Ad

சனி, 31 ஜூலை, 2021

Covid Questions: பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்; நீரிழிவும் உள்ளது; நான் தடுப்பூசி போடலாமா?

மார்ச் 3-ம் தேதி எனக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பிறகு 124 நாள்கள் கழித்து நான் இதயநோய்க்கும் நீரிழிவுக்கும், ரத்த அழுத்தத்துக்கும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளத் தொடங்கினேன். எனக்கு கடந்த 20 வருடங்களாக நீரிழிவு இருக்கிறது. ஆனால், கட்டுப்பாட்டில் இருக்கிறது. நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

- முரளிதரன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``நீங்கள் ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கிற நீரிழிவுக்கான மருந்துகளோ, பிபி மருந்துகளோ, நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்குத் தடையில்லை. ஆனால், நீங்கள் சமீபத்தில்தான் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இதயத்தில் ஏதேனும் பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் பிளட் தின்னர்ஸ் வகை மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இப்படி ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வோருக்கு தடுப்பூசி போட வேண்டாம் எனத் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் சொல்லப்பட்டது. ஆனால், அந்த அறிவுரை இப்போது திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

A doctor prepares to administer vaccine

Also Read: Covid Questions: கோவிட் குணமான பின் ஆன்டிபாடி அளவு 92.5 இருக்கிறது; நான் தடுப்பூசி போடலாமா?

ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதோ, பைபாஸ் அறுவைசிகிச்சையோ, கோவிட் தடுப்பூசிக்குத் தடையில்லை என்ற நிலை வந்துவிட்டது. ஆனாலும், ஒரு விஷயம். ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளை எடுக்கும் சிலருக்கு, ஊசி போடும் இடத்தில் சின்னதாக ரத்தக்கட்டு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மற்றபடி தடுப்பூசி எடுப்பதால் வேறு பிரச்னைகள் வர வாய்ப்பில்லை."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/i-am-diabetic-and-underwent-bypass-surgery-recently-can-i-take-covid-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக