Ad

சனி, 25 செப்டம்பர், 2021

`சார்பட்டா'-வை விடவும் ரோஷமான சண்டை; எறும்புகளின் இந்த தேர்தலை பார்த்திருக்கீங்களா?

பொதுவாக, எறும்பு காலனிகள் மன்னராட்சியாகவே இருக்கும். இல்லை, ராணி ஆட்சி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். ஆம், ஒரு ராணி எறும்பு இருக்கும். அதுதான், அந்த காலனியில் முட்டையிடும். அதை நம்பியே எறும்பு காலனியின் எதிர்காலச் சந்ததியே இருக்கும். அதன் ஆயுள் முடிவதற்குள், அது இடும் முட்டைகளில் அடுத்த ராணி எறும்பு பிறக்கும். இந்த ராணியின் ஆயுள் முடியும்போது, அது முடிசூடும். உணவு தேடுவது, முட்டைகளைப் பராமரித்து அவை பொரித்தவுடன் புதிதாகப் பிறந்த குட்டி எறும்புகளைப் பராமரிப்பது, போரில் சண்டையிடுவது போன்ற வேலைகளைக் கூட்டிலிருக்கும் மற்ற எறும்புகள் மேற்கொள்ளும். ராணியின் வேலை கூட்டை உயிர்ப்போடு வைத்துக்கொள்வதும் முட்டையிடுவதும் மட்டுமே.

எறும்புகள்

ராணியைத் தவிர மற்ற ஆண், பெண் எறும்புகள் அனைத்துமே இனப்பெருக்கம் செய்யும் திறனற்றுதான் இருக்கும். ஆகையால், கூட்டை வழிநடத்தும் ராணி எறும்பு உயிரிழந்தால் அந்தக் கூடு எதிர்காலச் சந்ததிகளே இல்லாமல் அழிந்துவிடும். ஆனால், ஒரு வகை எறும்பு, இந்த ராணி ஆட்சி முறையைத் தவிர்த்து, தங்கள் ராணியைத் தேர்ந்தெடுக்கிறது. இந்தியாவின் மேற்குக் கடலோரத்தில் உள்ள காடுகளில் வாழும் இந்திய குதிக்கும் எறும்பு (Indian Jumping ants) என்ற ஓர் இனம்தான் இப்படிச் செய்கிறது. ஆம், ராணியாகப் பிறக்காத ஒரு சாதாரண எறும்பும்கூட தன் தகுதியை நிரூபித்து ராணியாக முடிசூட முடியும். இதில், இன்னோர் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதை நம் தமிழ்நாட்டிலும் பார்க்க முடியும்.

இவை, தங்கள் கூட்டிலுள்ள ராணி உயிரிழந்தால், காலனியில் உள்ள அனைத்து எறும்புகளும் சேர்ந்து விநோதமான ஒரு போட்டியை நடத்துகின்றன. அந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியடையும் எறும்பு, அடுத்த ராணியாகப் பதவியேற்று முட்டையிடும் திறனைப் பெறுகிறது. இதுவொரு புறம் விநோதமாகத் தெரிந்தால், அதுவரை கருவுறும் திறனின்றி இருக்கும் ஓர் எறும்பு எப்படி முட்டையிடும் திறனைப் பெறுகிறது என்ற கேள்விக்கான விடை அதைவிட விநோதமானதாக உள்ளது. ஆம், புதிதாக ராணியாகும் எறும்பு அதன் மூளையை 25 சதவிகிதம் சுருக்கி, கருப்பையை ஐந்து மடங்கு பெரிதாக்குகிறது.

இந்திய குதிக்கும் எறும்பு/ Indian Jumping ants

Also Read: ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் 20 சிவிங்கிப் புலிகள்; இந்தியாவிற்கு இவை தேவைதானா?

பொதுவாக, வேலைக்கார எறும்புகளுக்கு மூளை பெரியதாக இருக்கும். அதிலிருக்கும் பெண் எறும்புகளுக்கு கருப்பையும் மிகச் சிறியதாகவே இருக்கும். அதனால் அவை கருத்தரிக்க முடியாது. வேலைக்கார எறும்புகள் கூட்டைவிட்டு பல இடங்களுக்குச் சென்று உணவு தேடிக்கொண்டு வர வேண்டும். அப்படிச் சென்று, பின்னர் மீண்டும் தன் காலனிக்கே பாதுகாப்பாகத் திரும்பி வருவதற்கு, வழியைக் கண்டறிவதற்கு மூளையின் செயல்பாடு முக்கியம். ஆனால், ராணி எறும்பு கூட்டுக்கு உள்ளேயே இருக்கும். அதன் முக்கியமான வேலை இனப்பெருக்கம் செய்வது என்பதால், அதன் மூளை சிறியதாகவும் கருப்பை பெரியதாகவும் இருக்கும். அதனால்தான், புதிதாகப் பதவியேற்கும் எறும்பு ராணியாவதற்கு, அதன் மூளையைச் சிறிதாக்கிக்கொண்டு, கருத்தரிக்க ஏதுவாக கருப்பையைப் பெரிதாக்கிக்கொள்கிறது.

இதுமட்டுமன்றி, தேர்ந்தெடுக்கப்படும் ராணிகளால் மீண்டும் கருப்பையைச் சுருக்கி, மூளையைப் பெரிதாக்கிக்கொண்டு பழையபடி வேலைக்கார எறும்பாகவும் மாற முடியும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, ஓர் எறும்பு ராணியாகவும் முடியும், மீண்டும் பழையபடி காலனியில் உள்ள மற்ற எறும்புகளைப் போன்ற சராசரி வேலைக்கார எறும்பாகவும் ஆக முடியும். இத்தகைய அரிதான நடவடிக்கைகள் எந்தப் பூச்சி இனத்திலுமே இதுவரை பதிவு செய்யப்பட்டதில்லை.

Indian Jumping Ant

இந்த எறும்புகளை ஆய்வு செய்த குழுவின் தலைமை ஆய்வாளர் க்ளின்ட் பெனிக் (Clint Penick), ``விலங்குகளின் உலகத்தில்கூட, இந்த அளவுக்கு நெகிழ்திறனோடு செயல்படுவதும் பிறகு மீண்டும் அதைத் திரும்பச் சரி செய்துகொள்வதும் மிகவும் தனித்துவமானது" என்று கூறியுள்ளார்.

ஜியார்ஜியாவில் உள்ள கென்னெசா மாகாண பல்கலைக்கழகத்தில் சூழலியல், பரிணாம வளர்ச்சி மற்றும் உயிரியல் துறையின் உதவிப் பேராசிரியராக இருக்கும் பெனிக், இந்திய குதிக்கும் எறும்புகளைப் பல ஆண்டுகளாக ஆய்வு செய்துகொண்டிருந்தார். இந்த வகையில் எறும்புகளில், காலனியில் இருக்கும் அனைத்து எறும்புகளுக்குமே இனப்பெருக்கம் செய்யும் திறன் இருக்கும். ஆனால், ராணி இறந்த பிறகு நடக்கும் போட்டியில் வெற்றியடைந்தால் மட்டுமே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியும்.

அப்படி என்ன போட்டி அது?

இது ஒருவகையான குதிக்கும் போட்டி என்று கூட சொல்லலாம். இந்த எறும்புகள் அவற்றுடைய உணர்கொம்புகளை (Antennae) வைத்து குதித்து ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். இது கிட்டத்தட்ட ஒரு குத்துச்சண்டையைப் போலத்தான். ஆனால், நாம் கைகளால் சண்டையிடுவோம். எறும்புகள் உணர்கொம்புகளை வைத்து மோதிக்கொள்கின்றன. இதில் யார் தன்னுடைய ஆதிக்கத்தை நிரூபிக்கின்றார்களோ அவர்களே ராணி ஆகும் தகுதி உடையவர் ஆவார். இந்தப் போட்டி ஒரு பெரிய திருவிழாவைப் போல நடைபெறும். சுமார் 40 நாள்களுக்கு இந்தப் போட்டிகள் நடக்கும் அளவுக்குப் பெரிய திருவிழா என்றால் எவ்வளவு பெரிய திருவிழாவாக இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

Indian Jumping Ant

இதுபோன்ற ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான நுணுக்கமான, சிக்கலான நடத்தைகள் மற்ற சில பூச்சி இனங்களிலும் காணப்படுகின்றன. உதாரணத்துக்கு, ராணி குளவிகளை எடுத்துக் கொள்ளலாம். அவையும் இதுபோல் இனப்பெருக்கம் செய்வதற்காகப் போட்டியிடுகின்றன. அதில் ராணி குளவிகள்தான் இனப்பெருக்கம் செய்வதற்காகப் போட்டியிடும். ஆனால், குதிக்கும் எறும்புகளைப் பொறுத்தவரை, ராணி எறும்புகளுக்கு இடையே இந்தப் போட்டி நடப்பதில்லை. வேலைக்கார எறும்புகளில் எது வேண்டுமானாலும் போட்டியில் கலந்துகொண்டு ராணியாக முடியும். ஆம், இது எறும்புகளின் ஜனநாயகம்.

இந்தப் போட்டியில் வெல்லும் எறும்பு, இனப்பெருக்க திறனை அடைவதற்கு ஏற்ப கருப்பையைப் பெரிதாக்கிக்கொள்ள வேண்டும். அதற்காக, அவை முதலில் மூளையை சுமார் 25% சுருக்கிக் கொள்கின்றன. இதன்மூலம் மூளையின் அளவு பெருமளவு குறைகிறது. அதுமட்டுமல்ல, இந்தச் செயல்முறை நடக்கும்போது ராணியாகப்போகும் இந்த எறும்புகளின் உடல் நஞ்சு சுரப்பதை நிறுத்திவிடும். அதோடு பழக்க வழக்கங்களும் மாறுகின்றன. உணவு வேட்டையை நிறுத்திவிடுகிறது. வேறு ஏதாவது உயிரினம் கூட்டுக்குள் வந்தால், தாக்குதல் நடந்தால் தற்காப்புக்குச் செல்லாமல், ஒளிந்துகொள்ளும் பழக்கம் வந்துவிடுகிறது.

Indian Jumping Ant

இவற்றைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதற்காக, பெனிக் மற்றும் அவரது குழுவினர், பல்வேறு கூடுகளில் வென்ற 60 புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராணிகளைப் பிடித்து, ஒவ்வொன்றையும் வேறுபடுத்தி அறிந்துகொள்வதற்காக வண்ண நிறங்களில் சாயம் பூசிவிட்டு, தனிமைப்படுத்தி கண்காணித்தனர்.

இப்படித் தனிமைப்படுத்தியபோது, ராணியாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு அமையாததால், அவை மீண்டும் தன் இனப்பெருக்கத் திறனை இழந்துவிட்டு, பழையபடி வேலைக்கார எறும்பாகவே மாறின. அதன்மூலம் ஆபத்து வந்தால் தன்னைத் தற்காத்துக்கொள்ள முயலலாம் என்று அவை நினைத்திருக்கலாம். அந்த எறும்புகளை அதற்குப் பிறகு, அவற்றுடைய காலனிகளிலேயே மீண்டும் விட்டுப் பார்த்தார்கள். அப்போது திரும்பி வந்த தங்களுடைய ராணியை ஏற்றுக் கொள்வதற்காகப் பதிலாக, கூட்டிலிருந்த வேலைக்கார எறும்புகள் அதைச் சிறை பிடித்து காவலில் வைத்தன.

ஒரு கூட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராணி எறும்புகள் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, மற்ற எறும்புகள் இப்படி செய்கின்றன. ராணியைப்போல், ஓரளவுக்கு வளர்ந்த கருப்பையோடு மற்றுமோர் எறும்பு காணப்பட்டால், மற்ற சில எறும்புகள் ஒன்றுகூடி, அதைக் கடித்து அப்படியே சிறைபிடித்துக் கொள்ளும். இந்தச் சிறைபிடிக்கும் நிகழ்வு சில மணிநேரங்களுக்கோ, ஒருசில சூழ்நிலைகளில் சில நாள்களுக்கோ கூட நீடிக்கலாம். இருந்தாலும் அவை இப்படிக் கடித்துக் கொண்டிருக்கும்போது, சிறைபிடிக்கப்படும் எறும்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு அவை கவனமாகவும் இருக்கின்றன. இதை `எறும்புச் சிறை' என்றும் சொல்லலாம்.

இந்தச் சிறைபிடித்தலுக்கு என்ன காரணமாக இருக்கலாம் என்பது குறித்து ஆய்வுக் குழு ஒரு கருதுகோளை முன்வைக்கிறது.

இந்திய குதிக்கும் எறும்பு/ Indian Jumping ants

Also Read: இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினாலே பூமியைக் காப்பாற்றிவிடலாமா? வீகன் பிரசாரமும் உண்மையும்

போட்டிக்குப் பிறகு, காணாமல் போய் திரும்பி வந்த எறும்பை மற்ற எறும்புகள் சிறைபிடிக்கும்போது, அதற்கு மன அழுத்தம் உண்டாகும். அதன்விளைவாக அதன் உடலில் நிகழும் வேதிம மாற்றங்கள், ராணியாக மாறியதற்கான சுவடுகளை மொத்தமாகச் சரிசெய்து மீண்டும் முழுமையான வேலைக்கார எறும்பாகவே மாற்றிவிடும். இந்தச் செயல்முறை முடிவடைய சில மணிநேரங்களில் இருந்து ஒன்றிரண்டு நாள்கள் வரை ஆகலாம். காலனியில் உள்ள மற்ற எறும்புகள் இந்த மாற்றம் முழுமையடையும் வரை சிறைபடித்து வைக்கின்றன என்று பெனிக் மற்றும் அவரது குழுவினர் கருதுகின்றனர்.

இதுகுறித்து, ``போட்டியில் வெற்றியடைந்து ராணியான எறும்பை நாங்கள் இடம் மாற்றிவிட்டு மீண்டும் அதன் காலனியில் விட்டபிறகு, மீண்டும் அதன் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தோம். அதன் உடல் ராணியானதற்கான தடயமே இன்றி முற்றிலும் வேலைக்கார எறும்பாகவே மாறியிருந்தது. அதன் கருப்பைகள் பழையபடி சுருங்கியிருந்தன. மீண்டும் நஞ்சு சுரக்கத் தொடங்கியிருந்தது. அதோடு அவற்றின் மூளையும் பழையபடி பெரிதாகிவிட்டது" என்று க்ளின்ட் பெனிக் பதிவு செய்துள்ளார்.

எறும்புகள்

பூச்சி இனங்களில் இப்படி மூளையின் அளவைச் சிறிதாக்கிக் கொண்டு, பிறகு மீண்டும் பெரியதாகவே பழையபடி மாற்றிக் கொள்ளும் அபூர்வமான நிகழ்வு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் யார் கண்டது, நம் கண்ணுக்கு இதுநாள் வரை இந்திய குதிக்கும் எறும்புகளின் இந்தப் பழக்கம் தெரியாமல் இருந்தது போலவே, வேறு சில பூச்சி இனங்களிலும் இத்தகைய அரிய செயல்முறைகள் நடந்துகொண்டிருக்கலாம். அதுவும் ஒரு நாள் நமக்குத் தெரிய வரலாம்.



source https://www.vikatan.com/news/environment/impressive-lifestyle-of-indian-jumping-ants-to-become-queen-ant

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக