Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

மார்க்கண்டேயனிலிருந்து ஸ்டீபன் ஹாக்கிங்வரை... எது மாற்றுகிறது விதியை? #Video

புராணக் கதைகள் வெறும் கதைகள் அல்ல. ஒரு காலகட்ட வாழ்வின் பிரதிபலிப்பு. அதில் வாழும் நெறிமுறைகள் உள்ளன. அப்படித்தான் மார்க்கண்டேயனின் கதையில் காணக்கிடைக்கும் புராண கால வாழ்வியல் எப்படி விதியை மாற்றியது என்னும் நுட்பமும் அதில் மறைந்துள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங்

சமகாலத்தில் வாழ்ந்த அற்புத அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். அறிவியல் அறிஞர். தன் 21 வயதில் தசை நோயால் பாதிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் சொன்னார். ஆரம்பத்தில் மனம் தளர்ந்தவர் பின்பு மன ஊக்கம்பெற்று தன் ஆய்வை மேற்கொண்டார். அதன் பின் 55 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த உலகின் இயங்கியல் குறித்த பல முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்தார். மருத்துவ அறிவியல் அவர் மரணத்தைக் கணித்துத் தோற்றது. இத்தனைக்கும் அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. அதை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அதனால்தான் வள்ளுவன் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும் என்று பாடினான்.

சரி, நாம் மிருகண்ட மகரிஷியின் கதைக்கு வருவோம். 16 வயதே வாழக்கூடிய நல்ல மகனா அல்லது நீண்ட காலம் வாழக்கூடிய துஷ்டனா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. பாசத்தைத் தாண்டி தர்மத்தை முன்வைக்கிறார் மகரிஷி. 16 வயது வாழும் மகன் பிறக்கிறான்.

சரி, 16 வயதுவரைதானே வாழப்போகிறான் என்று அவன் விருப்பப்படி வளர்த்து கேட்பதை எல்லாம் கொடுத்துச் செல்லமாகக் காலம் கழிக்கவில்லை மகரிஷி.

அவர் தர்மத்தை அவனுக்குக் கற்றுக்கொடுத்தார். உரிய வயதில் உபநயனம் ஆனது. உபநயனம் ஆகிவிட்டால் பார்க்கும் பெரியோர்களைக் கண்டதும் வணங்க வேண்டும்.

சுமார் 7 வயதில் அவனுக்கு உபநயனம் ஆகியிருக்கும் என்று சொன்னால் அந்த வயதிலிருந்தே அவர் அனைத்துப் பெரியவர்களையும் நமஸ்காரம் செய்துவந்தான்.

ஒரு முறை அவர்களின் ஆஸ்ரமத்துக்கு சப்த ரிஷிகள் வந்தனர். மார்க்கண்டேயன் அவர்களைப் பணிந்து வணங்கினான். சப்த ரிஷிகளும், `தீர்க்காயுஸ்மான் பவ' என்று வாழ்த்தினார்கள். அதன்பிறகே அவர்களுக்கு மார்க்கண்டேயனின் ஆயுள் குறித்த செய்தி தெரிந்தது. ரிஷிகள் திகைத்தனர். ஒருவேளை, தங்களின் வாக்கு பொய்த்துவிடுமோ என்று எண்ணியவர்கள், இதற்கு விடை தேடி அவனை அழைத்துக்கொண்டு பிரம்மலோகம் சென்றார்கள்.

அங்கு மார்க்கண்டேயன் பிரம்மனை வணங்க, அவரும் மரபுப்படி தீர்க்காயுஸ்மான் பவ' என்றே வாழ்த்தினார். சப்த ரிஷிகளும் பிரம்மாவும் வாழ்த்திவிட்டபின் மார்க்கண்டேயனின் உயிரைக் காலன் பரிக்க முடியுமா?

16 வயது நெருங்கியது. காலன் வரும் காலமும் வந்தது. சிவபூஜை செய்ய அப்பா ஆலோசனை சொன்னார். இவன் சிவனையே சரணடைந்து ஒட்டிக்கொண்டான். அவன் அப்பா சிவபூஜை செய்யத்தான் சொன்னார். கட்டிக்கொள்ளவா சொன்னார்... அந்த எண்ணம் எப்படித் தோன்றியது. அதுதான் பெரியவர்களின் ஆசீர்வாதத்தின் பலன்.

சிவபெருமான்

உரிய நேரத்தில் ஆசீர்வாதங்கள் நம்மைக் காக்கும். மார்க்கண்டேயன் சிவபெருமானைக் கட்டிக்கொண்டான். பெரியவர்களின் வாக்குப் பொய்த்துப்போக அந்த பரமேஸ்வரன் விடுவானா?

காலனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்தருளினார் இறைவன் என்கிறது புராணம்.

நம்பிக்கையும் நல்லொழுக்கமுமே விதியை மாற்றும் ரகசியம்.

எப்போது வயதில் பெரியவர்களைப் பார்த்தாலும் அவர்களை வணங்குங்கள். அவர்களின் வாழ்த்து உங்களை வாழவைக்கும்.



source https://www.vikatan.com/spiritual/gods/what-will-change-the-fate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக