Ad

சனி, 31 ஜூலை, 2021

வரகு பிடிகொழுக்கட்டை | அவல் மோதகம் | பலாப்பழ மோதகம் - கொழுக்கட்டை ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

கொழுக்கட்டை... நம் பாரம்பர்ய உணவுகளில் முக்கியமானது, ஆரோக்கியமானது. ஆனால், கொழுக்கட்டை என்ற பெயரில் செய்துகொடுத்தால் முகம் சுளிக்கும் குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் மோமோஸ் என்ற பெயரில் அதையே ஆரோக்கியமில்லாத மைதாவில் செய்து கொடுப்பதை கடைகளில் வாங்கி ஸ்டைலாக சாப்பிடுவார்கள். ஆரோக்கிய உணவுகள் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டால் யாருக்குமே அவற்றுக்குப் பழகுவது சிரமமாகத்தான் தெரியும். சிறு வயதிலிருந்தே அதற்குப் பழக்க வேண்டும்.

உங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் விதம்விதமான கொழுக்கட்டை ரெசிப்பீஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வாரம் ஒன்றாகச் செய்து கொடுத்து, மோமோஸ் மோகத்திலிருந்து அவர்களை விடுவித்து ஆரோக்கிய உணவுப்பழக்கம் பக்கம் ஈர்க்கலாமே...

தேவையானவை:

வரகரிசி - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வரகு பிடிகொழுக்கட்டை

செய்முறை:

வரகரிசியை மிக்சியில் சேர்த்து ரவைபதத்துக்கு உடைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதனுடன் அரைத்த வரகரிசி ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, கிளறி மூடி போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆறவிடவும். பிறகு, ஆறிய கலவையைக் கையால் பிடிகொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

வரகுக்குப் பதிலாக சாமை, குதிரைவாலி அரிசியிலும் செய்யலாம்.

தேவையானவை:

கெட்டி அவல் - ஒரு கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் - தலா அரை கப்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

அவல் மோதகம்

செய்முறை:

அவலைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்தூளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கெட்டியாகும்போது இறக்கி வடிகட்டவும். அவலைத் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்தெடுக்கவும். பாசிப்பருப்பையும் தண்ணீர் இல்லாமல் வடியவிடவும். பாத்திரத்தில் அவலுடன் பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெல்லக் கரைசலைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசையவும். பிறகு கையில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

விரும்பினால் சிறிதளவு சுக்குத்தூள் சேர்க்கலாம். சரியாக உருட்ட வரவில்லை என்றால் மேலும் சிறிதளவு ஊறவைக்காத அவலைச் சேர்த்துப் பிசையலாம்.

தேவையானவை:

வறுத்த சிவப்பு அரிசி மாவு - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்

சிவப்பு அரிசி காரக் கொழுக்கட்டை

செய்முறை:

பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் கலக்கவும். மாவுக் கலவையுடன் வெதுவெதுப்பான நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்துக் களைந்து நிழலில் நன்கு காயவைக்கவும். பிறகு மெஷினில் கொடுத்தோ, மிக்சியிலோ நைஸாக அரைத்து, வறுத்துச் சேகரிக்கவும். இந்த மாவில் தேவையானபோது புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்யலாம்.

தேவையானவை:

இடியாப்ப மாவு (அ) அரிசி மாவு - ஒரு கப்
உப்பு - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
வெந்நீர் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, சீரகம், கடுகு - தலா கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
துருவிய கேரட், முட்டைகோஸ் - தலா 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வெஜிடபிள் மோதகம்

செய்முறை:

பச்சை மிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து நைஸாக இடிக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். அதனுடன் இடித்த பச்சை மிளகாய் - கறிவேப்பிலை, கேரட், முட்டைகோஸ் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வேகவிடவும். காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இடியாப்ப மாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரைச் சேர்த்துப் பிசையவும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, பூரி அளவுக்குக் கையால் தட்டவும். ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணத்தை வைத்து, மேலே மற்றொரு பூரியால் மூடி ஓரங்களை ஒட்டவும். குக்கி கட்டரால் ஓரங்களை விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். இதை ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

தேவையானவை:

இடியாப்ப மாவு (அ) அரிசி மாவு - அரை கப்
உப்பு - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

கொட்டை நீக்கிய பலாச்சுளை - 3 (துருவவும்)
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லத்தூள் - கால் கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

பலாப்பழ மோதகம்

செய்முறை:

தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். இடியாப்ப மாவு (அ) அரிசி மாவுடன் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகப் பிசையவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி தேங்காய்த் துருவல், பலாப்பழத் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சுருள கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை மோதக அச்சில் வைத்து அழுத்தவும். அதன் நடுவில் பலாப்பழப் பூரணத்தை வைத்து மாவால் மூடவும் (மோதகத்தை நன்றாக மூடவில்லையென்றால் வேகும்போது பூரணம் வெளியே வந்துவிடும்). பிறகு, மோதகங்களை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

பலாச்சுளையைத் துருவுவதற்குப் பதிலாக மிக்சியில் பல்ஸ் மோடில் (Pulse mode) ஒரு நிமிடம் விட்டுவிட்டு அரைத்துத் தூளாக்கிக்கொள்ளலாம். பலாச்சுளை நன்கு பழுத்திருந்தால் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.



source https://www.vikatan.com/food/recipes/varagu-kozhukattai-aval-modagam-jack-fruit-modagam-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக