Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

புத்தம் புது காலை :டாட்டூ குத்துவதற்கு முன் ஒருமுறை அல்ல பலமுறை யோசிங்கள்... குறிப்பாக கர்ப்பிணிகள்!

"ஹலோ ஆன்ட்டி" என்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் அழைத்தபடி ஸ்கர்ட் மற்றும் ஷர்ட், கலர் செய்யப்பட்ட முடி, ஊதாநிற உதட்டுச்சாயம், அங்கங்கே வண்ண வண்ண டாட்டூக்கள் என அல்ட்ரா மாடர்னாக லேட்டஸ்ட் ட்ரெண்ட்டில் இருந்த அந்த கர்ப்பிணிப்பெண், மருத்துவமனைக்குள் நுழைந்தது முதல் வெளியே கிளம்பிச் செல்லும்வரை மொத்த மருத்துவமனையும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது.


அவள் புறப்பட்டுச் சென்றபின்னும் திகைப்பு மாறாமல் நின்றுகொண்டிருந்த எனது உதவி மருத்துவர், ''என்ன மேடம்... கை, கால், உடம்பு பூரா இத்தனை டாட்டூ போட்டிருக்காங்க. இந்த டாட்டூக்களால வேற பாதிப்புகள் வராதா? மைக்ரோபயாலஜி புக்ல ஹெப்படைடிஸ் சாப்டர்ல வைரஸ் படமும், டாட்டூ படமும் அடுத்தடுத்து போட்டிருப்பாங்களே மேடம்?" என்று கேட்க, டாட்டூ என்ற பச்சை குத்துதல் பற்றி யோசிக்க வேண்டியதாய் போயிற்று.

வண்ண வண்ண டாட்டூக்கள் என்பது இன்றைய புதிய ஃபேஷனாக இருந்தாலும், உண்மையில் இது புது ட்ரெண்ட் இல்லை. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் வருடங்கள் பழமையானது என்கிறது வரலாறு. முதன்முதலில் மனிதன் காட்டில் வாழும்போதே விலங்குகளை அடையாளம் காண பச்சை குத்திக் கொண்டானாம். வெகுகாலமாக இந்திய இலங்கை மக்களின் உடலிலும், ஜப்பானின் ஐனு இன மக்களிடம் முகத்திலும் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது.

ஏஞ்சலீனா ஜோலி

இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, எகிப்திய, சீன, இந்திய, ரோமானிய, சமோவா என உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நாகரிகங்களிலும், அந்தந்த மக்களின் பாரம்பரியத்தையும், சமூக அந்தஸ்தையும் குறிக்கும்விதமாக இந்த பச்சைக் குத்துதல் என்பது ஒரு சடங்காகவே கடைபிடிக்கப்பட்டுள்ளது.


நமது நாட்டில் போர்களில், போட்டிகளில் வெற்றியடைந்ததைக் குறிப்பிடும் வகையில் ஆண்கள், மார்பிலும், தோள்பட்டையிலும் பச்சைக் குத்திக் கொண்டனர் என்றால் பெண்கள் பச்சை குத்துவதற்கு வேறு காரணங்கள் இருந்தனவாம். மூக்குத்தி, வளையல் ஆகிய பொன் நகைகளைக்குப் பதிலாக, அவற்றைப் போலவே பச்சைக் குத்திக் கொள்வதும், திருமணமானதைக் குறிக்கவும், சில பழங்குடி மக்கள் தங்களது இளவயதுப் பெண்களைப் பாதுகாக்க, அவர்களது முகத்தில் விகாரமாக பச்சைக் குத்துவதும் என காலங்காலமாக நாடெங்கும் பச்சை குத்துதல் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

கூடவே, அக்காலத்து பெண்கள் கணவர் பெயரை சொல்லமாட்டார்கள் என்பதால், யாராவது கேட்டால் காட்டுவதற்காக கைகளில் கணவர் பெயரை பச்சைக் குத்திக்கொள்வதும் நடைமுறையில் இருந்துள்ளதை நாம் அனைவரும் நன்கறிவோம்.

ஆண்களிடையே வீரம், வெற்றி மட்டுமன்றி, சமூக ரீதியாக தங்கள் குலம், குழு, இனம், கடவுள் குறித்த அடையாளங்களாக பச்சை குத்தும் பழக்கம் இருந்திருக்கிறது. பல்வேறு நாடுகளில் சிறை தண்டனை பெற்றவர்களுக்கும், மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் அது குறித்த குறிகள் அழிக்க முடியாதபடி இருக்க வேண்டும் என்பதாலும் பச்சை குத்தப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன.


ஆல்ப்ஸ் மலையில் ஐஸாக உறைந்த ஓட்ஸி என்ற ஆதிமனிதனில் ஆரம்பித்து எகிப்திய மம்மிகள், வின்ஸ்டன் சர்ச்சில், ஜார்ஜ் ஐந்தாம் மன்னர், ஜான்-ஓ-ரெய்லி, எம்மா டிபெர்க் தொடங்கி, ஏஞ்சலினா ஜோலி, சைஃப் அலிகான், தீபிகா படுகோன் போன்ற நடிகர்கள்... லியோனல் மெஸ்ஸி, நெய்மர் போன்ற விளையாட்டு வீரர்கள் என யுகங்கள், துறைகள், மொழிகள், இனங்கள், நாடுகள் தாண்டி அனைவருக்கும் பொதுவான விஷயமாக இன்றும் இந்த டாட்டூக்கள் இருந்து வருகின்றன.

பென் ஸ்டோக்ஸ்

இப்படி காலம் காலமாய் இருந்துவரும் ஒரு விஷயத்திற்குள் ஹெபடைடிஸ் என்ற வைரஸ் தொற்று எங்கிருந்து நுழைந்தது என்பதுதான், இப்போது நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

நமது உடலிலேயே பெரிய உறுப்பான தோல் உண்மையில் அடுக்குகளால் ஆனது. இதில் வெளியே தெரியும் பகுதியை எபிடெர்மிஸ் என்கிறோம்.அதற்குக் கீழே உள்ள டெர்மிஸ் என்ற உள்பகுதியில் தான் வியர்வை நாளங்கள், எண்ணெய் சுரப்பிகள், முடியின் வேர்க்கால்கள், தொடு உணர்வுக்கான நரம்புகள், இரத்த நாளங்கள் மற்றும் செல்கள் என அனைத்தும் காணப்படுகின்றன. பொதுவாக எபிடெர்மிஸ் என்ற வெளிப்புறத் தோலின் செல்கள் இறந்து, உரிந்து, தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்ளும் என்பதால், இந்த டாட்டூக்கள் நிரந்தரமாக இருப்பதற்காக, எபிடெர்மிஸ் பகுதிக்குக் கீழே, கொஞ்சம் ஆழமாக இருக்கும் டெர்மிஸ் பகுதிக்குள் சிறு ஊசிகளின் மூலமாக வண்ண நிற மையை செலுத்தும் முறையைத்தான் பச்சைக் குத்துதல் என்கிறோம்.


ஆரம்ப காலங்களில் நம் மக்கள் மார்பு, கை, கால், முன்னங்கை, புயம் போன்ற இடங்களில் மட்டும்தான் பச்சை குத்திக் கொள்வார்கள். இதற்காகவே குறவர் என்றொரு இனமே அப்போது இருந்தது. அவர்கள் இயற்கையான மஞ்சள்பொடி, அகத்திக்கீரை ஆகியவற்றை தீயிலிட்டு எரித்து கரியாக்கி, அத்துடன் நீரைச் சேர்த்து பச்சை குத்துவதற்கான மையை உருவாக்குவார்கள். பிறகு, இந்த மையை கூர்மையான சுடப்பட்ட ஊசி அல்லது கத்தியினால் தொட்டு தோலில் குத்தி தேவையான உருவங்களை வரைவார்கள். ஆனால், தற்போது எலக்ட்ரிக் டாட்டூ மெஷின் போன்ற புதுவித இயந்திரங்களால் இரசாயனங்களைத் தொட்டு உடலெங்கும் குத்திக் கொள்வது துவங்கியபின், நோய்த்தொற்றும் சேர்ந்து கொண்டது எனலாம்.

விராட் கோலி

உண்மையில் இந்த டாட்டூ மெஷின்களில் உள்ள மெல்லிய ஊசிகள், நிமிடத்திற்கு 3000 முறை வரை தோலைத் துளைத்து, ஒரு சிறிய தையல் இயந்திரம் போல செயல்படுகின்றன. டாட்டூ கலைஞர்கள் இதற்கான பிரத்தியேக ஊசிகளைப் பயன்படுத்துவதாகக் கூறினாலும் இதிலுள்ள மிகப்பெரிய பிரச்னை, இந்த ஊசிகளை சுத்திகரிக்கும் முறைகள் தான். சுத்திகரிக்கப்படாத இந்த மெல்லிய ஊசிகளின் மூலமாக, ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ்கள் இரத்தத்தின் மூலமாக எளிதாகப் பரவுகின்றன.


அப்படி பரவும் இந்த பி & சி வைரஸ்கள், உடலிலேயே தங்கி, நாட்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றிற்கு காரணியாக இருப்பதுடன், கர்ப்ப காலத்தில் தாயையும், சேயையும் ஒருசேர பாதிக்கிறது. கூடவே இது வருடத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான நோய்த்தொற்று பாதிப்புகளையும், பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளையும் உலகளவில் ஏற்படுத்தி வருகின்றன என்ற அதிர்ச்சிகரமான குறிப்புகளும் காணப்படுவதால் தான், இவற்றை கவனத்தில் கொள்ள, மருத்துவப் பாட புத்தகத்தில் அடுத்தடுத்து இவை காணப்படுகிறது.


ஃபேஷன் என்பதுடன் டாட்டூ எனக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது என்று கூறும் இளைய சமுதாயத்திடம், "டாட்டூ வேண்டாம்" என்று சொல்லமுடியாது. ஆனால், "பாதுகாப்பாக இருங்கள்" என்று நிச்சயம் சொல்லலாம் அல்லவா?


அத்துடன் இன்னும் சில விஷயங்களையும் இளைய தலைமுறையினரிடையே கவனப்படுத்துவதும் இப்போது அவசியமாகிறது.


* பச்சை குத்திக் கொள்வது அழியப்போவதில்லை என்பதால் அது கட்டாயம் தேவைதானா என்று ஒன்றுக்கு இரண்டுமுறை யோசியுங்கள்.

* பச்சை குத்துதல் மயக்க மருந்து கொடுக்காமல் செய்யப்படுவதால், நிச்சயமாக வலிக்கும். பச்சை குத்தும்போது பலவிதமான நிறமிகள் உட்செலுத்தப்படுவதால், தோல் நோய், தோல் அழற்சி மற்றும் ஒவ்வாமை போன்ற பிற சிக்கல்களும் ஏற்படலாம்.

* பச்சை குத்தியபிறகு அந்த இடத்தில் இன்ஃபெக்‌ஷன், சீழ் பிடித்தல், பூஞ்சை தொற்று ஆகியனவும், Granulomas என்ற வீக்கங்களும் ஏற்படக்கூடும். ஒரு சிலரில் பச்சைக் குத்திய இடங்களைச் சுற்றி keloids எனப்படும் பெரிய தழும்புகளும், மிக அரிதாக புற்றுநோயும் கூட ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


* எதிர்காலத்தில் ஒருவேளை மனது மாறி, பச்சை குத்தியதை அழிக்க வேண்டிவந்தால், அதற்கான சீரமைப்பு அல்லது லேசர் சிகிச்சை குறித்த தகவல்களையும் அதற்கான செலவையும் தெரிந்து கொள்வதும் இங்கு அவசியமாகிறது.

* மேலும் பச்சை குத்தும் பணியாளர்கள் முறையாகப் பயிற்சி பெற்றவர்களா என்பதைத் தெரிந்து கொள்வதுடன், பச்சை குத்தும் முன் கையை நன்கு சுத்தமாக கழுவி புதிய கையுறை அணிகிறார்களா, புதிதாக சீல் திறக்கப்பட்ட உறையிலிருந்துதான் மையையும் ஊசியையும் உபயோகிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* பச்சை குத்தியபின் அந்த தோல் பகுதியில் ஒட்டாத தளர்வான ஆடைகளை அணிவதுடன், பச்சை குத்திய இடம் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.


* எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வாமையோ, இரண்டு வாரங்களுக்கும் மேல் புண் ஆறாமல் இருந்தாலோ உடனடியாக அருகாமை மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

ட்ரெண்டிங் ஃபேஷனில் அக்கறை செலுத்தும் அளவுக்கு, அதற்காகப் பயன்படுத்தப்படும் பச்சை குத்தும் ஊசிகளிலும், நிறமிகளிலும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இந்த ஹெபடைடிஸ் வைரஸ்கள் எதற்காகவும், யாருக்காகவும் பொறுத்திருப்பதில்லை... கர்ப்பிணிப் பெண்கள் உட்பட!


#Hepatitis Can't Wait #World Hepatitis Day



source https://www.vikatan.com/health/healthy/what-we-should-know-about-tattoos-and-hepatitis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக