கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். இருவரும் சகோதரர்கள். விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கிரிஷ் பால் பண்ணை, ஹெலிகாப்டர் வாடகைக்கு விடுதல் போன்ற தொழில்களைச் செய்துவந்தனர். இதனால் `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டனர். எம்.ஆர்.கணேஷ் பா.ஜ.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தகப் பிரிவு தலைவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்களுடைய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி ஏஜென்ட்டுகள் மூலமாக செல்வந்தர்கள், வர்த்தகர்கள், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களைக் குறிவைத்து கோடிகளில் பணம் வசூல் செய்துவந்தனர். தொடக்கத்தில் சரியாகப் பணத்தைத் திருப்பித் தந்ததால் பலரும் அவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே ஹெலிகாப்டர் பிரதர்ஸ் யாருக்கும் சரியாகப் பணத்தைத் திருப்பித் தரவில்லை எனப் புகார் கிளம்பியது.
இந்தநிலையில், ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதியர் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தங்களிடம் ரூ. 15 கோடி பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இதையடுத்து தலைமறவான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட ஐந்து பேரைத் தேடிவருகின்றனர். இதற்கிடையே, கும்பகோணம் முழுவதும் ரூ.600 கோடி மோசடி செய்திருப்பதாகவும், சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போஸ்டர் ஒட்டப்பட்டது. பின்னர் அவர்களிடம் மேனஜராக இருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், அவர்களது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் ரூ.8 கோடி மதிப்புடைய 12 சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், ஜபருல்லா-பைரோஜ்பானு தம்பதியர் நேற்று கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர், ``இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி எங்களிடம் ரூ.15 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்த ஹெல்காப்டர் பிரதர்ஸ் மீது புகார் கொடுத்திருந்தோம். பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோரிடமும் புகார் அளித்திருந்தோம்.
கும்பகோணத்தில் பொதுமக்களிடம் மோசடி செய்து வாங்கிய பணத்தை சகோதர்ரகள் வெளிநாட்டில் பதுக்கிவைத்துள்ளனர். மேலும், இவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துகளை முழுமையாக முடக்கிவைக்க வேண்டும். வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதால் அது குறித்தும் போலீஸார் கண்காணிக்க வேண்டும் .பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் ஏமாற்றியிருப்பதால் சி.பி.ஐ விசாரணையும் நடத்தி, அவர்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்” என்றனர்.
இந்தநிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் கொற்கை கிராமத்தில் நடத்திவரும் பால் பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களுக்குச் சம்பளம் தரவில்லை எனவும், அதைப் பெற்று தர வேண்டும் எனவும் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிலரிடம் பேசினோம். ``ஹெலிகாப்டர் சகோதரர்கள் கொற்கை கிராமத்தில் வெளிநாட்டுப் பசு மாடுகளை வைத்து பால் பண்ணை நடத்திவருகின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். அவர்களுக்குச் சில மாதங்களாகவே சம்பளம் தரவில்லை. சம்பளம் கேட்டதற்கு தந்துவிடுவதாகச் சொல்லி தொடர்ந்து ஏமாற்றிவந்தனர். இதேபோல் மாடுகளுக்கு வைக்கோல், தீவனப்புல் கொடுத்தவர்கள் எனப் பலருக்கும் அவர்கள் பணம் தரவேண்டியிருக்கிறது.
வீட்டில் செக்யூரியாக பணிபுரிந்தவர்கள், வாட்ச்மேன், கொற்கையிலுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் சம்பளம் தரவில்லை. இவை மட்டுமே ரூ. 80 லட்சம் இருக்கும். இந்தநிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. எங்களுக்குச் சம்பளம் வழங்கினால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை.
Also Read: “பிரமாண்ட இமேஜ்... கோடிகளில் மோசடி!” - சிக்கலில் கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்
எனவே, பணத்தை பெற்றுத்தர வேண்டும் என பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். இதைப் பெற்றுக்கொண்ட போலீஸார் மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் தொடங்கி அவர்களிடம் பணியாற்றியவர்களிடமும், வர்த்தக ரீதியாக தொழில் செய்து வந்தவர்களிடமும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்திருப்பது மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/complaint-against-tanjore-helicopter-brothers-continues
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக