Ad

சனி, 31 ஜூலை, 2021

போட்டியே இல்லாத மல்யுத்த பிரிவு... தீபக் புனியா பதக்கம் வெல்வாரா?

18 வருடங்களுக்கு பிறகு ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த 22 வயதே ஆன இளம் வீரரான தீபக் புனியா, இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கிலும் சாதிக்கும் எண்ணத்தோடு முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறார். யார் இந்த தீபக் புனியா??

ஹரியானாவின் ஜாஜர் மாவட்டத்திலுள்ள ஜாரா எனும் கிராமத்தை சேர்ந்தவர் தீபக் புனியா. இவருடைய அப்பாவும் தாத்தாவும் உள்ளூரில் பிரபலமான மல்யுத்த வீரர்களாக இருந்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தீபக் புனியாவும் மல்யுத்த களத்தில் குதித்திருக்கிறார்.

1952-ல் கசாபா தாதாசாகேப் எனும் வீரர் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். அதன்பிறகு, நீண்டகாலமாக மல்யுத்தத்தில் இந்தியர்கள் யாரும் பதக்கமே வெல்லவில்லை. கிட்டத்தட்ட 56 வருடங்களுக்கு பிறகு சுஷில் குமார் 2008 ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார். இவரே 2012 ஒலிம்பிக்கிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார். வரலாற்று வெற்றியை சாத்தியப்படுத்திய சுஷில் குமார்தான் தீபக் புனியாவை வழிநடத்தினார். தீபக்கிற்கு தேவையான பொருளாதார உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி பக்கபலமாக இருந்திருக்கிறார். இவரின் உதவியாலயே இராணுவத்திற்கு வேலைக்கு செல்லவிருந்த தீபக் அந்த எண்ணத்தை விடுத்து மல்யுத்தத்தில் முழுக்கவனத்தையும் செலுத்த தொடங்கினார்.

தந்தை மற்றும் சுஷில் குமார் இருவரின் பயிற்சியாலும் முன்னேறிய தீபக் புனியா டெல்லியில் தங்கியிருந்து சில பயிற்சிகளை மேற்கொண்டார். இதன் மூலம் உலக ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் அளவுக்கு உயர்ந்தார். 2001-ல் ரமேஷ் குமார் மற்றும் பல்வீந்தர் சிங் ஆகியோர் ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்தனர். அவர்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார் தீபக். ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்திற்கான சிறந்த வீரர் விருதையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

Deepak Punia
கேடட் லெவலிலும் ஜுனியர் லெவலிலும் பதக்கங்களை குவித்தவர், சீனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டையும் பெற்றார்.

86 கிலோ எடைப்பிரிவில் தீபக் புனியாவிற்கு பெரியளவில் சிரமம் கொடுக்கக்கூடிய வீரர்கள் இல்லை என்பதால் பதக்கம் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிப்புகளை நிஜமாக்கி சாதனைபுரிவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



source https://sports.vikatan.com/olympics/will-wrestler-deepak-punia-make-a-mark-in-tokyo-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக