Ad

வியாழன், 29 ஜூலை, 2021

``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு!" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நகரின் மையப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்த குப்பைக் கிடங்கால் இப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தார்கள். இந்நிலையில்தான் திடீர் திருப்பமாக, இப்பகுதி மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள் கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பினர்.

குறுங்காடு அமைக்கும் பணி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே உள்ள இந்த இடத்தில் கடந்த 25 ஆண்டுகளாகக் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. ஒருகட்டத்தில் இது நீடாமங்கலம் பேரூராட்சியின் ஒட்டுமொத்த குப்பைக்கிடங்காகவே மாறிப்போனது. இந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் சுமார் ஒரு ஏக்கர் அறநிலையத்துறைக்கும், மீதி ரயில்வே துறைக்கும் சொந்தமானது. இந்த இடத்தில் குப்பைகள் கொட்டக் கூடாது என்றும், இடத்தை தூய்மை செய்து தருமாறும் இரு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், நீடாமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பல ஆண்டுகளாகக் கடிதம் எழுதி வந்தனர். இங்கு குப்பைகளுடன், கோழி இறைச்சிக் கழிவுகள், மீன் இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்பட்டதால், இவை அழுகிப் போய், சுற்றுவட்டாரப் பகுதிகளில் துர்நாற்றம் வீசியது. இங்குள்ள குப்பைகளை அவ்வப்போது தீ வைத்து எரித்தனர். இதிலிருந்து வரும் துர்நாற்றம், புகையால் பொதுமக்கள், ரயில் பயணிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்பு அடைந்தனர். இந்தப் பகுதியின் வழியாகச் செல்வதற்கே பலரும் அருவருப்புடன் முகம்சுளித்து வந்தார்கள்.

இந்நிலையில்தான் இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், இந்த இடத்தை ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயற்கை ஆலையாக மாற்றவும் கிரீன்நீடா சுற்றூச்சூழல் அமைப்பினர் தீர்மானித்தார்கள். இங்கு ஆயிரக்கணக்கான மரங்களை வளர்த்து குறுங்காடு அமைக்க, அறநிலையத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர்.

அனுமதி கிடைத்த உடனே கொஞ்சமும் தாமதிக்காமல், சமூக நல அமைப்பான எக்ஸ்னோரா மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடத்தைத் தூய்மை செய்து கருங்கல் நட்டு முள் கம்பி வேலி அமைத்தனர். 3,000 குழிகள் தோண்டப்பட்டு அத்தி, நாவல், இலுப்பை, கொடுக்காபுளி, நீர் மருது, வில்வம், சில்வர் ஓக், செம்மரம், ரோஸ் வுட், பூவரசு, தேக்கு, மகோகனி, பலா உள்ளிட்ட இன்னும் வகைப்பட்ட 3,000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறார்கள்.

முன்பிருந்த குப்பைக் கிடங்கு

Also Read: `குறுங்காடுகளை உருவாக்கி காற்றைத் தூய்மைப்படுத்துவோம்!' - நீடாமங்கலத்தில் புது முயற்சி

3,000 மரக்கன்றுகளுக்கும் தங்குதடையின்றி தினம்தோறும் தண்ணீர் பாய்ச்ச வசதியாக 5 இடங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறுங்காடு தொடக்க விழாவில், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ பி.ராஜமாணிக்கம், எக்ஸ்னோரா தலைவர் எஸ்.செந்தூர் பாரி, ரோட்டரி தலைவர் எஸ்.தியாகபாரி, ரோட்டரி உதவி ஆளுநர் ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்கள். பூண்டி புஷ்பம் கல்லூரி, மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணி மாணவ, மாணவிகளும் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினர். இது இப்பகுதி மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் மிகுந்த நெகிழ்ச்சியோடு பேசிய நீடாமங்கலம் பகுதி மக்கள், ``தினந்தோறும் குப்பைகள் மலை மாதிரி குவிஞ்சிக்கிட்டே இருக்கும். அதுவும் மழைக்காலங்கள்ல ரொம்ப மோசம். வெளியூர் மக்கள் இந்தப் பக்கம் போகும்போதெல்லாம், அருவருப்போடு முகம் சுளிச்சிக்கிட்டு எங்களை ஒருமாதிரியாகப் பார்த்துக்கிட்டுப் போவாங்க. குப்பைகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்துடுச்சினா, தீ வச்சி எரிப்பாங்க. புகை காற்றில் பரவி இங்கவுள்ள எங்களோட குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளார சூழ்ந்து, மூச்சு விடவே சிரமப்படுவோம். ஈக்கள், கொசுக்களோட தொல்லையும் அதிகமாக இருக்கும்.

இந்த வழியாகப் போகும் போதெல்லாம், மூக்கைப் பிடிச்சிக்கிட்டேதான் போவோம். அந்தளவுக்கு நாற்றமடிக்கும். இப்பதான் அந்தப் பிரச்னைக்கு ஒரு விடிவுகாலம் நெருங்கியிருக்கு. கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்புக்காரங்க, இந்த இடத்தை முழுமையாக சுத்தப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் 3,000 மரக்கன்றுகள் வளர்த்து குறுங்காடு உருவாக்குற முயற்சியில் இறங்கியிருக்குறது, மகிழ்ச்சியாக இருக்கு" என நெகிழ்ச்சியோடு பேசுகிறார்கள்.

இதற்கு முன்முயற்சிகள் எடுத்து, இப்பணிகளை ஒருங்கிணைத்த கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு நம்மிடம் பேசியபோது, ``எங்களோட கிரீன் நீடா அமைப்பு, இதுவரைக்கும் வெவ்வேறு இடங்கள்ல 5 குறுங்காடுகளை உருவாக்கி 2,500 மரங்களை வளர்த்துள்ளோம். அதெல்லாம் பெரிய மரங்களாக வளர்ந்து நிக்கிது. இப்ப நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே நாங்க அமைச்சிருக்குறது ஆறாவது குறுங்காடு. நாங்க ஏற்கெனவே அமைச்ச மற்ற குறூங்காடுகளைவிட இது பரப்பளவுல பெரியது. இதுல 3,000 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க ஆரம்பிச்சிருக்கோம்.

மரம் நடும் பணியில் மக்கள்

Also Read: மீண்டும் புத்துயிர் பெறும் கோயில் நந்தவனம்... பக்தியோடு ஒரு பசுமை சேவை!

தினம்தோறும் தண்ணீர் ஊற்றவும், பராமரிப்புப் பணிகளை செய்றதுக்காகவும் சம்பளத்துக்கு வேலையாட்கள் நியமிச்சிருக்கோம். மிகவும் விரைவில் காடு போல் காட்சி அளிக்கும். மக்கள் அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக வாழக்கூடிய பகுதிகல்லயும், வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள இடங்கள்லயும் மக்கள் சுவாசிக்குறதுக்கு ஆரோக்கியமான தூய்மையான காற்று கிடைக்குறதில்லை. இதுமாதிரியான இடங்கள்ல போதுமான அளவுக்கு இயற்கையாக ஆக்சிஜன் கிடைக்க குறுங்காடுகள் மிகவும் அவசியம்’’ எனத் தெரிவித்தார். சமூக அக்கறை கொண்ட பெரிய மனம் படைத்தவர்களின் உன்னத முயற்சியால், குறுங்காடுகள் பெரும் எண்ணிக்கையில் பெருகட்டும்.



source https://www.vikatan.com/news/agriculture/thiruvarur-ngo-has-cleaned-up-the-dump-yard-and-plant-saplings-to-make-it-a-mini-forest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக