Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

ட்ரிபிள் ஷாக்... டெபாசிட் நெருக்கடி... தவிப்பில் மக்கள்!

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன, மின்கட்டண உயர்வு சர்ச்சைகள்! ஊரடங்கு காரணமாக, பொருளாதாரரீதியாக மக்கள் தவித்துவரும் நிலையில் வழக்கத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு வரும் மின் கட்டணத்தால் ‘ஷாக்’ அடிக்காத குறையாக அதிர்ச்சியில் இருக்கிறார்கள் நடுத்தர மக்கள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு மே மாதம் மின் பயன்பாட்டைக் கணக்கீடு செய்ய இயலாத சூழலில், ‘2019 மே மாதம் செலுத்திய கட்டணத்தைச் செலுத்தலாம்’ என்று மின்வாரியம் அறிவித்தது. அதில் சில குளறுபடிகள் எழவே, ‘‘நடப்பாண்டின் ஏப்ரல் மாதக் கட்டணத்தையே மே மாதத்துக்கும் செலுத்தலாம் அல்லது மின் மீட்டரில் பதிவாகியிருக்கும் மின்பதிவு அளவீட்டை செல்போனில் படம் பிடித்து, அதை மின் அலுவலகத்துக்குக் கொண்டு சென்று கணக்கீடு செய்து கட்டணம் செலுத்தலாம்’’ என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதில், மின் அளவீட்டைக் கணக்கிடாமல், மற்ற இரண்டு முறைகளின் (2019 மே மாதக் கட்டணம் மற்றும் நடப்பாண்டின் முந்தைய மாதக் கட்டணம்) வழியாக மின்கட்டணம் செலுத்திய பலருக்கும், தற்போது மின்கட்டணம் வழக்கத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கு இரண்டு மூன்று மடங்கல்ல... ஒன்பது மடங்கு மின்கட்டணம் அதிகமாக வந்திருப்பதுதான் கொடுமை. மின்கட்டணம் தந்த அதிர்ச்சி விலகாமல் நம்மிடம் பேசியவர், ‘‘இதென்னங்க அநியாயமா இருக்கு... ஒவ்வொரு மாசமும் 1,000 ரூபாய்க்குள்ளதான் கரன்ட் பில் வரும். ஆனா, இந்த மாசம் 9,400 ரூபா வந்திருக்கு. ஈ.பி-யில போய் கேட்டா, ‘கையில இருக்குற காசைக் கட்டிட்டுப் போங்க, மிச்சத்தை அடுத்த மாசம் கட்டுங்க’னு சொல்றாங்க. அடுத்த மாசம் கட்டுறதா இருந்தாலும், நான்தானே கட்டணும்... ‘இந்த மாசம் டெபாசிட் பணம் எதுவும் வாங்கக் கூடாது’னு அமைச்சர் பேட்டி கொடுத்தார். ஆனா, டெபாசிட் பணமும் கட்டச் சொல்றாங்க. அமைச்சர் ஒண்ணு சொல்ல, அதிகாரிங்க வேற மாதிரி நடந்துக்கிட்டா, நாங்க என்னதான் செய்யுறது?’’ என்று கேட்கிறார் கொதிப்புடன்!

சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த சாரதாதேவி, ‘‘வழக்கத்தைவிட இந்தமுறை ரெண்டு மடங்குக்கு மேல பில் வந்திருக்கு. கொரோனாவால ரீடிங் எடுக்க வர முடியாததை அதுக்குக் காரணமா சொல்றாங்க. அடுத்த மாசம் எவ்வளவு பில் வரப்போகுதுன்னு தெரியலை. இன்னும் ரீடிங் எடுக்கவும் யாரும் வரலை. ஈ.பி-யில எப்போ போய் கேட்டாலும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை’’ என்று நொந்துகொள்கிறார்.

“அதிக கட்டணம் வசூலிப்பது நுகர்வோர் சட்டத்துக்கு எதிரானது” என்று கூறும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் தலைவர் பால்பர்ணபாஸ், ‘‘500, 600 ரூபாய்னு கரன்ட் பில் வந்துக்கிட்டிருந்த பெரும்பாலான குடும்பங்களுக்கு, 3,000 ரூபாய்க்கும் மேல பில் வந்திருக்கு. கூலி வேலைக்குப் போற ஏழை மக்கள் எப்படிச் சமாளிப்பாங்க? மின்கட்டணம் மட்டுமல்ல... டெபாசிட் தொகையையும் அதிகரிச்சிருக்காங்க. பட்ஜெட் போட்டு பொழப்பு நடத்துற மக்கள்கிட்ட திடீர்னு, `மூவாயிரம் கட்டு, நாலாயிரம் கட்டு’னு சொன்னா, எங்கே போவாங்க? அப்படியே டெபாசிட் பணம் கட்டியிருந்தாலும், சொன்ன தேதியில பில் கட்டலைன்னா, முன்னறிவிப்பும் இல்லாம, பீஸைப் பிடுங்கறாங்க. முறையா நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கைகூட கொடுக்குறது இல்லை. இது நுகர்வோர் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலும்கூட. டெபாசிட் பணம் எங்கே போகுதுன்னு வெள்ளை அறிக்கையை இந்த அரசாங்கம் வெளியிடணும்.

பால்பர்ணபாஸ், நவீன், சாரதாதேவி

ரீடிங் எடுக்க வர்றவங்ககிட்ட மின் கட்டணம் பத்தி கேள்வி கேட்டா, `எதுவா இருந்தாலும் ஆபீஸ்ல போய் பேசிக்கோங்க’னு சொல்றாங்க. ‘எதுக்கு அலைச்சல்? பேசாம பணத்தையே கட்டிடலாம்’னு நினைக்குற மக்கள்தான் இங்கே அதிகம். துணிச்சலா போய் கேக்குறவங்ககிட்டயும், கம்ப்யூட்டர்ல அப்படித்தான் இருக்குன்னு முஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடறாங்க. இதனால, பணம் கட்டியே ஆகவேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்படறாங்க. எங்களை மாதிரி ஆட்கள், இதை மேலதிகாரிங்ககிட்ட கொண்டு போனா, அவங்களோ ஒண்ணுமே தெரியாத மாதிரி ‘என்னங்க சார் சொல்றீங்க... இப்படியெல்லாமா நடக்குது?’ன்னு நம்மகிட்டயே ஆச்சர்யமா கேட்குறாங்க. தமிழக முதல்வரே நேரடியா தலையிட்டு, இந்தப் பிரச்னையைத் தீர்த்துவெச்சாத்தான் மக்கள் நிம்மதி அடைவாங்க’’ என்று படபடத்தார்.

மொத்தப் புகார்களையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொண்டு சென்றோம். பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர், ‘‘ஈ.பி அலுவலகத்தில் சரியான பதில் கிடைக்காவிட்டால், 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். டெபாசிட் யாரும் கட்ட வேண்டாம். சாஃப்ட்வேரிலேயே டெபாசிட் குறித்த தகவல்களை எடுத்துவிட்டோம். இதுவரைக்கும் 14 லட்சம் புகார்களைச் சரிசெய்திருக்கிறோம். பணம் கட்டாத இணைப்புகளையும் துண்டிக்காமல்தான் வைத்திருக்கிறோம்’’ என்றார்.

மின்கட்டண உயர்வு என்கிற சுமையிலிருந்து மக்களை மீட்க வேண்டியது அரசின் கட்டாயக் கடமை!



source https://www.vikatan.com/news/general-news/electricity-bill-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக