Ad

சனி, 31 ஜூலை, 2021

''அஞ்சலை பாட்டி, பெயர் எழுத கத்துக்கிட்டீங்களா...?'' - கேட்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

'பள்ளிகள் எப்போது திறக்கப்படும்...' என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பில், பால் வார்த்திருக்கிறது ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு! 'குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக இருப்பதால், தொடக்கப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பரிசீலனை செய்யலாம். அதேசமயம், பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாக வேண்டும்' என்று அண்மையில் அறிவித்துள்ளது 'இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்! இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் துறை சார்ந்த கேள்விகளை முன்வைத்துப் பேசினேன்....

''குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதால், ஆரம்பப் பள்ளிகளைத் திறக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கூறுகிறதே?''

ஐ.சி.எம்.ஆர்

''ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பை நானும் படித்தேன். ஐரோப்பிய நாடுகளில், ஆரம்பக் கல்விக் கூடங்களை திறந்திருக்கின்றனர். அங்குள்ள ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டுள்ளனர். அதுபோல், நம் நாட்டிலும் ஆரம்பக் கல்விக் கூடங்களைத் திறக்கலாம். நமது குழந்தைகள் இயல்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருக்கின்றனர் என்றெல்லாம் அந்த அறிக்கையில் ஐ.சி.எம்.ஆர் சொல்லியிருக்கிறதுதான்.

நம்முடைய மாநிலத்தில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுப்பதாக இருந்தால்கூட, மருத்துவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள், துறைசார்ந்த வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டறிந்துவிட்டுத்தான் ஊரடங்கை அறிவிக்கிறார் நமது முதல்வர். இந்த சூழ்நிலையில், கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, பள்ளிக்கு வர குழந்தைகளிடையே ஆர்வம் இருந்துவந்தாலும்கூட, அவர்களது பெற்றோரின் கருத்து எங்களுக்கு மிக முக்கியம்.

'ப்ளஸ் டூ தேர்வை நடத்தலாமா, வேண்டாமா' என்ற முடிவை எடுப்பதற்குக்கூட மாணவர் சங்கத்தில் ஆரம்பித்து கல்வியாளர் சங்கம், துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் சட்டமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பேசி கலந்தாய்வு செய்துதான் முடிவை அறிவித்தோம். எனவே, 'பள்ளிக்கூடங்களைத் திறக்கலாம்' என்ற முடிவுக்கு முதல்வர் எப்போது வருகிறாரோ... அன்றைக்கு இதுவிஷயமாக நிபுணர்களோடு கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்!''

''ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூட பணியாளர்கள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டதா?''

''பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அளவில் இதுகுறித்து நான் கேட்டிருந்தபோது, தமிழ்நாட்டிலுள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் பெரும்பாலானோர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டுவிட்டார்கள் என்றுதான் பதில் கிடைத்திருக்கிறது. நான் ஏழு மாவட்டங்கள் வரையிலாக சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். அப்படிப் போகிற இடங்களிலெல்லாம், என்னை வரவேற்கின்ற பள்ளிக்கூட பணியாளர்களிடம் 'நீங்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டீர்கள்தானே...' என்று நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். இந்தவகையில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.''

மாணவிகள்

''கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்துவரும் இவ்வேளையில், தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்கள் பள்ளிகளைத் திறக்க முயற்சி செய்துவருகின்றனவே...?''

''இல்லையில்லை... ஏப்ரல் மாதம் திறக்கிறோம், மே மாதம் திறக்கிறோம் என்றெல்லாம் ஆந்திரா உள்பட சில மாநிலங்களில் அறிவித்தார்கள். ஆனாலும் யாரும் இதுவரை பள்ளிகளைத் திறக்கவில்லை. அண்மையில் புதுச்சேரி அரசும்கூட பள்ளி, கல்லூரிகளைத் திறக்கப் போவதாக அறிவித்து, பள்ளிகள்தோறும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித்துறையும் இதுகுறித்து முதல்வருடன் கலந்தாலோசித்தோம். ஆனால், 'புதுச்சேரி சிறிய மாநிலம்... அவர்களைப்போல் நாம் இவ்விஷயத்தில் உடனடியாக முடிவெடுத்துவிட முடியாது. பள்ளிகள் திறப்பில் புதுச்சேரி அரசு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்த்து நாம் இதுகுறித்து முடிவெடுக்கலாம்' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், 'கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை' என்று அறிவித்ததோடு, பள்ளிகளைத் திறக்கும் முடிவையும் தள்ளிவைத்துவிட்டது புதுச்சேரி அரசு.

'பள்ளிகள் திறப்பு' என்பது குழந்தைகளின் உயிர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். எனவே தமிழக பள்ளிக் கல்வித்துறையும் கூடுதல் அக்கறையோடு எல்லா விஷயங்களை உன்னிப்பாக கவனித்துவருகிறது!''

''தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிக்கு வந்துள்ள மாணவர்களைத் தக்கவைப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?''

''இதுவிஷயமாக துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களை ஏற்கெனவே நடத்தி முடித்துவிட்டோம். இதன்படி, மாவட்டத்திலுள்ள மொத்தப் பள்ளிகளில் எந்தெந்தப் பள்ளிகளில் இப்படி அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற கணக்கெடுப்பு எடுக்கச்சொல்லியிருக்கிறோம். இதில், பள்ளிக்கூட கட்டமைப்புகள் போதுமான அளவில் உள்ளதா, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் வசதி உள்ளதா, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் எப்படியிருக்கிறது, ஏற்கெனவே அந்தப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் எப்படியிருந்தது, என்பதுபோன்ற பல்வேறு விவரங்களும் இந்தக் கணக்கெடுப்பில் அடங்கியுள்ளன. இந்த விவரங்களின் அடிப்படையில், பள்ளிகளுக்குத் தேவையான விஷயங்களை ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்துமுடித்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்! முதற்கட்டமாக வருகிற ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பள்ளிக்கு வரச்சொல்லி உத்தரவிட்டுள்ளோம். மாணவர் சேர்க்கைப்பணி, பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல், பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் தொடர்பான நலத்திட்டங்கள் வழங்குதல், கல்வி தொலைக்காட்சி வழியே கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் வழங்குதல் என பல்வேறு பணிகளை செய்யவிருக்கிறோம்!''

மாணவிகள்

''ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், கூடுதல் மாணவர்களுக்குத் தேவையான ஆசிரியர் பற்றாக்குறையை எப்படி நிவர்த்தி செய்யப்போகிறீர்கள்?''

''வழக்கமான கல்வியாண்டாக இருந்தால், ஏப்ரல், மே மாதங்களில்தான் ஆசிரியர் பணி நிரவல் பணியெல்லாம் நடைபெறும். இதன்படி அதிகப்படியான எண்ணிக்கையில் இருக்கக்கூடிய ஆசிரியர்களை, தேவையான இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து பூர்த்தி செய்வோம். ஆனால், இது கொரோனா காலகட்டம் என்பதால், இந்தப் பணிகள் எல்லாம் அப்படியே நடைபெறாமல் நிற்கிறது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். விரைவில், முதல்வரிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் பணி நிரவல் கலந்தாய்வுப் பணிகளை மேற்கொண்டு, தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்களை, தேவைப்படுகிற இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து தேவையைப் பூர்த்தி செய்துவிடுவோம்.''

Also Read: கொம்பு சீவும் நேரு முதல் கலெக்டரைக் காக்கவைத்த துரைமுருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்

''பள்ளிக் கல்வித்துறை நடைமுறையில் இருந்துவந்த 'இயக்குநர் பதவி'யை திடீரென ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ஆணையரை நியமனம் செய்திருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே?''

''இதற்கு, கல்வித் தரத்தை மேம்படுத்தவேண்டும் என்ற காரணத்தோடு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அதாவது, மற்ற எல்லா துறைகளையும்விட பள்ளிக் கல்வித்துறை மீதுதான் நிறைய வழக்குகள் குவிந்துகிடக்கின்றன. மதிப்பெண் கோருதல், ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. எனவே, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலுள்ள முக்கிய அதிகாரிகளும் இந்த வழக்குகளில் ஆஜராவதற்காகவே நிறைய நேரம் செலவிட நேரிட்டுவிடுகிறது. இதனால், பள்ளிகளை ஆய்வு செய்து கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த நடைமுறைகளை எல்லாம் கருத்திற்கொண்டுதான், பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத்துக்கென புதிதாக ஆணையரை நியமித்து பணிகளைத் துரிதப்படுத்த ஆசைப்பட்டோம்.''

பள்ளிக் கல்வித்துறை

''பள்ளிக் கல்வித்துறையில் அனுபவம் இல்லாத ஆணையரை விடவும், துறை சார்ந்த அனுபவமிக்க இயக்குநர்தான் ஆக்கபூர்வமாக செயல்பட முடியும் என்கிறார்களே?''

''இப்போது பள்ளிக் கல்வித் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., நகராட்சிப் பள்ளி ஒன்றில் படித்து வளர்ந்தவர்தான். எனவே, அரசுப் பள்ளிகள் குறித்த அனைத்து விஷயங்களும் அனுபவப்பூர்வமாக அவருக்கும் தெரியும்.

இப்படியான அதிகாரிகளை ஆணையராக நியமனம் செய்யும்போது, 'அரசுப் பள்ளிகளை இன்னும் எப்படியெல்லாம் மேம்படுத்தலாம்' என்றுதான் அவர்கள் பார்ப்பார்களே தவிர... தான் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற மனநிலையில் நடந்துகொள்வதில்லை.

பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரையில், மாணவர், பெற்றோர், ஆசிரியர், பள்ளி நிர்வாகம், துறை சார்ந்த அதிகாரிகள் என இந்த ஐந்து தரப்புமே எனக்கு முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் இணைந்து செயல்படும்போதுதான், தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை அடுத்த நிலைக்கு நாம் கொண்டுசெல்லவும் முடியும்!''

Also Read: `பீகாரிகளுக்கு நம்மளவிட மூளை கம்மி?!' - அமைச்சர் கே.என்.நேரு சொன்னதன் அறிவியல் உண்மை என்ன?

''தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பைப் பற்றி சரிவரத் தெரியாத வெளி மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி, ஆணையர் பொறுப்புக்கு வர நேரிட்டால் அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிறார்களே?''

''தி.மு.க ஆட்சியின் கீழ் அதுபோன்ற ஒரு சூழல் நிச்சயம் ஏற்படாது. வருங்காலத்திலும் நீங்கள் சொல்வது போன்றதொரு நிலைமை உண்டாகிவிடாதபடிக்கு கொள்கை ரீதியிலான சில முடிவுகளை நாம் எடுத்தாகவேண்டும்தான்.''

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

''எம்.ஜி.ஆர் ஸ்டைலில், முதியோருக்கு சிலேட்டில் எழுதப்படிக்கச் சொல்லித்தரும் உங்கள் புகைப்படங்கள் வைரலாகிறதே...?''

(சிரிக்கிறார்) ''கல்வி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் 'எழுத்தறிவு இயக்கம்!' இதற்கான தொடக்கவிழாவில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில், எழுதப் படிக்கத் தெரியாத முதியவர்களைத் தேர்ந்தெடுத்து எழுத்தறிவிக்கும் பணியை ஆரம்பித்தோம். அங்கே வந்திருந்த அஞ்சலை பாட்டியின் கையைப்பிடித்து, சிலேட்டில் அவரது பெயரை எழுத சொல்லிக்கொடுத்தேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு, 'அடுத்தமுறை நான் இங்கே வரும்போது, அஞ்சலை என்ற உங்கள் பெயரை நீங்களே எனக்கு எழுதிக்காண்பிக்க வேண்டும்' என சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நிச்சயம் எழுதிடுவாங்க...!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/school-education-minister-anbil-mahesh-poyamozhi-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக