Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

வெற்றிபெற்றதும் வீரர்கள் ஏன் ஒலிம்பிக் பதக்கங்களை கடிக்கிறார்கள்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள், அந்தப் பதக்கத்தை தங்கள் வாயில் வைத்து கடிப்பது போன்ற புகைப்படத்தை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். மைக்கேல் பெலப்ஸ், உசைன் போல்ட், சிமோன் பைல்ஸ் போன்ற பிரபல வீரர்கள் பலரும் ஏன் இப்படி செய்கிறார்கள்?

ஆரம்ப காலங்களில், பணப்பறிமாற்றத்திற்கு தங்கத்தை பயன்படுத்தும் வழக்கமே இருந்து வந்தது. இதனால் தங்கக்காசின் உண்மைத்தன்மையை அறிவதற்காக வியாபாரிகள் அதை கடித்துப் பார்த்து சோதிப்பார்கள். தங்கம் மிருதுவான உலோகம் என்பதால், லேசாக கடித்தால் கூட அதில் தடம் பதிந்துவிடும்.
மைக்கேல் பெல்ப்ஸ்

அதற்காக, ஒலிம்பிக் சாம்பியன்களும் தங்களுக்கு அளித்த பதக்கத்தின் உண்மைத்தன்மையை சோதிக்கத்தான் இப்படி கடிக்கிறார்கள் என நினைத்து விடாதீர்கள். 1912-க்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெல்லும் வீரர்களுக்கு சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட பதக்கங்கள் வழங்கப்படுவதில்லை.

பிறகு ஏன் வீரர்கள் தங்கள் பதக்கத்தை கடிக்கிறார்கள்? எல்லாம் புகைப்படத்திற்காகத்தான். புகைப்பட கலைஞர்களின் தொல்லை தாங்க முடியாமல் தான், அவர்கள் கேட்டு கொண்டதற்காகவே இப்படி போஸ் கொடுக்கிறார்கள்.

பதக்கத்தை கடிப்பது போன்ற வீரரின் புகைப்படம் அடுத்தநாள் காலை பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வெளி வரும்போது அதன் வீச்சே தனி. இதுபோன்ற புகைப்படங்களே மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்ப்பதோடு அதிக விற்பனையும் ஆகிறது.

2010 குளிர்கால ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜெர்மானிய வீரர் டேவிட் மோய்லர், பதக்கத்தைக் கடிப்பது போன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கையில் அவரது பல் உடைந்த சம்பவமும் நடந்தேறியுள்ளது. “புகைப்பட நிருபர் கேட்டுக் கொண்டதற்காக பதக்கத்தை கடித்தபடி கொஞ்ச நேரம் நின்றிருந்தேன். பின்னர் இரவு சாப்பிடும்போதுதான் என்னுடைய ஒரு பல்லை காணவில்லை என்று கவனித்தேன்” எனச் சிரிக்கிறார்.

வேறு எந்த வீரரும் இப்படி பல் மருத்துவரிடம் சென்று நாம் பார்த்ததில்லை. ஆனால் இப்படி பதக்கத்தை கடிப்பது ஒரு பாரம்பரியமாகவே ஒலிம்பிக்கில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரபல டென்னிஸ் வீரர் நடால் கூட, கோப்பை வென்றதும் அதைக் கடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.



source https://sports.vikatan.com/olympics/reason-behind-olympians-biting-a-winning-medal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக