Ad

திங்கள், 26 ஜூலை, 2021

''ஒலிம்பிக் வரை வந்ததே பெரும் கனவு'' - நாடற்றவர்களின் முகமாக மிளிர்ந்த லூனா சாலமன்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் சனிக்கிழமை அன்று 10மீ ஏர் ரைஃபிள் போட்டி தொடங்கிய போது, எல்லாருடைய பார்வையும் ஒரு வீரரை எதிர்பார்த்து காத்திருந்தது. ஆம், அந்த வீரர் ஒலிம்பிக் அகதிகள் அணி சார்பில் கலந்துகொண்ட லூனா சாலமன்

பெண்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் கலந்துகொண்ட லூனா சாலமனால் 50-வது இடமே பிடிக்க முடிந்தது. அவரால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியவில்லை என்றாலும் இப்போட்டியில் அவர் கலந்து கொண்டதே மிகப்பெரிய விஷயம்.

“மிகுந்த கஷ்டத்துக்கு இடையேதான் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எங்களைப் போன்ற அகதிகள், விளையாட்டில் அடுத்த நிலைக்கு முன்னேறுவதும் வெற்றி பெறுவதும் சாத்தியமே” என நம்பிக்கையோடு பேசுகிறார் லூனா.

விளையாட்டுக்கு நம் வாழ்க்கையையே உருமாற்றும் ஆற்றல் இருக்கிறது என்பதை லூனா சாலமன் அளவுக்கு யாரும் உணர்ந்திருக்கமாட்டார்கள்.

தன் சொந்த நாடான எரிட்டீரியாவை விட்டு 2015-ல் ஸ்விட்சர்லாந்து வந்த போது, துப்பாக்கி சுடுதல் என்ற ஒரு விளையாட்டு இருக்கிறது என்பதே லூனாவிற்கு தெரியாது. உண்மையில், அவருக்கு விளையாட்டில் பங்கேற்கும் எண்ணமே இருந்ததில்லை.
லூனா சாலமன்

“எங்கள் நாட்டில் போதிய சுதந்திரம் இல்லாத காரணத்தினால்தான் இங்கு (ஸ்விட்சர்லாந்து) வந்தேன். சொந்த நாட்டில் பெற்றோர்களோடு தங்கியிருந்தாலும் அங்கு பாதுகாப்பான சூழல் இல்லை. எனது வாழ்க்கை முழுவதும் ஏமாற்றமும் சோகமுமே நிரம்பியிருந்தது. வாழ்க்கையில் சில முறைதான் முடிவெடுக்கக் கூடிய வாய்ப்பு நமக்கு கிடைக்கும். அதனால் என் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். தற்போதைக்கு ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஒலிம்பிக் நகரத்தில் வாழ்ந்து வந்தாலும், நிச்சயம் ஒருநாள் என்னுடைய நாட்டிற்கு திரும்பிச் செல்வேன்” எனும் லூனா இன்றும் தன் நாட்டை நேசிப்பதோடு அங்கு வாழ்ந்த நாட்களை மறக்க முடியாமல் தவிக்கிறார்.

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற நிகாலோ கேம்பிரியானியின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார் லூனா. இத்தாலியைச் சேர்ந்த நிகாலோ கேம்பிரியானி 2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வுபெற்றார். அதன்பிறகு தன் சொந்த ஊரான லவுஸானில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு துப்பாக்கி சுடுதலில் (10மீ ஏர் ரைஃபிள்) பயிற்சியளிக்க தொடங்கினார்.

இங்கிருக்கும் அகதிகளில் ஒரு சிலரையாவது டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற வைக்க வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தவர் கேம்பிரியானி. அவர் தேர்வு செய்த அகதிகளில் லூனா சாலமனும் ஒருவர்.

வாரத்தில் நான்கு நாட்கள் ஏர் ரைஃபிளில் பயிற்சி செய்யத் தொடங்கினார் லூனா. பயிற்சியை தொடங்கிய சில நாட்களிலேயே தனக்குள் நேர்மறை மாற்றம் ஏற்படுவதை உணரத் தொடங்கினார். நாம் உருமாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டர் லூனா.

நாளடைவில் கேம்பிரியானியின் பயிற்சியின் கீழ் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தார். இதன் காரணமாகவே ஒலிம்பிக் அகதிகள் அணியில் இவரும் சேர்க்கப்பட்டார்.

இடையில் அவருக்கு குழந்தை பிறந்ததால் சிலகாலம் பயிற்சி தடைபட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் ஒரு வருடம் தள்ளிப்போனது ஒருவகையில் லூனாவிற்கு நல்லதாகிப் போனது.

லூனா சாலமன்

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் எப்படியாவது பதக்கம் வென்று விட வேண்டும் என நம்பிக்கையோடு இருக்கிறார் லூனா.



source https://sports.vikatan.com/olympics/luna-solomon-a-refugee-who-takes-rifle-shooting-and-qualified-to-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக