Ad

புதன், 28 ஜூலை, 2021

`அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து!’ - சொல்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

`எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா பேரைச் சொல்லாததால்தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது' என்று முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பேசியதை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டித்திருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்வர் ராஜா.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது பேசிய முன்னாள அமைச்சர் அன்வர் ராஜா, ``தேர்தல் நேரத்தில் கிராம மக்கள் அ.தி.மு.க-வினரிடம் எதிர்பார்ப்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பேரைச் சொல்கிறார்களா என்பதைத்தான்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பேரை சொல்லாமல் மறைத்தால், மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள். தேர்தலின்போது பல இடங்களில் அதுதான் நடந்தது. ஆனாலும், 75 இடங்களில் நாம் வெற்றிபெற்றுவிட்டோம். ஜெயலலிதா இருந்தபோதும் 65 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாக இருந்தோம். அவர் சிறைக்குச் சென்றபோது 200 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

ஜெயலலிதா

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா உயிருடன் இருந்து முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால், 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். ஆனால், இப்போது தோற்றதற்குக் கட்சியினர் யாரும் கவலைப்படவில்லை. இந்தத் தோல்விக்கு யாராவது தற்கொலை செய்திருக்கிறார்களா?" என்று பேசினார்.

அவர் பேசியதை அதிமுக-வினர் பல மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஷேர் பண்ணியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துப் பேசும் கட்சியினர், `கடந்த சில வருடங்களாக கட்சித் தலைமைக்கு எதிராக, அ.தி.மு.க கூட்டணி நிலைபாட்டை விமர்சனம் செய்துவரும் அன்வர் ராஜாவை, கட்சியின் சிறுபான்மை சமூக முகம் என்பதால் தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. கட்சியில் தன்னை ஒதுக்குகிறார்கள் என்பதால் இப்படி எதையாவது பேசுவது இவருக்கு வாடிக்கையாகிவிட்டது' என்று சிலரும், `அவர் பேசியது சரிதான்’ என்று சிலரும் வாதம் செய்துவருகிறார்கள்.

Also Read: `எங்கள் முதல்வர் வேட்பாளரை ஏற்கவில்லை எனில் தனித்துப் போட்டியிடட்டும்!' - அன்வர் ராஜா பதிலடி

இங்கு மட்டுமல்ல, சமீபத்தில் தேசிய சணல் வாரியத் தலைவராக பா.ஜ.க-வைச் சேர்ந்த குப்புராமு பொறுப்பேற்றதற்காக ராமநாதபுரத்தில் நடந்த பாராட்டுவிழாவில், ``பா.ஜ.க நல்ல கட்சி. தேர்தலில் தோத்தவங்களுக்கு பதவி வழங்குது. எல்.முருகன், அண்ணாமலையைத் தொடர்ந்து குப்புராமுக்கு பதவி வழங்கியுள்ளது” என்று பேச, இவர் பாராட்டுகிறாரா, கிண்டலடிக்கிறாரா என்று அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா உட்பட பா.ஜ.க-வினர் குழம்பிப்போனார்கள்.

செல்லூர் ராஜூ

இந்தநிலையில், அன்வர் ராஜாவின் பேச்சு பற்றி செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, ``அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து. அது தவிர்க்கப்பட வேண்டியது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைச் சொல்லாமல் அ.தி.மு.க இல்லை. அவர்கள் படங்களைப் பெரிதாக வைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் படங்களைச் சிறிதாக வைத்துதான் பிரசாரம் செய்யப்பட்டது. தோல்வி எதிர்பாராதது. வேறு எதுவும் காரணமல்ல" என்று தெரிவித்தார். இந்த விவகாரம் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/sellur-raju-statement-on-former-minister-anwar-raja-controversy-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக