Ad

புதன், 28 ஜூலை, 2021

தி.மு.க-வின் மகளிரணி மாஸ் திட்டம் முதல் செந்தில் பாலாஜியின் பழைய பாசம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

`கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன்னோடு அ.ம.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கே பதவிகளை வாரி வழங்குகிறார்; உள்ளூர் கட்சி நிர்வாகிகளைப் புறக்கணிக்கிறார்’ என்ற விமர்சனம் ஏற்கெனவே இருக்கிறது. இந்தநிலையில், கரூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கான கேபிள் கனெக்‌ஷன்களைத் தன்னுடன் அ.ம.மு.க-விலிருந்து வந்த ‘கோல்டுஸ்பாட்’ ராஜா என்பவருக்குப் பெற்றுத்தர முயல்கிறாராம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

உள்ளாட்சித் தேர்தல் வந்தால், நகராட்சித் தலைவர் பதவிக்கும் இவர்தான் முன்னிலைப்படுத்தப்படவிருக்கிறார் என்று சொல்லப்படும் நிலையில், கேபிள் டி.வி கனெக்‌ஷன் வருமானத்திலும் கைவைக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் ‘தகதக’ அதிகாரி ஒருவர், ‘மாப்பிள்ளை’யுடன் நெருக்கத்தில் இருப்பதைப்போல காட்டிக்கொள்கிறாராம். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைவைத்தே போங்காட்டம் ஆடும் அந்த அதிகாரி, டிரான்ஸ்ஃபருக்கும், பசையான போஸ்டிங்குக்காகவும் காத்திருப்பவர்களிடம் கறக்க வேண்டியதைக் கறந்துகொண்டு, “மாப்பிள்ளைகிட்ட பேசிட்டேன். சீக்கிரமே உங்க வேலை முடிஞ்சுடும்” என்று அலப்பறை கொடுக்கிறாராம். ஆனால், இவரது உள் நடமாட்டம் அறிந்த சக அதிகாரிகள் சிலரோ, ``மாப்பிள்ளைக்கு இவரை யாருன்னே தெரியாது... பார்ட்டியை எதிர்ல வெச்சுக்கிட்டு, மாப்பிள்ளைகிட்ட பேசுற மாதிரியே இவருக்கு வேண்டப்பட்ட புரோக்கர்கள்கிட்ட பேசி சீன் போடுறாரு” என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள். இதையெல்லாம்விட காமெடி... இந்த விவரம் எதுவுமே தெரியாமல் மாவட்டத்தின் உச்சப் புள்ளி ஒருவர், மாப்பிள்ளைக்கு இவர் மிகவும் நெருக்கம் என்பதை நம்பி அதிகாரிமீது ரொம்ப ஜெலஸியில் இருக்கிறாராம்.

சென்னை கமிஷனராக பதவியேற்ற நாள் முதல் ரௌடிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கர் ஜிவால் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சில தினங்களுக்கு முன்புகூட ‘‘தலைமறைவாக இருக்கும் ரௌடிகள் பட்டியல் தயாராகியிருக்கிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பேட்டியளித்தார். கமிஷனர் சங்கர் ஜிவாலின் இந்த அதிரடியால் அதிர்ச்சியடைந்த சில ரௌடிகள், தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பட்டியலிருந்து தங்களின் பெயர்களை நீக்க முயன்றுவருகிறார்களாம்.

கமிஷனர் சங்கர் ஜிவால்

குறிப்பாக, சிறப்பாக ‘சம்பவம்’ செய்யும் ரௌடி ஒருவர், ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள் மூலம் காய்நகர்த்தியிருக்கிறார். மேலேயிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவே, தனக்கு வலதுகரமாகச் செயல்பட்ட மாவீரன் பெயரைக்கொண்ட ஒரு ரௌடியை போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டு, தனது பெயரைப் பட்டியலிலிருந்து நீக்கவைத்துவிட்டாராம்.

தி.மு.க-வில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். கட்சிரீதியாகப் புதிதாக உருவான மாவட்டங்களுக்கு பெண்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கலாம் என்றொரு பேச்சு அறிவாலயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து, புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள மகளிரணி பெண் நிர்வாகிகள் தங்கள் புரொஃபைலைத் தயார் செய்து தலைமைக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்

இப்படி சுமார் 20-க்கும் மேற்பட்ட பதவிகள் நியமிக்கப்பட வேண்டியிருக்கும் நிலையில், ‘பெண்களை மாவட்டவாரியாக நியமனம் செய்து ஒரே லிஸ்ட்டில் அறிவிப்பு வெளியிட்டால், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அள்ளிவிடலாம்’ என்று தலைமைக்கு ஐடியா கொடுத்திருக்கிறாராம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர். தலைமையும் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறதாம்.

மாஜி அமைச்சர்கள்மீது ஆளும் தரப்பு கைவைக்க ஆரம்பித்திருப்பதில் அதிகமாக ஆடிப்போயிருப்பது முன்னாள் அமைச்சர் வேலுமணிதானாம். லஞ்ச ஒழிப்புத்துறையும் அவருக்கு எதிரான ஆதாரங்களைச் சேகரித்துவரும் நிலையில், கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ரகுநாத் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலுமணிக்கு எதிராகப் புகார் அளித்திருக்கிறார்.

வேலுமணி

‘‘அனைத்து ஒப்பந்தங்களிலும் வேலுமணி கமிஷனாக 12 சதவிகிதம் வாங்கியிருக்கிறார். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று புகாரில் தெரிவித்திருக்கிறார் அவர். ஒருகாலத்தில் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான நபராக இருந்தவர் இந்த ரகுநாத் என்பதால், இவரைவைத்து வேலுமணிக்கு செக் வைக்க தயாராகிவருகிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

குமரி மாவட்டம், அருமனையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதுசெய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விவகாரத்தில், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் எம்.பி., நிர்வாகிகள் எனப் பலரும் கப்சிப் என்று மெளனம் காத்தார்கள்.

அருமனை போராட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

ஆனால், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட், ‘‘ஜார்ஜ் பொன்னையாவைக் கைதுசெய்தது கண்டிக்கத்தக்கது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்’’ என்று அறிக்கை விட்டிருக்கிறார். இதைப் பிற காங்கிரஸ் தலைவர்கள் ரசிக்கவில்லையாம். “நாம் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். எல்லா மதத்தினரும் நம் கட்சியில் இருக்கிறார்கள். பக்குவம் இல்லாமல் முந்திரிக்கொட்டைத்தனமாக தாரகை கத்பர்ட் அறிக்கை விட்டிருக்கிறார்” என்று சத்தியமூர்த்தி பவனுக்குப் புகார் தட்டிவிட்டிருக்கிறார்களாம்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ராஜன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை போலி பட்டா போட்டு ஆக்கிரமிப்பு செய்தது ஒரு கும்பல். அந்த இடத்தில் அத்துமீறி பெட்ரோல் பங்க் கட்டும் பணியும் நடந்துவருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

நீலகிரி

இந்தநிலையில், நீலகிரி மாவட்டத்தில் கெத்தாக வலம்வரும் தி.மு.க முக்கியப் புள்ளி ஒருவரின் பினாமிதான், இந்த நில மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தனது பினாமிக்காக, முக்கியப் புள்ளியே கோத்தகிரி பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, வழக்கு நிலுவையில் இருப்பதையும் சட்டை செய்யாமல் தடையில்லாச் சான்றும் லைசென்ஸும் வாங்கிக்கொடுத்திருக்கிறாராம். விவகாரம் இப்போது அறிவாலயக் கதவுகளைத் தட்டியிருக்கிறது.

மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு, குறுகியகாலத்தில் தூர்வாரும் பணிக்கு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சுமார் 5.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆரம்பத்தில் மொத்தப் பணமும் தூர் வாருவதற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று துறையின் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. ஆனால், நாள்கள் நகர்ந்தனவே தவிர, பணிகள் இன்ச் அளவுக்குக்கூட நகரவில்லை. தூர்வாரவும் ஒப்பந்ததாரர்கள் யாரும் முன்வரவில்லை.

Also Read: அவைத்தலைவர் பதவி ரேஸ் முதல் தழுதழுத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

இதையடுத்து, ரகசியமாகச் சில மீட்டிங்குகள் நடந்து முடிந்த நிலையில், தலைமைக்கு 10 சதவிகிதம், துறை உச்சப் புள்ளிக்கு 10 சதவிகிதம், மாவட்ட முக்கியப் புள்ளிக்கு 5 சதவிகிதம், மக்கள் பிரதிநிதிக்கு 5 சதவிகிதம், மாவட்டக் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் 10 சதவிகிதம் என்ற கணக்கில் எடுத்துக்கொண்டதுபோக, எஞ்சிய தொகையில் ஏனோதானோ என்று தூர்வாரியிருக்கிறார்களாம்.



source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-on-senthil-balaji-and-velumani-news-and-current-political-update

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக