Ad

வியாழன், 29 ஜூலை, 2021

Covid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா?

எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் அளவு குறைந்து, மருத்துவ சிகிச்சை எடுத்து, தற்போது நார்மலாக உள்ளேன். இப்போது எனக்கு ஆக்ஸிஜன் அளவு 98 மற்றும் பல்ஸ் ரேட் 94 என்று இருக்கிறது. தினமும் 2 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்கிறேன். ரத்தச் சர்க்கரை அளவு ஃபாஸ்டிங்கில் 174, சாப்பாட்டுக்குப் பின் 206 இருக்கிறது. ரத்த அழுத்தம் 122/80. Insulin novorapid, lantus 40, Telma H 40 , cilacar 20, Aztor 10 mg, clopilet 75 mg ஆகிய மாத்திரைகளை எடுத்துவருகிறேன். நான் 22.6.2021 முதல் 6.7.2021 வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
நான் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

- தினேஷ் மணி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

``நீங்கள் குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. கூடவே கட்டுப்பாடில்லாத நீரிழிவும் இருக்கிறது. இந்நிலையில் முதலில் நீங்கள் ரத்த அழுத்தத்தையும் ரத்தச் சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல வேண்டும். கோவிட் தொற்று குணமானதில் இருந்து 45 நாள்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால், அதற்குள் சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் சரிபார்த்துக் கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். ஊசி போட்டுக்கொள்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன் நீரிழிவு மருத்துவர் மற்றும் இதயநோய் மருத்துவரை அணுகி ஓர் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது."

என் அம்மாவுக்கு 47 வயது. கடந்த 4 வருடங்களாக Wysolone மாத்திரை எடுத்துவருகிறார். அவருடைய க்ரியாட்டினின் அளவு 1.98 என்று இருக்கிறது. அவர் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- முகமது இப்ராஹிம் (விகடன் இணையத்திலிருந்து)

Diabetes - Representational Image

Also Read: Covid Questions: கோவிட் குணமான பின் ஆன்டிபாடி அளவு 92.5 இருக்கிறது; நான் தடுப்பூசி போடலாமா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

``Wysolone என்பது ஸ்டீராய்டு மாத்திரை. உங்கள் அம்மா எதற்காக ஸ்டீராய்டு மாத்திரை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. முதலில் அது தெரிய வேண்டும். க்ரியாட்டினின் அளவு 1.98 என்பது உங்கள் அம்மாவின் ஆரம்பநிலை நீரிழிவின் காரணமாக இருக்கலாம் அல்லது சிறுநீரகம் பழுதடைய ஆரம்பித்திருக்கக்கூடும்.

எனவே, உங்கள் அம்மாவுக்கு என்ன பிரச்னை என்பதை முதலில் கவனிக்க வேண்டும். மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் க்ரியாட்டினின் அளவுக்கும், Wysolone மாத்திரைக்கும், கோவிட் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தாராளமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/i-am-diabetic-patient-who-recently-recovered-from-covid-19-can-i-take-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக