Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

` தொடரும் அகழாய்வுப் பணிகள்!'- விவாதங்களும், விளக்கமும்...

“தொல்பொருளாய்வு என்ற வெட்டிவேலை” எனத் தலைப்பிட்டு இதழ் ஒன்றில் ஒரு பக்கக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. ‘கொரோனாவால் தமிழ்நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்துள்ளது. ஒரு பக்கம் மேகதாதுவில் அணைக் கட்டுவதற்குக் கர்நாடகா தயாராகி வருகிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு பட்ஜெட் போடுவதற்கே நிதியில்லை என அரசு சொல்கிறது. தேர்தல் வாக்குறுதிகளாகக் கொடுத்தவைகளைத் தி.மு.க செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகின் எந்த மூளையில் தோண்டினாலும் ஏதாவதொரு தொல்பொருள் கிடைக்கத்தான் செய்யும். ஏற்கெனவே தமிழின் தொன்மையை விளக்கப் பல அகழாய்வுக்குச் செய்யப்பட்டிருக்கும் போது கீழடி, கொந்தகை, அகரம், சிவகளை என வெவ்வேறு இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டிய தேவை என்ன? தொல்லியலுக்காகச் செய்யும் செலவு தண்டம்’ என அக்கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டது தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் “நம்முடைய தொன்மையை நிரூபிக்கும் வகையில் தொல்லியல் சான்றுகள் கிடைக்கும்போது அவற்றை ஏற்கச் சிலருக்கு மனம் வருவதில்லை. தமிழின் பெருமை உலகளாவிய அளவில் தெரியவருவது குறித்து சிலருக்கு வயிறு எரிகிறது. நன்றாக எரியட்டும். தொடர்ந்து இந்த அகழாய்வை மேற்கொள்வோம்” எனத் தொல்லியல், தமிழ் வளர்ச்சித்துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

Also Read: தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள்: `சிலருக்கு வயிறு எரிவதைப் பற்றி கவலை இல்லை’ -தங்கம் தென்னரசு

இதுகுறித்து பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி.ராகவனிடம் பேசினோம் “ஒருநாட்டின் கலாசாரம், வரலாறு, அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலை ஒருவர் நிச்சயம் தெரிந்துகொள்ள அகழாய்வுகள் நிச்சயம் தேவை. அகழாய்வுகள் மூலம்தான் நமது இந்தியாவின் நாகரிகத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. உலகத்துக்கெல்லாம் நாம் முன்னோடி என்று பறைசாற்றிக் கொள்ள முடிகிறது. ராம ஜென்ம பூமி விஷயத்தில்கூட ஆலயம் இடிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க தொல்லியல் ஆய்வுகள்தான் மிக முக்கிய சாட்சியாக இருந்தது. கீழடி என்று எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டின் அன்றைய கால நாகரிகத்தைத் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாது அன்றைய நகர அமைப்பு உள்ளிட்ட பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள தற்போது நமக்கு ஆதாரமாக இருக்கிறது. உத்திரமேரூர் கல்வெட்டு மூலமாகத் தேர்தல் நடந்துள்ள விதம் பற்றி அறிந்துகொள்ளும்போதுதான் நம் மக்களின் அரசியல் அறிவு நமக்கு விளங்குகிறது. ‘மக்கள் உணவுக்கே கஷ்டப்படும் போது விண்வெளி ஆராய்ச்சிக்கு, செயற்கைக் கோள் ஏவுவதற்கு இத்தனை கோடி செலவு தேவையா’ என்று இடசாரிகள் பேசுவதுபோல இதுவா அதுவா என்று கேட்க முடியாது.

ராகவன்

இதுவும் தேவை, அதுவும் தேவை என்பதுதான் இந்த விஷயத்தில் என்னுடைய பார்வை. விஞ்ஞானம், அறிவியல், வரலாறு, புவியியல், வானியல் அறிவியல் என எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை. நம்முடைய நாடு இன்று உலகளவில் நாகரீகத்தில் முன்னோடியாக இருக்கிறது என்றால் அதற்கு தொல்லியல் ஆய்வுகளின் பங்கு மிக முக்கியமானது இல்லையா?” என தொல்லியல் ஆய்வின் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

தி.மு.க செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம் “1958-இல் நாடாளுமன்றத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தி இந்தியாவின் பழம்பெருமையை, ஒவ்வோர் இனமும் வாழ்ந்த வாழ்வியலை எடுத்துச் சொல்ல இந்தியத் தொல்பொருள் சட்டம் இயற்றப்பட்டது. அதை மேம்படுத்தித்தான் 1972 புராதன சின்ன பாதுகாப்புச் சட்டமும் இயற்றப்பட்டது. இந்திய சட்டத்தின்படி தான் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தொல்லியல் ஆய்வுகள் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக நகராகத் தமிழ்நாடும், அதில் வாழ்ந்த மக்களும் இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. மோடியிடம் போய் தொல்பொருள் ஆராய்ச்சிகளை நிறுத்திவிட்டு அதைக் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்குக் கொடுங்கள் எனச் சொல்லவேண்டியதுதானே.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஏன் மோடியிடம் கேட்காமல் தமிழ் மக்களைப் பார்த்துக் கேட்கிறீர்கள். எங்கள் இனத்திற்கென்று கலாசாரம், பண்பாடு, தொன்மை, பெருமை எல்லாம் இருக்கிறது. உயர்ந்த பாரம்பர்யம் இருக்கிறது. அதை உலகுக்குச் சொல்வது எங்கள் கடமை. அதற்கான வேலைகளைச் செய்கிறோம். அதில் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்ற கேள்வியை எழுப்பியவர்...

இவர்கள் சொல்லும் பாரதப் பண்பாடு என்ற ஒன்று இல்லை. பல தேசிய இனங்களைக் கொண்டதுதான் பாரதப்பண்பாடு. அதுமட்டுமல்ல அதில் யார் நாகரிகமாக வாழ்ந்தார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தக் கட்டுரை எழுதியவரின் நோக்கம் இந்தியாவின் நாகரிகமாக ஆரிய, வந்தேறிகளின் நாகரீகத்தைக் கட்டமைக்க வேண்டிய ஆசை இருக்கிறது. அந்த ஆசைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாகத் தமிழர்களின் நாகரீகம் இருப்பது கட்டுரை எழுதியவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. தொல்லியல் ஆய்வுக்கு ஆகும் செலவும் மிகக் குறைவு. எங்கள் பெருமையைப் பேசுவதற்கு அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.

கீழடி

பாரதப் பண்பாடு எனக் கட்டமைக்க முயலும் ஆரியப் பண்பாடு பொய். இந்தியர்களின் உண்மையான பண்பாடு திராவிடப் பண்பாடு என்பதை நிரூபிப்பதற்கு நிறைய வாய்ப்புகள், ஆதாரங்கள் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து இன்னும் வேகமாகச் செய்வோம்” என அகழாய்வு தேவையா என்ற கேள்விக்குப் பதிலடி கொடுத்தார்.

Also Read: தோண்டத்தோண்ட தாழிகள்... ஆச்சர்யம் தரும் கீழடி அகழாய்வு! #ExclusivePhotos

இதுகுறித்து பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் வண்ணநிலவனிடம் பேசினோம் “அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது கொரோனா மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இன்றைய செய்தித்தாள்களில் கூட கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து செய்தி வெளியாகியிருக்கிறது, பள்ளி, கல்லூரிகள் பல ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை. மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகா முயன்று கொண்டிருக்கிறது. இப்படி, உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பல நூறு பிரச்னைகள் இருக்கின்றன. தேர்தலில் தி.மு.க அரசு ஏகப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதில் ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு மற்றவற்றை நிறைவேற்றப் பொருளாதாரம் இல்லாமல் திணறி வருகிறது.

வண்ணநிலவன் எழுத்தாளர்

டாஸ்மாக் மூலம்தான் தற்போது அரசுக்கு வருமானமே வருகிறது. அதிலும் பாதி அரசு ஊழியர்களுக்கான ஊதியமாக சென்றுவிடுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்து நிலையான வருமானத்திற்கான வழிகளைப் பார்க்காமல் மண்ணைத் தோண்டப் போகிறேன். என்னுடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் எனத் தெரிந்துகொள்ளப் போகிறேன் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

நம்முடைய வரலாற்றையும் தொன்மையையும் தெரிந்துகொள்ள நிறைய அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளனவே. உறுதிப்படுத்தப்பட்ட வரலாறு ஏற்கெனவே இருக்கும்போது எல்லா பகுதியில் அகழாய்வு செய்யப் போகின்றேன் என்று தோண்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது. இதற்காக செலவு செய்யப்படும் 5 ரூபாயாக இருந்தாலும் மக்கள் வரிப்பணம் தானே. அது வீணாகும்போது அது பற்றி கேள்வி எழத்தானே செய்யும். ராமர் கோயில் தொடர்பான கருத்துகளையும்தான் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறேன். அதிலும் எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. நமது தொன்மையைத் தெரிந்து கொள்வதால் என்ன நமக்கு என்ன நல்லது நடக்கும்? மத்திய, மாநில அரசுகள் இரண்டையும்தான் கேள்வி கேட்டிருக்கிறது.

கொந்தகை

கேள்வி தொடர்பாக விளக்கம் அளிக்கலாம், மாற்றுக் கருத்து இருந்தால் அதை முன்வைக்கலாம். ஆனால், ‘வயிறு எறியட்டும்’ என்று மந்திரி பேசியிருப்பதைக் கேட்டால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது” என அகழாய்வு தற்போது தேவையா என்றும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-the-discussion-on-excavation-works-by-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக