Ad

வியாழன், 29 ஜூலை, 2021

ஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்!

குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே’ என்ற தலைப்பில் கடந்த வாரம் ஜூவி-யில் குட்கா விற்பனை தொடர்பாக கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அது மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘குட்கா எங்குமே கிடைக்காத வகையில் செயல்பட வேண்டும்’ என்று உத்தரவு போட்டார். அதன்படி, மாநிலம் முழுக்க கடைகளில் அதிரடி சோதனைகள் நடந்த வண்ணமுள்ளன.

மருத்துவத்துறைச் செயலாளரின் உத்தரவுக் கடிதம்

இந்த சூழலில், சோதனையை மேலும் பலப்படுத்த மாவட்டந்தோறும் குழுக்களை அமைத்திட வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கெல்லாம் கடிதம் அனுப்பியிருக்கிறார். உணவுப் பாதுகாப்புப் பிரிவு கமிஷனர் அறிவுரையின்பேரில், மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அக்குழுவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மருத்துவத்துறை துணை இயக்குநர், மாவட்ட தலைமை கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிலிருந்து ஒரு பிரதிநிதி, மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி, மண்டல போக்குவரத்துத்துறை அதிகாரி மற்றும் அரசினால் நியமிக்கப்படும் அதிகாரி என மொத்தம் 10 பேர் அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த 10 பேர் கொண்ட குழு மாவட்டத்தில் உள்ள குட்கா பொருட்களைக் கண்காணிப்பதற்கான அதிகாரம் பெற்றதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்னை: இரண்டு நாள்களில் 1,051.5 கிலோ குட்கா பறிமுதல்; 34 வழக்குகளில் 39 பேர் கைது!



source https://www.vikatan.com/news/politics/district-level-committees-to-stop-the-sale-of-gutka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக