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். அப்படியிருக்கும் போது, தனது கரியரின் உச்சபட்சத்தில் இருக்கும் போது ஒரு இந்திய வீராங்கனை அவற்றை பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு தனி துணிச்சல் வேண்டும். அது டூட்டி சந்திடம் இருந்தது. இந்த முறையும் ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல்கள், கேலிகள். கலாச்சார காவலர்கள் டூட்டிக்கு எதிராக படையெடுத்தது. ஆனால், இந்திய விளையாட்டு ஆணையம் டூட்டியின் பக்கம் நின்றது. எதிர்வினைகள் எல்லாவற்றையும் ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் ரன் டூட்டி ரன் என அவருடைய கால்கள் விரும்பியபடி ஓடினார். அது சென்று சேர்த்த இடம் டோக்கியோ ஒலிம்பிக்ஸ்.

தரவரிசைப்படி 100மீ மற்றும் 200 மீ ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்பதற்கான டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டையும் பெற்றார். ஒலிம்பிக்கிற்கு முன்பாக 11.17 நொடிகளில் 100 மீட்டரை ஓடி தேசிய ரெக்கார்டை வைத்துள்ளார். ஒலிம்பிக்கில் 11.10 நொடிகளில் சீறிப்பாய வேண்டும் என்பதே அவரின் இலக்கு.

இந்த கால்கள் இதுவரை எப்போதும் விமர்சனங்களால் கட்டப்பட்டே  ஓடியிருக்கின்றன. இப்போதுதான் முதல் முறையாக எல்லாவற்றையும் உதறிவிட்டு  சுதந்திரமாக ஓடப் போகின்றன. கட்டப்பட்ட கால்களுக்கும் விடுதலையடைந்த கால்களுக்குமான வித்தியாசத்தை டோக்கியோவில் அனைவருக்கும் காட்டவிருக்கிறார் டூட்டி சந்த். அந்த 11.10 நொடிகள் இந்திய வரலாற்றின் முக்கிய மணித்துளிகளாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.



source https://sports.vikatan.com/olympics/brave-athlete-dutee-chand-will-make-mark-in-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக