Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

தனுஷ் தொட்டதெல்லாம் பொன்… உழைப்பெல்லாம் விருது - கமல் + ரஜினி கலந்த காக்டெய்ல் நாயகன்! HBD Dhanush

நான்கு தேசிய விருதுகள், மூன்று ஆனந்த விகடன் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள், அங்கீகாரங்கள். அமிதாப் பச்சனுடன் இந்திப் படம், ஹாலிவுட்டில் ‘கிரே மேன்'... இப்படி தனுஷ் அடைந்த பல பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

‘துள்ளுவதோ இளமை’ அல்லது ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் போஸ்டரில் முதன்முறையாக தனுஷின் உருவத்தைப் பார்த்த எவரும், பிறகு இவர் இத்தனை உயரத்தை அடைவார் என்பதை கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது. ஏன்... தனுஷே கூட இதை நினைத்திருக்க மாட்டார்.

தனுஷின் இந்த அசாதாரணமான வளர்ச்சிக்கு அடிப்படையில் இருவரை பிரதான காரணமாக சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஒருவர் செல்வராகவன். இரண்டாமவர் வெற்றிமாறன்.

குறிப்பாக செல்வராகவனைத்தான் முதலில் சொல்லியாக வேண்டும். ஒரு கல்லை செதுக்கி செதுக்கி அதிலிருந்து ஓர் அழகான சிற்பத்தை வெளியே கொண்டு வருவது போலவே தனுஷ் என்னும் நடிகனை பல்வேறு விதங்களில் செதுக்கியவர் செல்வராகவன். அதனால்தான் செல்வாவை சகோதரராக காண்பதை விடவும் தனது ‘குரு, ஆசான்’ என்று நெகிழ்ச்சியுடன் பல சமயங்களில் குறிப்பிடுகிறார் தனுஷ்.

தனுஷ் - சோனியா அகர்வால்

‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தை நான் முதன்முதலில் பார்த்துக் கொண்டிருந்த போது தனுஷின் உருவத்தைக் கண்டு அரங்கில் கேலியான சிரிப்பொலிகள் துவக்கத்தில் எழுந்தன. ஆனால், சிறிது நேரத்திலேயே அந்தச் சிரிப்பொலிகள் அடங்கி ‘வினோத்’ என்கிற பாத்திரம் ஒட்டுமொத்த அரங்கையும் ஆக்ரமித்துக் கொண்டது. இறுதிக் காட்சியில் தனுஷின் வெறித்தனமான நடிப்பைக் கண்டு முடித்து பார்வையாளர்கள் திகைப்புடன் அரங்கில் இருந்து வெளியேறும் போது அவர்களின் காதுகளில் ‘திவ்யா... திவ்யா!’ என்று வினோத் அலறியது மட்டுமே ஒலித்திருக்கலாம். அப்படியொரு நடிப்பு மாயத்தை தனது இரண்டாவது படத்திலேயே தனுஷ் நிகழ்த்தியதற்கு செல்வராகவனின் அற்புதமான இயக்கம்தான் காரணம்.

தனுஷின் ஒல்லியான உருவம் பார்வையாளர்களிடம் நகைப்பை ஏற்படுத்தாதவாறு செல்வராகவன் ஓர் அருமையான உத்தியைக் கையாண்டார் என்று தோன்றுகிறது. தனுஷின் எளிமையான தோற்றத்தை அவர் இன்னமும் மட்டுப்படுத்தினார். தலைமுடியை ஒட்டவெட்டி, சோடாபுட்டி கண்ணாடியை அணிய வைத்து அந்த உருவத்தை இன்னமும் எளிமையாக்கினார்.

பார்ப்பதற்கு கேலிப்பொருள் மாதிரி இருந்த ‘வினோத்’ என்கிற இளைஞனை ‘திரைக்கதைக்குள்’ இருந்த இதர பாத்திரங்கள் கிண்டல் செய்தன; மலினமாக கையாண்டன. ஆனால் வினோத்திற்குள் இருந்த இன்னொரு பக்கத்தை பார்வையாளர்களுக்கு செல்வராகவன் காட்டினார். அவனுடைய ஆழ்மனது காயங்கள், அசாதாரண திறமைகள், தூய காதலைத் தேடும் அவனது தவிப்பு போன்ற கோணங்கள் நமக்கு மட்டுமே தெரிந்தன.

இதனால் வினோத்தை சரியாகப் புரிந்து கொண்ட ‘திவ்யா’வாக ஒவ்வொரு பார்வையாளனையும் மாற்றியதுதான் செல்வராகவனின் வெற்றி. தனுஷின் ஒல்லியான உருவமெல்லாம் மறைந்து வினோத் என்கிற பாத்திரம் விஸ்வரூபத்துடன் ஆக்ரமித்து நம்மை பிரமிக்க வைத்ததற்கு செல்வராகவனின் அட்டகாசமான இயக்கம்தான் காரணம்.

செல்வராகவன் - தனுஷ்

தனுஷ் நடித்த முதல் திரைப்படமான ‘துள்ளுவதோ இளமை’ 2002-ல் வெளியானது. இயக்கம் ‘கஸ்தூரி ராஜா’ என்று டைட்டிலில் போட்டிருந்தாலும் படத்தில் இருந்த புத்துணர்ச்சியும் மாறுபட்ட பாணியும் இது ‘கஸ்தூரி ராஜா’ ஸ்டைல் இல்லையே என்று நம்மை யோசிக்க வைத்தது. பிறகுதான் தெரிய வந்தது, அது செல்வராகவன் இயக்கிய படம். வணிக காரணங்களினால் தந்தையின் பெயரை இயக்குநராக போட வேண்டிய கட்டாயம். ‘Coming of age’ என்னும் ஜானரில் தமிழில் வெளிவந்த முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று ‘துள்ளுவதோ இளமை’.

இதைத் தொடர்ந்து தனது தம்பியை விதவிதமாக பட்டை தீட்டத் தொடங்கினார் செல்வா. 2006-ல் வெளியான ‘புதுப்பேட்டை’யை அடுத்த பிரமாண்டம் எனலாம். மறுபடியும் அதேதான். ஒல்லியான உருவத்தைக் கொண்ட தனுஷை பிரபல ரவுடியாக காட்டினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதைப் பற்றியெல்லாம் செல்வா கவலைப்படவில்லை. தனது திறமையான இயக்கத்தின் மூலம் அதைச் சாதித்துக் காட்டினார். வெளிவந்து எத்தனையோ ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னோடித் திரைப்படமாக இருக்கிறது ‘புதுப்பேட்டை’.

தனுஷை நாயகனாகக் கொண்டு செல்வா இயக்கி 2011-ல் வெளிவந்த ‘மயக்கம் என்ன’ திரைப்படமும் ஒரு முக்கியமான ஆக்கம். ஆனால் இது பரவலாக கவனிக்கப்படாததை துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஒரு புகைப்படக்கலைஞன், குடியில் வீழ்ந்து ஒரு பெண்ணின் தூய அன்பை பிடிமானமாகக் கொண்டு கரையேறுவதுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். இதில் பல காட்சிகளில் தனுஷ் அசத்தியிருப்பார். குறிப்பாக குடிபோதையில் ஒரு திருமண மண்டபத்தில் மணமக்களிடம் கலாட்டா செய்யும் காட்சி.

நாயகனைத் தாண்டி செல்வராகவனின் திரைப்படங்களில் நாயகிகளும் அதற்கு இணையான முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதை ஒரு சிறப்பான அம்சமாக சொல்ல வேண்டும். சற்று கவனித்துப் பார்த்தால் தனது ஆளுமையைத்தான் தனுஷின் வடிவில் விதவிதமாக செல்வராகவன் நிகழ்த்திப் பார்த்தார் என்றும் தோன்றுகிறது.

தனுஷ் - பாலுமகேந்திரா

அடுத்தது வெற்றிமாறன். தனுஷை இன்னொரு கோணத்தில் பட்டை தீட்டியவராக இவரைச் சொல்ல முடியும். ‘பொல்லாதவன்’ அடிப்படையில் வணிகத் திரைப்படம் என்றாலும் அதை மாறுபட்ட ஆக்கமாக மாற்றிக் காட்டினார் வெற்றிமாறன். பிறகு வெளியான ‘ஆடுகளம்’, தனுஷின் கலைப்பயணத்தில் ‘One of the best’-ஆக அமைந்ததை நான் சொல்லத் தேவையில்லை. ஊரே மகிழ்ந்து பாராட்டியது. சிறந்த இயக்குநர், நடிகர் என்று பல தேசிய விருதுகளை இந்தத் திரைப்படம் வாங்கிக் குவித்தது.

‘மதுரை இளைஞனாக’ ஆடுகளத்தில் பிரகாசித்த தனுஷை, அப்படியே புரட்டிப் போட்டு ‘வடசென்னை இளைஞனாக’ மாற்றியதை வெற்றிமாறனின் உன்னதமான திறமை எனலாம். இந்தப் பாத்திரத்திலும் கச்சிதமாகப் பொருந்தினார் தனுஷ்.

வெற்றிமாறன் அடுத்து இயக்கிய, ‘அசுரன்’ திரைப்படம் இந்தச் சாதனையையும் தாண்டியது. வயதான பாத்திரத்தின் கனத்தை ‘தனுஷ்’ஷால் தாங்க முடியுமா என்கிற சந்தேகம் எனக்குள் இருந்தது. ஆனால் படம் பார்த்த போது தனுஷ் மறைந்து ‘சிவசாமி’ என்கிற பாத்திரம் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. அந்த அளவிற்கு தனது உடல்மொழி, ஒப்பனை போன்றவற்றை மாற்றி அசத்தினார் தனுஷ். இதிலும் தேசிய விருது.

தனுஷ்

மாரி செல்வராஜின் இயக்கத்தில் ‘கர்ணன்’ திரைப்படத்தில் தனுஷ் நிகழ்த்தியதையும் ஒரு குறிப்பிட்ட சாதனையாக சொல்ல வேண்டும். இப்படி சிறந்த இயக்குநர்களின் கைகளில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு அற்புதமான மாற்று முயற்சிகளுக்கு காரணமாக இருந்தாலும், VIP, மாரி போன்ற வணிகத் திரைப்படங்களிலும் நடித்து தனது இருப்பையும் வெற்றியையும் நிலைநிறுத்திக் கொண்டு வருவது தனுஷின் சிறந்த அணுகுமுறையாகத் தோன்றுகிறது.

ஒருவகையில் தனுஷை, ரஜினி + கமலின் கலவை என்று சொல்லலாம். கறுப்பு நிறத்தில் உள்ளவர்கள் ஹீரோ ஆக முடியுமா என்கிற கற்பிதத்தை உடைத்தெறிந்து ரஜினி சாதனை புரிந்தது போல, ஒரு நாயகனுக்கு புஜபராக்கிரம உடல்தோற்றம் முக்கியமல்ல, நடிப்புத்திறன்தான் அவசியம் என்கிற யதார்த்தத்தை தனுஷின் சாதனைப் பட்டியல் நிரூபிக்கிறது.

ஒருபக்கம் வணிகத் திரைப்படம், இன்னொரு பக்கம் மாற்றுத் திரைப்படம் என்று கமல் தனது வெற்றிகரமான இரட்டைக் குதிரை சவாரியை நிகழ்த்திக் கொண்டிருப்பதைப் போலவே தனுஷின் திரைப்பட வரிசையும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. ஆனால், இதை மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே நிகழ்த்தி இருப்பதுதான் தனுஷின் சாதனை.

சிலர் தொட்டதெல்லாம் பொன்னாகும்’ என்பார்கள். அப்படியொரு அதிர்ஷ்டம் தனுஷிற்கு வாய்த்திருக்கிறதோ என்னமோ. நடிகர் என்கிற அடையாளத்தைத் தாண்டி பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என்கிற பல முகங்கள் இவருக்கு தொடர்ந்து வெற்றிகரமாகவே அமைந்திருக்கின்றன. ஏதோ சில இளைஞர்கள் இணைந்து விளையாட்டாக அமைத்ததைப் போன்று உருவாக்கப்பட்ட பாடலான ‘வொய் திஸ் கொலைவெறி’ யூட்யூபில் நூறு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. போலவே ‘ரவுடி பேபி’ பாடலும்.

தனுஷ் - அசுரன்

‘பவர் பாண்டி’ திரைப்படத்தின் மூலம் தனக்குள் ஒரு சிறந்த இயக்குநரும் இருக்கிறார் என்பதை வெளியுலகத்திற்கு நிரூபித்தார் தனுஷ். திரைத்துறையில் சம்பாதிப்பதோடு நின்று விடாமல் அதிலேயே முதலீடு செய்து ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ போன்ற சிறந்த திரைப்படங்கள் வெளிவருவதற்கும் அவர் காரணமாக இருப்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

தென்னிந்தியாவைத் தாண்டி, 2013-ல் இந்தியில் அறிமுகமான ‘Raanjhanaa’ திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு குறிப்பிடத் தகுந்ததாக அமைந்தது. 2015-ல் வெளியான ‘Shamitabh’-ல் இந்தியாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப்புடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் தனுஷுக்கு கிடைத்தது. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லையென்றாலும் 2018-ல் ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்தார் தனுஷ். (The Extraordinary Journey of the Fakir). இவர் நடிக்கும் இன்னொரு அமெரிக்கத் திரைப்படமான ‘The Gray Man’ தயாரிப்பில் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் இளம்தலைமுறை நடிகர்களில் தனுஷின் நடிப்பு பாணியை மிக மிக பிரத்தியேகமானது எனலாம். ஒரு நடிகர் பிரயத்தனப்பட்டு, வலிந்து பல முயற்சிகள் செய்து நடிக்கத் தேவையில்லை. ஒரு காட்சியின் சூழலுக்கேற்ப சரியாக React செய்தாலே போதும். அதைத்தான் சிறந்த நடிப்பிற்கான இலக்கணமாக சொல்வார்கள். அந்த வகையில் தனுஷின் நடிப்பு மிக மிக இயல்பானது.

இப்படியொரு யதார்த்த நடிப்பை ஒரு சிறந்த இயக்குநரின் கண்கள் உடனே கண்டுபிடித்து விடும். எனவேதான் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் ‘அது ஒரு கனாக்காலம்’ திரைப்படத்தில் தனுஷால் நடிக்க முடிந்தது. தோற்றத்தில் மட்டுமல்லாது நடிப்பிலும், ஒரு பக்கத்து வீட்டுப் பையனின் சித்திரத்தை தனுஷால் அதில் இயல்பாக வழங்க முடிந்தது. நடிக்கத் துவங்கி மூன்று ஆண்டுகளைக் கடக்கும் முன்பே, பாலுமகேந்திரா போன்ற சிறந்த இயக்குநரின் அங்கீகாரத்தை தனுஷ் பெற்றதை தனித்த சாதனையாகவே சொல்லலாம்.

நடிக்க வந்த காலத்தில் பார்வைக்கு மிக எளிய பையனாகத் தோற்றமளித்தாலும், மிகக் குறுகிய காலத்திலேயே மிக அதாரணமான பல உயரங்களை அநாயசமாக எட்டிய தனுஷ் என்கிற கலைஞனை தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளம் எனலாம்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-dhanushs-impressive-career-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக