Ad

புதன், 28 ஜூலை, 2021

காதல் மனைவியின் குடும்பத்தினருக்கு கத்திக்குத்து!-தப்பியோடிய இளைஞர் மின்கம்பியில் சிக்கிப் படுகாயம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பவளக்காரத் தெருவில் வசிப்பவர் ரவி. இவரின் மகன் முகேஷ் (27), வேலூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அதே பகுதியில் வசித்துவந்த சந்திரேசகரன் என்பவரின் இளைய மகள் மோனிஷாவுக்கும் (23), முகேஷுக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்த பின் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மோனிஷாவின் பெற்றோர், பவளக்காரத் தெருவில் தங்கியிருந்த வாடகை வீட்டை காலி செய்துவிட்டு சற்றுத் தொலைவிலுள்ள வீர சிவாஜி தெருவுக்குக் குடிபெயர்ந்தனர். ஆனாலும், காதல் ஜோடி இருவரும் ரகசியமாக போனில் பேசுவது, வெளியில் சந்தித்துக்கொள்வது எனக் காதலை வளர்த்துள்ளனர்.

மணக்கோலத்தில் முகேஷ் - மோனிஷா

தொடர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதியன்று, வேலூர் சத்துவாச்சாரியை அடுத்துள்ள புதுவசூர் தீர்த்தகிரி முருகர் கோயிலுக்குச் சென்று முகேஷும், மோனிஷாவும் திருமணம் செய்துகொண்டனர். இதையறிந்த மோனிஷாவின் பெற்றோர், காவல்துறையினரின் உதவியுடன் சென்று தங்கள் மகளை மட்டும் பிரித்து வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டனர். மணக்கோலத்தில் தனித்துவிடப்பட்ட முகேஷ், மோனிஷாவை நினைத்து உருகியிருக்கிறார். காதல் மனைவியைத் தன்னுடன் அனுப்பிவைக்குமாறு, மோனிஷாவின் வீட்டுக்குப் பலமுறை சென்று அவரின் பெற்றோரிடம் மன்றாடியிருக்கிறார், முகேஷ்.

மோனிஷாவை அவர்கள் அனுப்ப மறுத்ததால், இந்தப் பஞ்சாயத்து கடந்த 20 நாள்களுக்கு முன்பு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறது. காதல் மனைவியைத் தன்னுடன் சேர்த்துவைக்கக் கூறிய முகேஷ் கொடுத்த புகார் மனுவை போலீஸார் பரிசீலனைகூட செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. மாறாக, ‘மோனிஷாவையும், அவரின் குடும்பத்தினரையும் இனி தொந்தரவு செய்யக் கூடாது’ என்று அறிவுறுத்தி முகேஷை அனுப்பியிருக்கிறார்கள். விரக்தியிலிருந்த முகேஷ், கொலை செய்யும் நோக்கத்துடன் மோனிஷாவின் வீட்டுக்கு நேற்று கத்தியுடன் சென்றிருக்கிறார்.

மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த முகேஷ்

வீட்டிலிருந்த மோனிஷாவின் தந்தை சந்திரசேகரன், தாய் சசிகலா, மோனிஷாவின் அக்காள் கௌரி மூவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக வீட்டு மாடியில் ஏறி கீழே குதித்து தப்ப முயன்றார் முகேஷ். அப்போது, மின்கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். கத்திக்குத்து விழுந்த மூவரையும், மின்சாரம் தாக்கிய முகேஷையும் அந்தப் பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மோனிஷாவின் பெற்றோர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். முகேஷின் நிலைமையும் மோசமாக இருந்ததால், அவரும் வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/youth-attempted-murder-on-girlfriends-family-vellore-police-investigating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக