திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே நல்லூர் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியின் அருகே முட்புதரில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக நேற்று காலை அந்த வழியே சென்ற பொதுமக்கள் சோழவரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து, சம்பவம் இடத்துக்கு விரைந்த சோழவரம் போலீஸார் முட்புதரில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், பொன்னேரி துணை காவல் கண்காணிப்பாளர் கல்பனா, சோழவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுவிட்டு, இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இளைஞர், செங்குன்றத்தை அடுத்த காவாங்கரைப் பகுதியைச் சேர்ந்த சண்முகபாண்டியன் (26) என்பது தெரியவந்தது. சண்முகபாண்டியன் மீது சோழவரம், செங்குன்றம் காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல், அடிதடி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, முன்விரோதத்தின் காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
சோழவரம் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், சண்முகபாண்டியன் கொலை வழக்கு தொடர்பாக செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (26), முருகன் (26) இருவரும் சோழவரம் காவல்நிலையத்தில் தாங்கள் தான் சண்முகபாண்டியனைக் கொலை செய்ததாகக் கூறி சரணடைந்தனர். அதைத் தொடர்ந்து, இருவரையும் கைதுசெய்த போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: திருவள்ளூர்: கணவரைப் பிரிந்த பெண்; ஆத்திரத்தில் குடும்பத்தினர்! - வழக்கறிஞர் கொலையில் நடந்தது என்ன?
source https://www.vikatan.com/news/crime/two-persons-surrendered-to-police-in-connection-with-the-murder-of-rowdy-near-cholavaram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக