Ad

புதன், 28 ஜூலை, 2021

‘வேலை தேடிவந்த இளைஞர் உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம்!’ கொலை முயற்சி வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கைது!

புதுச்சேரியைச் சேர்ந்தவர் ராஜமௌரியா. பா.ஜ.க-வின் வணிகப் பிரிவுத் தலைவரான இவருக்கு மேட்டுப்பாளையத்தில் சொந்தமான பெட்ரோல் பங்க் இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் பக்கம் நடந்து வந்துகொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த இரண்டு ஊழியர்கள் திருடன் என நினைத்து அந்த இளைஞரை அழைத்து விசாரித்திருக்கின்றனர். அப்போது அந்த இளைஞர், தான் வேலை தேடி வந்ததாகவும், மழைக்கு ஒதுங்க இடம் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல் ஊற்றி ஏரிப்பு

ஆனால் அதை நம்பாத ஊழியர்கள், பங்க் உரிமையாளரான ராஜ மௌரியாவுக்குத் தகவல் கொடுத்தனர். உடனே தன் சகோதரர் ராஜவரதனோடும், சில நண்பர்களுடனும் அங்கு வந்த ராஜ மௌரியா அந்த இளைஞரை விசாரித்திருக்கிறார். அப்போதும் தான் திருட வரவில்லை என்றும், வேலை தேடி புதுச்சேரிக்கு வந்தேன் என்றும் கூறிய அந்த இளைஞர், `அறை எடுத்துத் தங்குவதற்குப் பணமில்லாமல் சாலையில்தான் படுக்கிறேன். மழை பெய்ததால் ஓரமாகப் படுப்பதற்காகத்தான் இடம் தேடி வந்தேன்’ என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அதை நம்பாத ராஜ மௌரியாவும் அவரது நண்பர்களும் அந்த இளைஞரைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் உண்மையைச் சொல்லவில்லையென்றால் உயிரோடு எரித்துவிடுவதாக மிரட்டி, அவர் மீது பெட்ரோலை ஊற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து தீக்குச்சியையும் உரசி மிரட்டியதால் அந்த இளைஞர் மீது தீப்பிடித்து எரிந்தது. உடனே அவர் ``என்னை காப்பாத்துங்க…’' என்று அலறியதையடுத்து, பங்க் ஊழியர்கள் தீயை அணைத்தனர். உடனே அவர்களிடமிருந்து தப்பித்து தீக்காயங்களுடன் நடந்தே கதிர்காமல் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

பா.ஜ.க-வின் வணிகப் பிரிவு தலைவர் ராஜ மௌரியா

அதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து மேட்டுப்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞரின் பெயர் சதீஷ்குமார் என்பதும், திருச்சி பிரட்டியூர் கீழத் தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வேலை தேடி புதுச்சேரிக்கு வந்த அவர் மேட்டுப்பாளையம் பகுதியிலிருக்கும் பல கம்பெனிகளுக்குச் சென்று வேலை கேட்டிருக்கிறார். வேலை எதுவும் கிடைக்காததால் சாலையோரத்தில் தங்கி வேலைக்கு முயன்றுவந்திருக்கிறார். சம்பவத்தன்று நள்ளிரவு மழை பெய்துகொண்டிருந்ததால் பெட்ரோல் பங்க் ஓரமாகப் படுத்துத் தூங்கச் சென்றபோது பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வளைத்திருக்கின்றனர். அவரை திருடன் என்றும், பில்லி சூனியம் வைக்க வந்தவர் என்றும் நினைத்து அவரைத் தாக்கியதுடன் பெட்ரோலையும் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.

எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்

Also Read: புதுச்சேரி: ’அமைச்சர் பதவி யாருக்கு?’ அடித்துக்கொள்ளும் பா.ஜ.க; அலுவலகத்தை நொறுக்கிய தொண்டர்கள்!

தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சதீஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைப் பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராஜ மௌரியா, அவர் சகோதரர் ராஜவரதன், பங்க் ஊழியர்களான சிவசங்கரன், குமார் உள்ளிட்ட நான்கு பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மூன்று பேரைத் தேடி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது காவல்துறை.

யார் இந்த ராஜ மௌரியா ?

புதுச்சேரி பா.ஜ.க-வின் வணிகப் பிரிவு தலைவராக இருக்கும் இவர், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் உறவினர். புதுச்சேரி மாநில முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். மாணவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டே நாள்களில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த இவர், சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்து பதவியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/crime/bjp-cadre-arrested-under-307-section-in-pondicherry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக