Ad

புதன், 28 ஜூலை, 2021

மும்பை: சைபர் பிரிவு நிபுணரை ஏமாற்றி, ஃபேஸ்புக் மூலம் பணம் பறித்த கும்பல்! பேராசையால் நடந்த விபரீதம்

இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இது போன்ற மோசடிகளும் நடக்கின்றன. மும்பை பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த சந்தீப் என்பவர், சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். சைபர் பிரிவு நிபுணரான சந்தீப், மும்பை சைபர் பிரிவு போலீஸாருக்கும் இணையதள குற்றங்களில் துப்பு துலக்க உதவி செய்துவருகிறார். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு துபாய் வங்கியில் பணியாற்றும் நண்பர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் அடிக்கடி சாட் செய்துவந்தனர்.

சித்திரிப்பு படம்

ஒரு கட்டத்தில் சந்தீப் தனக்கு வெளிநாடு செல்லும் ஆசை இருப்பதாகத் தெரிவித்தார். உடனே ஃபேஸ்புக் நண்பர் இதற்குத் தான் உதவுவதாகவும், பணம் சம்பாதிக்க வழி செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். தான் பணியாற்றும் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் ரூ.200 கோடியை கணக்கில் வைத்துவிட்டு இறந்துவிட்டதாகவும், அவருக்கு வாரிசு யாரும் இல்லை என்றும் தெரிவித்தார். அந்தப் பணத்தை சந்தீப் கணக்குக்கு மாற்றித் தருவதாகவும், அதைப் பின்னர் இரண்டு பேரும் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதில் சந்தீப் மயங்கினார். உடனே அதற்கான கட்டணமாக ரூ.2 லட்சத்தை அனுப்பும்படி ஃபேஸ்புக் நண்பர் கேட்டுக்கொண்டார். சந்தீப்பும் ரூ.2 லட்சத்தை அனுப்பிவைத்தார். இதைத் தொடர்ந்து அந்த ஃபேஸ்புக் நண்பர் இமெயில் மூலம் சில ஆவணங்களை அனுப்பிவைத்தார். அந்த ஆவணங்களை எடுத்துச் சென்று தனது நண்பர்களிடம் சந்தீப் ஆலோசனை கேட்டார். அனைவரும் இது உண்மையாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அடுத்தகட்ட பணிகளுக்காக மேலும் 12 லட்சம் ரூபாயை சந்தீப் ஃபேஸ்புக் நண்பருக்கு அனுப்பிவைத்தார். பணம் எந்நேரமும் வந்துவிடும் என்ற எண்ணத்தில் இது குறித்து ஆடிட்டரிடமும் சந்தீப் ஆலோசனை கேட்டார். அவரும் இதில் எந்த முறைகேடும் நடப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார். ஆனால் ஃபேஸ்புக் நண்பர் மேலும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த சந்தீப், ஃபேஸ்புக் நண்பரின் ஃபேஸ்புக் விவரங்களைச் சேகரித்தபோது நைஜீரிய கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. டெல்லி, துபாய், துருக்கியில் இருந்துகொண்டு இந்தக் கும்பல் உலகம் முழுவதும் இது போன்ற மோசடி வேலைகளில் ஈடுபட்டுவந்தது.

சந்தீப் செலுத்திய பணம் வேறு வழியில் வடகிழக்கு மாநிலத்துக்கு வந்திருப்பதையும் சந்தீப் கண்டுபிடித்தார். சைபர் பிரிவில் நிபுணரான சந்தீப் இந்தத் தகவல்களைத் தானே கண்டுபிடித்தார். அதன் பிறகே இது குறித்து பாந்த்ராவிலுள்ள சைபர் பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார். அவரின் புகாரைப் பார்த்த சைபர் பிரிவு போலீஸாருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நன்றாகப் படித்த, அனைத்து விவரங்களும் தெரிந்தவர்களே இது போன்று பணத்தாசையில் மோசடிப் பேர்வழிகளிடம் சிக்கிக்கொள்வதாக போலீஸார் தெரிவித்தனர். சந்தீப் துபாய் போலீஸாரிடமும் இது தொடர்பாக புகார் செய்திருக்கிறார். மும்பை போலீஸாரும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். தொழில் வாய்ப்புகள் தருவதாகவோ, பரிசு அனுப்பியிருப்பதாகவோ கூறி சமூக வலைதளங்களில் பழகும் நண்பர்களிடம் மோசடிப் பேர்வழிகள் பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/a-cyber-expert-in-mumbai-has-lost-rs-12-lakh-to-a-facebook-friend

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக