கடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார். இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் டென்மார்க்கின் மியா பிளிஃபெட்டை சந்தித்தார் சிந்து.
ஒலிம்பிக் தரவரிசைப்பட்டி 13-வது இடத்த்தில் இருப்பவரும், 23 வயது வீராங்கனையுமான மியா, சிந்துவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்துவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. சிந்துவுமே ஆட்டத்துக்கு முன்பாக டென்மார்க் வீராங்கனையுடனான போட்டி எளிதாக இருக்காது எனப் பேட்டியளித்திருந்தார்.
பேட்மின்டன் உலகத் தரவரிசையில் தற்போது 7-வது இடத்தில் உள்ள சிந்து, மியாவை ஐந்து முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளார். இதில் சிந்துவே நான்கு முறை வென்றுள்ளார் என்பதால் ஆரம்பம் முதலே சிந்துவின் ஆதிக்கமே இருந்தது. மியாவை மனதளவில் ஓரங்கட்டி அதிக பிழைகள் செய்யவைத்தார் சிந்து.
முதல் செட்டில் 10-5 என லீட் எடுத்த சிந்துவுக்கு திடீரென டஃப் கொடுக்க ஆரம்பித்தார் மியா. இதனால் ஆட்டம் பரபரப்பானது. 16-15 என போட்டி கடுமையாக மாறினாலும், தனது அனுபவத்தைப் பயன்படுத்தி முதல் செட்டை 21-15 என வென்றார் சிந்து.
இரண்டாவது செட் ஆட்டமும் முதல் செட்டைப் போன்றே தொடங்கியது. ஆரம்பத்திலேயே சிந்து புள்ளிகளைக் குவிக்க, துரத்திப்பிடிக்கும் ஆட்டத்தை ஆடினார் மியா. ஆனால், சிந்து கிளாஸான, மாஸான, நுட்பமான தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். கிராஸ்கோர்ட் டிராப் ஷாட், நெட்டுக்கு அருகிலேயே பந்தை அடிக்கும் டிராப் ஷாட்கள் என மியாவை மிரட்டினார் சிந்து. அதிகப்படியான பிழைகள் செய்ய ஆரம்பித்தார் மியா.
இதனால் இரண்டாவது செட்டையும் 21-13 என எளிதாக வென்றார் சிந்து. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குத் தகுதிபெற்றிருக்கும் சிந்து, அங்கே கடுமையான போட்டியாளரை சந்திக்க இருக்கிறார். இன்னும் சில மணி நேரத்தில் சிந்து காலிறுதியில் சந்திக்கப்போகும் போட்டியாளர் யார் என்பது உறுதியாகும்.
நம்பிக்கையோடும், தைரியத்தோடும், அச்சமின்றி ஆடும் சிந்து காலிறுதியிலும் வெற்றிபெறுவார் என வாழ்த்துவோம்!
source https://sports.vikatan.com/olympics/pv-sindhu-enters-into-tokyo-olympics-quarterfinals
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக